Monday 27 June 2011

சித்த, ஆயுர்வேத படிப்புகளுக்கு விரைவில் விண்ணப்பம்

சென்னை : சித்த மருத்துவம்-ஆயுர்வேதம்-யுனானி மருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை பட்டப் படிப்புகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்களைச் சேர்க்க விண்ணப்பங்கள் விரைவில் விநியோகிக்கப்பட உள்ளன.

சென்னை அரும்பாக்கம், பாளையங்கோட்டையில் அரசு சித்த மருத்துவக் கல்லூரிகள், நாகர்கோவிலில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி, மதுரை திருமங்கலத்தில் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்.


சென்னை அரும்பாக்கத்தில் அரசு யுனானி மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு இயற்கை மருத்துவம்-யோகா மருத்துவக் கல்லூரி உள்ளது குறிப்பிடத்தக்கது.

பி.எஸ்.எம்.எஸ். (சித்த மருத்துவம்), பி.ஏ.எம்.எஸ். (ஆயுர்வேத மருத்துவம்), பி.யு.எம்.எஸ். (யுனானி மருத்துவம்), பி.எச்.எம்.எஸ். (ஹோமியோபதி மருத்துவம்), பி.என்.ஓய்.எஸ். (இயற்கை மருத்துவம் மற்றும் யோகா) ஆகிய பட்டப்படிப்புகளில் மேலே குறிப்பிட்ட அரசு கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்கவும், சுயநிதி கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்களைச் சேர்க்கவும் விண்ணப்பம் வழங்கப்படும்.

மேலே குறிப்பிட்ட இந்திய மருத்துவ முறை அரசு கல்லூரிகளில் ஜூலை முதல் வாரத்துக்குள் விண்ணப்ப விநியோகம் தொடங்கும். விண்ணப்பக் கட்டணம் ரூ.500.

கலந்தாய்வு எப்போது? இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு அரசு கல்லூரிகளில் 296 இடங்களும் சுயநிதி கல்லூரிகளில் 1030 அரசு ஒதுக்கீட்டு இடங்களும் உள்ளன.

அரசு கல்லூரிகளில் ஆண்டுக் கட்டணம் ரூ.5,000. சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆண்டு கல்விக் கட்டணம் படிப்புக்கு ஏற்ப ரூ.25,000 முதல் ரூ.33,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment