Monday, 27 June 2011

திருத்துறைப்பூண்டி அரசுக் கல்லூரியில் விண்ணப்பப் படிவங்கள் விநியோகம்

 திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் அரசு கலைக் கல்லூரி தொடங்கப்படவுள்ளதையொட்டி, மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்கள் வழங்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
திருத்துறைப்பூண்டி பகுதியில் 10-க்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. ஆனால், இங்கிருந்து தேர்ச்சி பெறும், மாணவர்கள் திருவாரூர், மன்னார்குடி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்லூரிகளை நாடி செல்ல வேண்டிய நிலைமையே இருந்தது.
கல்லூரியில் சேர்ந்தாலும் மாணவர்களுக்கு விடுதியில் இடம் கிடைப்பது மேலும் கடினம் என்பதால், ஏராளமான மாணவ, மாணவிகள் மேல்நிலைப் பள்ளியோடு தங்கள் படிப்பை தொடர முடியாத நிலை இருந்து வந்தது.

இப் பகுதி மக்களும், மக்கள் பிரதிநிதிகளும் திருத்துறைப்பூண்டியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

இதைத்தொடர்ந்து, கடந்த திமுக ஆட்சியில் சட்டப்பேரவை கடைசிக் கூட்டத் தொடரின் போது திருத்துறைப்பூண்டியில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையிலும், அதிமுக அரசு கல்லூரியை நிகழாண்டிலேயே தொடங்க உத்தரவு பிறப்பித்தது.

இதைத்தொடர்ந்து, முன்பு பெண்கள் அரசு மருத்துவமனையாக செயல்பட்ட இடத்தை பாரதிதாசன் பல்கலைக்கழக அலுவலர்களும், வருவாய்த் துறையினரும் தாற்காலிகமாக கல்லூரிக்குத் தேர்வு செய்தனர்.

இதையடுத்து, சனிக்கிழமை முதல் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விண்ணப்பப் படிவங்கள் வழங்கும் பணி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பதிவாளர் டி. ராமசாமி தலைமையில் நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டி தொகுதி எம்எல்ஏ கே. உலகநாதன், குத்துவிளக்கேற்றி வைத்தார். நன்னிலம் தொகுதி எம்எலஏவும், அதிமுக மாவட்டச் செயலருமான ஆர். காம்ராஜ் மாணவ, மாணவிகளுக்கு விண்ணப்பப் படிவங்களை வழங்கினார்.

நிகழச்சியில் கோட்டூர் ஒன்றியக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் வெ. வீரசேனன், திருத்துறைப்பூண்டி ஒன்றியக் குழுத் தலைவர் தமிழ்ச்செல்விராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment