Monday 27 June 2011

சிங்கூரில் விவசாயிகளுக்கு மாற்று இடம்: அரசு நடவடிக்கை

சிங்கூர் : மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் டாடா கார் நிறுவனத்துக்காக கட்டாயப்படுத்தி நிலம் பறிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாற்று இடம் வழங்க மம்தா பானர்ஜி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.


மாற்று இடம் பெற்றுக்கொள்ள விருப்பம் உள்ள விவசாயிகள் விண்ணப்பிக்குமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் சிங்கூரில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மூலம் விநியோகிக்கப்படுவதாக ஹூக்ளி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீபிரியா ரங்கராஜன் தெரிவித்தார்.
மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் நானோ கார் தொழிற்சாலையை அமைக்க டாடா நிறுவனம் திட்டமிட்டது. இதற்காக 997 ஏக்கர் விளைநிலத்தை அப்போதைய கம்யூனிஸ்ட் அரசு விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்தியது. இதற்கு அங்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மம்தா பானர்ஜி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.

இதையடுத்து டாடா நிறுவனம் சிங்கூரில் நானோ கார் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை கைவிட்டது. பின்னர் குஜராத் மாநிலத்தில் தொழிற்சாலையை நிறுவியது.

இந்நிலையில் சட்டப் பேரவைத் தேர்தலில் தனது கட்சி வெற்றி பெற்றால் டாடா நிறுவனத்திடம் உள்ள 997 ஏக்கர் விளைநிலத்தையும் மீட்டு விவசாயிகளுக்கு மீண்டும் அளிப்பதாக மம்தா பானர்ஜி உறுதி அளித்திருந்தார். அவர் சொன்னதுபோல் ஆட்சிக்கு வந்ததும் டாடா நிறுவனம் வசம் உள்ள விளைநிலங்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறார். இதுதொடர்பான வழக்கு மாநில உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இதனால் நிலத்தை மீட்டு விவசாயிகளுக்கு ஒப்படைப்பதில் தாமதம் ஏற்படும் என்று அரசு கருதுகிறது. இதனால் கட்டாயப்படுத்தி நிலம் பறிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாற்று இடத்தை வழங்க அரசு திட்டமிட்டு அதற்கானப் பணியை தொடங்கியுள்ளது.

No comments:

Post a Comment