Thursday 21 July 2011

தமிழகம் சுயநிதி எம்.பி.பி.எஸ் : 182 முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு தலா ரூ.1.25 லட்சம் சலுகை

சென்னை : தமிழகத்தில் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் கடந்த கல்வி ஆண்டில் (2010-11) அரசு ஒதுக்கீட்டின் கீழ் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்த 182 முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு தலா ரூ.1.25 லட்சம் திரும்பக் கிடைக்கும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.  


சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் கடந்த கல்வி ஆண்டில் (2010-11) அரசு ஒதுக்கீட்டின் கீழ் பி.டி.எஸ். படிப்பில் சேர்ந்த 169 முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கும் அரசின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து விரைவில் தலா ரூ.40,000 கிடைக்க உள்ளது.  

இவ்வாறு சுயநிதி கல்லூரிகளில் கடந்த கல்வி ஆண்டில் (2010-11) எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். சேர்ந்து, இப்போது இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மொத்தம் 351 முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு அவர்கள் செலுத்திய கல்விக் கட்டணத்தை திருப்பி அளிக்க ரூ.2.95 கோடியை ஒதுக்கி ஓரிரு நாளில் அரசு ஆணை பிறப்பிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.  

சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் ரூ.1.25 லட்சத்தை உள்ளடக்கி, ஆண்டு எம்.பி.பி.எஸ். கட்டணம் ரூ.2.5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் அரசு ஆணையின்படி முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு அவர்கள் செலுத்திய  கல்விக் கட்டணம் ரூ.1.25 லட்சத்தைத் திரும்ப அளிக்கும் வகையில் தமிழக அரசு இப்போது நிதி ஒதுக்கீடு செய்யத் தீர்மானித்துள்ளது. 

இத்தகைய மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கல்விக் கட்டணச் சலுகை தொடர்ந்து அளிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.  

அரசு ஆணை என்ன? 

""அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள், வேளாண்மைக் கல்லூரிகள், கால்நடை மருத்துவக் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள் ஆகியவற்றில் ஒற்றைச் சாளர முறையில் (அரசு ஒதுக்கீட்டில்) சேர்க்கை பெறும் மாணவர்களில், அவர்களது குடும்பத்தில் யாரும் பட்டதாரிகளே இல்லையென்றால் அந்த மாணவர்கள் தொழில்கல்வி படிப்பதை ஊக்குவிக்க சாதிப் பாகுபாடின்றியும், வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமலும் வரும் கல்வி ஆண்டு (2010-11) முதல் அவர்கள் செலுத்த வேண்டிய கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்றுக் கொள்ளும்'' என்று கடந்த தி.மு.க. ஆட்சியில் ஏப்ரல் 16, 2010 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது.  

"வரும் கல்வி ஆண்டு (2010-11) முதல்...' என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால், முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு கல்விக் கட்டணச் சலுகை அளிக்க ஒவ்வொரு ஆண்டும் அரசு ஆணை புதிதாக பிறப்பிக்கத் தேவை இல்லை என்பதைத் தொழில்கல்வி நிறுவனங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தொடர்ந்து கல்விக் கட்டணச் சலுகையை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.  

அரசு மருத்துவக் கல்லூரிகளில்: அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவோருக்கு கல்விக் கட்டணம் ரூ.4,000-த்தை உள்ளடக்கி ஆண்டுக் கட்டணமாக ரூ.12,290 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இதில் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள் செலுத்தும் கல்விக் கட்டணம் ரூ.4,000-த்தை அரசு திரும்பக் கொடுப்பது வழக்கமாக உள்ளது.  

கடந்த கல்வி ஆண்டில் (2010-11) அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். சேர்ந்தவர்களில், 429 மாணவர்கள் முதல் தலைமுறை பட்டதாரி பிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவருக்கும் அவர்கள் செலுத்திய கல்விக் கட்டணம் ரூ.4,000 திரும்ப அளிக்கப்பட்டுள்ளது. 

நடப்புக் கல்வி ஆண்டில் (2011-12) எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்த 20,123 மாணவர்களில், 7,565 பேர் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள் பிரிவில் விண்ணப்பித்தனர். இவர்களில் 420 பேர் முதல் கட்ட எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் பங்கேற்று எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர அனுமதிக் கடிதம் பெற்றுள்ளனர். 

எனவே, 420 மாணவர்களுக்கு கல்விக் கட்டணச் சலுகை ரூ.4,000 திரும்பக் கிடைக்கும்.  இதே போன்று நடப்புக் கல்வி ஆண்டில் (2011-12) சுயநிதி அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு முதல் கட்ட கலந்தாய்வில் 71 பேர் அனுமதிக் கடிதம் பெற்றுள்ளனர்; இவர்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளான 6 மாணவர்களுக்கு தலா ரூ.1.25 லட்சம்  அரசு நிதி ஒதுக்கீடு மூலம் அடுத்த கல்வி ஆண்டில் (2012-13) கிடைக்கும். 

வரும் 28-ம் தேதி முதல் நடைபெற உள்ள இரண்டாம் கட்ட எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் பங்கேற்று, அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களில் சேரும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கும் கல்வி கட்டணச் சலுகை கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment