Monday 27 June 2011

2022ம் ஆண்டிற்குள் அனைத்து அணு மின் நிலையங்களையும் மூட ஜேர்மனி முடிவு

ஜப்பான் புகுஷிமா அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சு பரவியதை தொடர்ந்து ஜேர்மனியில் உள்ள அனைத்து அணு மின் நிலையங்களையும் 2022ம் ஆண்டில் மூடி விட ஏங்கலா மார்கெலின் ஜேர்மனி அரசு முடிவு செய்தது.

அணு உலைகளை முன்னதாக மூட வேண்டும் என கிறீன் கட்சி முதலில் வலியுறுத்தியது. தற்போது அரசின் முடிவை ஏற்பதாக அக்கட்சி சனிக்கிழமை தெரிவித்தது.

பெர்லின் நகரில் அக்கட்சியின் முக்கிய கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 819 பேர் பங்கேற்றனர். இதில் சிலர் 2017ம் ஆண்டிற்கு முன்பாகவே அனைத்து அணு உலைகளையும் மூட வேண்டும் என வலியுறுத்தினர்.

அணு சக்தியை ஜேர்மனி அரசு கைவிடுவது நமக்கு கிடைத்த வெற்றி என கிறீன் கட்சியின் இணை தலைவர் கிளாடியா ரோத் தெரிவித்தார். அணு உலைகளை மூடுவது தொடர்பாக ஏங்கலா மார்கெல் அமைச்சரவை இந்த மாதம் கையெழுத்திட்டது.

ஜேர்மனியில் தற்போது 9 அணு உலைகள் செயல்பாட்டில் உள்ளன. இவை 2015 – 2022ம் ஆண்டு காலகட்டத்தில் மூடப்படும். ஜப்பானில் மார்ச் 11ம் திகதி ஏற்பட்ட அணு விபத்தை தொடர்ந்து ஜேர்மனியின் 7 பழைய அணு உலைகள் உடனடியாக மூடப்பட்டன.

அணு உலைகளை மூடுவதற்கு முன்பாக தங்களிடம் அதன் முடிவை தெரிவிக்கவில்லை என சில ஐரோப்பிய நாடுகள் அதிருப்தி தெரிவித்தன. ஜேர்மனி நடவடிக்கை அருகாமையில் உள்ள பிரான்சை பாதித்தது. ஏனெனில் ஜேர்மனியிடம் இருந்து பிரான்ஸ் மின்சாரம் பெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment