Thursday 19 May 2011

சொந்தமாக வக்கீல் வைக்க வசதியில்லாதவர்களுக்கு...

எந்த வழக்காக இருந்தாலும் சொந்தமாக நடத்த வசதி இல்லாதவர்களுக்காக அரசாங்கம் ‘லீகல் எய்டு செல்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் பத்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இருப்பார்கள். வசதி இல்லாதவர்களுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடி வெற்றித்தேடித் தருவார்கள். சென்னையில் வசிப்பவராக இருந்தால் ‘செகரட்டரி, லீகல் எய்டு செல், உயர்நீதிமன்றம் சென்னை-1’ என்ற முகவரிக்கும், வெளியூரில் வசித்தால் செகரட்டரி, லீகல் எய்டு செல், மாவட்ட நீதிமன்றமென்ற முகவரிக்கும் கடிதம் எழுதுங்கள். செகரட்டரி உங்களை அழைத்து விசாரிப்பார். வழக்கு நியாமானது; வசதி இல்லாதவர் என்று தெரிந்தால் அவரே வக்கீல் ஏற்பாடு செய்வார். செலவுகளை ‘லீகல் எய்டு செல்’ ஏற்றுக்கொள்ளும்.



ஊழல் குறித்த தகவல் கொடுப்போரை பாதுகாக்கும் சட்டம், நடைமுறையில் ஊழலை தடுக்குமா?

இந்தியாவில் ஆண்டு தோறும் நடைபெறும் ஊழல்களில் சுமாராக எவ்வளது தொகை புரளும் என்று எப்போதாவது எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா?




ஒரு ஆண்டில் இந்தியாவில் நடைபெறும் ஊழல்களில் கையாளப்படும் தொகை 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய்களை தாண்டிவிட்டதாக ஒரு அண்மை புள்ளிவிவரம் கூறுகிறது!

எந்தெந்த துறைகளில் ஊழல் நடைபெறுகிறது என்பதை கண்டுபிடிப்பது ஒன்றும் கடினம் அல்ல. எந்தெந்த துறைகளில் ஊழல் நடைபெறவில்லை என்று கண்டுபிடிப்பதுதான் கடினமாக இருக்கும்.


கல்வி உரிமைச் சட்டமும் விதிகளும்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆங்கில நாவலாசிரியர் சார்லஸ் டிக்கென்ஸ் சமூக அவலங்களைக் கதைப் பொருளாகக் கொண்டு தனது படைப்புகளை அமைத்தார். அவர் எழுதிய பிரபல நாவல்களான (Oliver Twist, Dotheboys' Hall, David Copperfield) ஆகியவை குழந்தைகளின் மீது ஏவப்படும் வன்கொடுமைகளை விவரித்தன. அந்நாட்டு மக்களது மனசாட்சி உறுத்திட குழந்தைகள் சார்பான பல சட்டங்கள் இயற்றப்பட்டன. அவற்றில் ஒன்று 1870ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட கட்டாயக் கல்விச் சட்டம். அதனையட்டி, இந்திய நாட்டிலும் தலைவர்கள் கட்டாயக் கல்வி கொண்டு வர வேண்டுமென்று வற்புறுத்தினர். ஆங்கில அரசு அவற்றையேற்க மறுத்தது. இருந்தபோதிலும் பரோடா, திருவாங்கூர் போன்ற சில சமஸ்தானங்கள் தங்கள் பகுதியில் கட்டாயக் கல்விக்கு ஏற்பாடு செய்தனர்.




விடுதலை வீரர் வித்தல்பாய் பட்டேல் அன்றைய பம்பாய் நகரத்தில் 1917ஆம் ஆண்டு கட்டாயக் கல்வியை நடைமுறைப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து மாகாணங்கள் பலவும் சட்டங்கள் இயற்றினர். ஒன்றுபட்ட சென்னை மாகாணத்தில் ஆரம்பக் கல்விச் சட்டத்தை 1920ஆம் ஆண்டில் நிறைவேற்றி செயல்படுத்தத் தொடங்கியது வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாகும். ஆனால் கல்வி இலவசமல்ல. கட்டணம் கட்ட இயலாதவர் பெரும்பான்மையோர் ஆனதால் கல்வி பரவலாக அனைத்து மக்களையும் சென்று அடையவில்லை. விடுதலை இயக்கத்தில் இலவசக் கட்டாயக் கல்வி ஒரு முக்கிய இடம் கொண்டிருந்தது. விடுதலை பெற்ற பின்னர் அமைக்கப்பட்ட அரசியல் சட்ட நிர்ணய சபையின் நகல் சட்டத்தில் இலவச, கட்டாயக் கல்வி ஒரு அடிப்படை உரிமையாக இடம் பெற்றது. ஆனால் நிதி, பிற ஆதாரங்கள் போதாமையை காரணம் கட்டி அதனை அரசியல் சட்டத்தின் நெறிக் கொள்கைப் பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் பத்தாண்டுகட்குள் அடையப் பெற வேண்டிய இலக்காக அறிவிக்கப்பட்டது. குடியரசாக 1950இல் பிரகடனப்படுத்தப்பட்டும் இன்று வரையில் கல்வி அனைவருக்கும் வழங்கப்படாது உள்ளது.



அரசுகளின் மெத்தனப் போக்கைக் கண்டித்து உச்ச நீதிமன்றம் 1993ஆம் ஆண்டில் உண்ணிக்கிருஷ்ணன் வழக்கில் கண்ணியமான வாழ்க்கைக்கு கல்வி அவசியம் என்று கூறி பதினான்கு வயது வரையில் உள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் இலவசக் கட்டாயக் கல்வியை ஒரு அடிப்படை உரிமையாக அறிவித்தது . இதற்குத் தேவையான அரசியல் சட்டத் திருத்தம் 2005ஆம் ஆண்டில் ஷரத்து 21ஏ என்ற புதிய ஷரத்தை நாடாளுமன்றம் இயற்றியது. கல்வியை அரசு நிர்ணயித்த வண்ணம் வழங்க வகை செய்ததால் இது ஒரு நிபந்தனைக்குட்பட்ட உரிமையாகவே அமைந்துள்ளது முழு உரிமையல்ல என்பது ஆளும் வர்க்கத்தினருக்கு ஏழை எளியவர்க்குக் கல்வி அளிக்க தயங்குவதைப் பார்க்கலாம். நமது அரசியல் சட்டத்தில் நிபந்தனைக்குட்பட்ட உரிமையாக அறிவிக்கப்பட்டுள்ளது கல்வி உரிமை ஒன்றே என்பது வெட்கக்கேடு. கல்வி உரிமைச் சட்டத்தில் நிறைகள் சில, குறைகள் பல. சட்டம் இயற்றியவர்களுக்கு இந்திய கிராமப் புறங்களைப் பற்றிய புரிதல் மிகக் குறைவு என்பது புலப்படுகின்றது.



ஆனால் இதனைத் தொடக்கமாகக் கொண்டு சீரிய மாற்றங்களைக் கொணர முற்பட வேண்டும். கல்வி உரிமைச் சட்டம் பணக்கார இந்தியா, ஏழை இந்தியா ஆக இரு வகை இந்தியாக்களை அங்கீகரித்துள்ளது. பள்ளிகளில் இவ்வேறுபாடுகளை ஏற்படுத்தி பாகுபாடுகளை நிரந்தரப்படுத்துவது நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் ஆபத்தானது. பள்ளிகள் சமத்துவத்தை உருவாக்கும் ஒரு பயிற்சி நிலையம் என்ற கோட்பாடு காற்றில் விடப்பட்டுள்ளது. கட்டணப் பள்ளிகள் அருகில் உள்ள நலிந்தவர்க்கு 25% இடம் ஒதுக்க வேண்டும் என்பது சமத்துவத்தை உருவாக்காது. அவ்விலவச இடங்களுக்கானத் தொகையை அரசு அந்நிறுவனங்களுக்கு வழங்கும் என்பது மக்கள் பணத்தை கல்வி வணிகர்களுக்கு வாரிவழங்குவதாகும் தொழில் நிறுவனங்கள் தங்கள் கணக்கு விவரங்களை ஊடகத்தில் வெளியிட வேண்டும் என்பது சட்டம். ஆனால் கல்வி வணிகர்களது கணக்கு வழக்குகள் அரசின் தணிக்கைக்கும் உட்படாது, அவற்றை வெளியிடவும் இடமில்லை.



இக்குறை நீக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு பள்ளியும் தங்கள் வரவு செலவு அறிக்கையை வெளியிட வகை செய்தல் வேண்டும். உண்மையில் சட்டத்தின் பயன்கள் மக்களைச் சென்றடைய வேண்டுமெனில் தேவையான நிதி ஒதுக்கீடு செய்தல் வேண்டும். நிதிப் பற்றாக்குறை காரணமாக எவ்விதத் தடங்கலும் ஏற்படாதிருக்க நடுவணரசு மாநிலங்களுக்கு போதுமான நிதி வழங்கிட வேண்டும். இது குறித்து நிதிக் கமிஷனிடம் முறையீடு செய்ய வேண்டுமென்று சட்டம் கூறிய பொழுதும் இன்று வரை நடுவணரசு எம்முயற்சியும் எடுக்கவில்லை என்பதும் பல மாநிலங்கள் தங்களால் கூடுதல் நிதி ஒதுக்கிட இயலாதென்பதால் நடுவணரசு நிதி அளிக்கும் வரை சட்டத்தை அமல் செய்ய மாட்டோம் என்று சொல்வதும் சட்டம் வந்தும் பயனேதும் இல்லை என்பதே நிலை.



இயன்றவரை தாய்மொழிவழியில் கல்வி அளிக்க வேண்டுமென்று சட்டம் கூறுகையில் தாய்மொழிவழிக் கல்வியினின்று யார் விலக்கு பெறுவார்கள், அவர்கள் வட்டார மொழியில் கற்பார்களா அல்லது அயல் மொழிவழியில் கல்வி பெறவே இந்த விதித் தளர்ச்சி இடம் பெற்றுள்ளதோ என்பது தெளிவாக்கப்பட வேண்டும் சட்டம் பல பொறுப்புகளை உள்ளூர் பஞ் சாயத்துகளுக்குக் கொடுத்துள்ளது. ஆனால் அவை எவ்வாறு அப்பணிகளை மேற்கொள்ள முடியும் என் பதைப் பற்றி சிந்தித்ததாகத் தெரியவில்லை. தமிழ்நாடு நகல்விதிகளில் பஞ்சாயத்துகள் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டு அரசு அதிகாரிகளிடம் அனைத்துப் பொறுப்புகளையும் அளித்துள்ளது மக்கள் சக்திக்கு விரோதமானதாகும்.



சுருங்கக்கூறின் சட்டம் எளியவர்க்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டுமென்றால் நிறைய மாறுதல்கள் தேவைப்படும். அதற்கு வேண்டிய அரசியல் உறுதி இன்றைய ஆளும் கட்சிக்கு இல்லாததால் மக்கள் விழித்தெழுந்து போராடத் தயாராக வேண்டும்.

சென்னை மெரினா கடற்கரையில் காணாமல் போன சிறுமி தமன்னா மீட்பு (அல்ஹம்துலில்லாஹ்)

சென்னை, மே.19-  
சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் சையது நூர் முகமது. இவர் அதே பகுதியில் மெடிக்கல் ஷாப் வைத்து உள்ளார். இவருடைய மனைவி ஹசீனா. இவர்களுக்கு 5 வயதில் இரட்டை குழந்தைகள் தமன்னா, ரிகாத் உள்ளனர். கடந்த 11-ந் தேதி தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஹசீனா மெரினா கடற்கரைக்கு சென்றார். அப்போது சிறுமி தமன்னா கடற்கரை கூட்டத்தில் மாயமாகி விட்டார். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் தனிப்படை அமைத்து சிறுமியை தேடி வந்தனர். இந்தநிலையில் சிறுமி தமன்னா இன்று மீட்கப்பட்டார். சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீண்ட வருடங்களுக்கு பிறகு !!!

முத்துப்பேட்டை பெரியகடை தெருவில் நீண்ட வருடங்களுக்கு பிறகு சாலைகள் புதுபிக்கபட்டுள்ளன ......
ஜாமியா பள்ளி சந்து 


ஜெஸிமா டிராவல்ஸ் எதிர்புறம் 


பெரியகடை தெரு 


பெரியகடை தெரு 


இஸ்லாத்தை அறிவோம் - பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் பயிற்சி முகாம்


காரைக்கால்: இன்றைய முஸ்லிம் சமூகத்தில் சீர்கேடுகள் மிகைத்து கிடக்கின்றது. இத்தகைய சூழ்நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தமிழகம் முழுவதும் இஸ்லாம் சம்பந்தமான பயிற்சி முகாம்களை நடத்த இருக்கின்றது. இதன் ஒரு பகுதியாக வருகின்ற 22.05.2011 ஞாயிற்றுகிழமை அன்று மாலை 4.30மணி அளவில் ஷமீரா மஹால், காமராஜர் சாலை, காரைக்காலில் "இஸ்லாத்தை அறிவோம்" என்ற தலைப்பில் ஒரு முழுமையான இஸ்லாமிய பயிற்சி முகாம் நடைபெற இருக்கின்றது.

இந்த பயிற்ச்சி முகாமில் கீழ் கண்ட முக்கிய விஷயங்களைப்பற்றிய ஆலோசனைகள் வழங்கப்பட இருக்கின்றன.

1. இஸ்லாம் காட்டித்தந்த முழுமையான வாழ்வியல் நெறியை நாம் எப்படி கடைபிடிப்பது?

2. இன்றைய சமூகத்தில் நடைபெறும் சீர்கேட்டை எப்படி அகற்றுவது?

3. ஒரு முழுமையான இஸ்லாமிய குடும்பத்தை எப்படி நிர்வகிப்பது?

4. தனி மனிதனின் மாற்றமே சமூகத்தின் மாற்றம் போன்ற நல்ல தலைப்புகளில் இஸ்லாமிய பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

ஆகவே ஆண்களும், பெண்களும், பெருதிரளாக கலந்து கொண்டு சமூகத்தின் மாற்றத்திற்காக இஸ்லாத்தை தூய வடிவில் அறிந்து நம் வாழ்வில் நடைமுறைப்படுத்த அழைக்கிறது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, காரைக்கால் மாவட்டம்.
பெண்களுக்கு தனி இடவசதி செய்துதரப்பட இருக்கின்றது.

அன்போடு அழைக்கிறது

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
காரைக்கால் மாவட்டம்,  தொடர்புக்கு:  99949 46364



நன்றி : ஹார்பார் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கிளை....

அமெரிக்காவை கண்டுபிடித்தது சீன முஸ்லிம்கள்!!



May 19, நீர்மூழ்கி தொழில்நுட்ப வல்லுனரும், வரலாற்றாசிரியருமான பிரிட்டனை சார்ந்த கவின் மென்சிஸ் (Gavin Menzies), கடந்த 2002 ஆம் ஆண்டு, மார்ச் 15 தேதி, தன்னுடைய கோட்பாடு பற்றிய உரையை இலண்டன் இராயல் புவியியல் சங்கத்தில் முன்வைத்தார்.
அவருடைய உரை அங்கிருந்தவர்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்க வேண்டும். காரணம், அவருடைய கோட்பாடு ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் அது வரலாற்றையே மாற்றியமைப்பதாய் அமையும்.

அப்படி என்ன வாதத்தை வைத்தார் அவர்? கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிப்பதற்கு சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்னரே (1421), சீன முஸ்லிம் கடல்வழி ஆய்வாளரான ஷெங் ஹி (Zheng He,) அமெரிக்காவை கண்டுபிடித்து விட்டார் என்ற தகவல் தான் அது.

சீன முஸ்லிம்கள் கடல்வழி ஆராய்ச்சியில் செய்த பங்களிப்புகள் இன்றளவும் நிலைத்து நிற்கின்றன. சீன வரலாறு முழுக்க ஷெங் ஹி போன்ற முஸ்லிம்கள் தங்கள் மண்ணிற்கு செய்த பங்களிப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.

சீனாவை பொறுத்தவரை இனம் சார்ந்தே மக்கள் தொகை கணக்கெடுக்கப்படுகின்றது. இதுவரை 56 இனங்கள் சீன அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஹன் (Han) இன மக்களே பெரும்பான்மையினர் (91%). மீதமுள்ள 55 இனத்தவர் சிறுபான்மையினர். இந்த 55-ல் பத்து இனத்தவர்கள் முஸ்லிம்கள்.

இந்த பத்து முஸ்லிம் இனத்தவரில் பெரும்பான்மையாக இருக்கக்கூடியவர்கள் உய்குர் (Uyghur or Uighur) மற்றும் ஹுய் (Hui) இனத்தவர்கள். இன்றைய சீனாவின் முஸ்லிம் மக்கள் தொகை, சுமார் 8 கோடியில் இருந்து 10 கோடி வரை இருக்கலாமென்று தகவல்கள் கூறுகின்றன. சீனாவின் மக்கள் தொகையில் இருபதில் ஒரு பங்கு தான் முஸ்லிம்கள் என்றாலும், சீனாவின் நிலப்பரப்பில், ஆறில் ஒரு பங்கில் முஸ்லிம்களே பெரும்பான்மையினர்.

அதிசயம் : ஒரே மேடையில் பரத்வாஜ் - எடியூரப்பா




பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றாக பங்கேற்றனர் பரத்வாஜ் - எடியூரப்பா. மோதல் நீடிக்கும் நிலையில் பரத்வாஜ் - எடியூரப்பா ஒரே மேடையில் தோன்றினர்.    

விழாவுக்கு வந்த ஆளுநரை வாயிலுக்கே சென்று வரவெற்றார் முதல்வர் எடியூரப்பா.    விழாவில்
எடியூரப்பாவை புகழ்ந்து பேசி திகைப்பில் ஆழ்த்தினார் ஆளுநர் பரத்வாஜ்    


எடியூரப்பா தமது சிறந்த நண்பர் என்றும்,  விழாவில் ஆளுநர் பரத்வாஜ் புகழாரம் சூட்டியுள்ளார்.




பரத்வாஜூக்கும் எடியூரப்பாவிற்கும் மோதல் நீடித்து வந்த நிலையில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படும்கர்நாடக கவர்னரை ஜனாதிபதி திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை விடுட்திருந்தார்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் ஒரே மேடையில் தோன்றியிருப்பது அதிசம் என்று வியக்கிறார்கள் கர்நாடகமக்கள்.

25 காசுக்கு டாட்டா பை பை!!



MAY 19 டெல்லி , 25 காசு நாணயம் வரும் ஜூலை மாதத்திலிருந்து செல்லாது. ஜூன் மாத இறுதிக்குள் இப்போதுள்ள 25 பைசா நாணயங்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

25 காசு நாணயம் ஜூன் 30க்குப் பிறகு செல்லாது. எனவே, மக்கள் தங்களிடமுள்ள 25 காசு நாணயங்களையும், அதற்கும் கீழுள்ள மதிப்புள்ள நாணயங்களையும் ரிசர்வ் வங்கியில் மாற்றிக் கொள்ளலாம்.

அல்லது அந்த நாணயங்களை அரசுடைமை வங்கிகளின் சிறு நாணய பரிவர்த்தனையில் ஈடுபடும் கிளைகளில் மாற்றிக் கொள்ள வேண்டும். ஜூன் 29 ம் தேதி வங்கி அலுவலக நேரம் முடியும்வரை இவற்றை மாற்றிக் கொள்ள முடியும். இதை ரிசர்வ் வங்கி செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

தே.மு.தி.க.,வுக்கு தேர்தல் கமிஷன் அங்கீகாரம்: சின்னத்தை இழக்கிறது பா.ம.க.,


சட்டசபை தேர்தலில் கிடைத்த ஓட்டு சதவீதங்களின் அடிப்படையில், தே.மு.தி.க.,வுக்கு தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் கிடைக்க உள்ளது. அதே நேரத்தில், அங்கீகாரத்தையும், சின்னத்தையும் பா.ம.க., இழக்க உள்ளது.

தமிழக அரசியலில், தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் பெற்ற தேசியக் கட்சிகள் தவிர, மாநில கட்சிகளில் தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும் மட்டுமே இருந்தன. தற்போது நடந்துள்ள சட்டசபை பொதுத் தேர்தலில், ம.தி.மு.க., போட்டியிடாததால், அதற்கு மீண்டும் அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பில்லை. பா.ம.க., இந்த தேர்தலில், 30 தொகுதிகளில் போட்டியிட்டு, மூன்றில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், ஓட்டு சதவீதம், 5.23 தான் உள்ளது. 6 சதவீத ஓட்டுகளை பெற்றிருந்தால், அங்கீகாரத்தை தக்க வைத்திருக்க முடியும். அதேநேரத்தில், 29 தொகுதிகளில் வென்ற தே.மு.தி.க.,வுக்கு அங்கீகாரமும், சின்னமும் கிடைக்க உள்ளது. தே.மு.தி.க., 41 தொகுதிகளில் போட்டியிட்டு, 7.88 சதவீதம் ஓட்டு பெற்றுள்ளது. தேர்தல் கமிஷனின் விதிப்படி, அரசியல் கட்சிக்கு அங்கீகாரம் வழங்க, சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அதன்படி, சட்டசபைக்கு நடந்த பொதுத் தேர்தலில், ஒரு அரசியல் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள், மொத்தம் செல்லுபடியான ஓட்டுகளில், 6 சதவீதத்துக்கு குறையாமல் ஓட்டு பெற்றிருக்க வேண்டும். அத்துடன், சட்டசபைக்கு இரண்டு உறுப்பினர்களாவது தேர்வு பெற்றிருக்க வேண்டும். அல்லது, லோக்சபா தேர்தலில் ஒரு கட்சியின் வேட்பாளர், 6 சதவீதத்துக்கு குறையாமல் ஓட்டுகள் பெற்றிருக்க வேண்டும். அத்துடன், அந்த மாநிலத்தில் நடந்த தேர்தலில் இருந்து, லோக்சபாவுக்கு ஒரு உறுப்பினராவது தேர்வாகி இருக்க வேண்டும். அல்லது, சட்டசபையில் உள்ள மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில், 3 சதவீத இடங்களை பெற்றிருக்க வேண்டும். அல்லது, சட்டசபைக்கு மூன்று உறுப்பினர்கள் தேர்வாகி இருக்க வேண்டும். இதில், எது அதிகமோ அதை பெற்றிருக்க வேண்டும்.

இந்த நிபந்தனைகளில், ஒரு நிபந்தனை மட்டுமே பா.ம.க., பெற்ற இடங்களுக்கு பொருந்துகிறது. அதாவது, மூன்று எம்.எல். ஏ.,க்களை பெற்றிருக்க வேண்டும் என்பது. ஆனால், அதே விதியில், மொத்த இடங்களில், 3 சதவீத இடங்கள் பெற்றிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால், மொத்தமுள்ள, 234 இடங்களில், 3 சதவீத இடங்களை பா.ம.க., பெற்றிருக்க வேண்டும். எது அதிகமோ அது தான் எடுத்துக் கொள்ளப்படுமென குறிப்பிட்டுள்ளதால், பா.ம.க., வுக்கு தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் ரத்தாகும். எனினும், இது தொடர்பாக அக்கட்சிக்கு முதலில் தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பும். பின்னர், கட்சியின் விளக்கம் கிடைத்த பின், நேரில் அழைத்து விசாரணை நடத்தும். அதன்பின் தான், அங்கீகாரத்தை ரத்து செய்வது குறித்து முடிவெடுக்கும். இந்த தேர்தலில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து உட்பட, பல்வேறு வகைகளில் பலனடைந்துள்ள தே.மு.தி.க., வுக்கு, தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் முதல் முறையாக கிடைக்க உள்ளது. சட்டசபை தேர்தல் தொடர்பாக, தேர்தல் கமிஷன் விதித்துள்ள நிபந்தனைகள் அனைத்தையும் தே.மு.தி.க., பூர்த்தி செய்துள்ளது.