Monday, 27 June 2011

மத்திய அமைச்சரவையில் எங்களுக்கு இடம் தந்தது தப்பு இளையவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்க வேண்டும்: ப.சிதம்பரம்

நான் உள்பட 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் தரக் கூடாது. எங்களுக்குப் பதில் இளையவர்களை அமைச்சரவையில் சேர்க்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.



தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள சிறப்புப் பேட்டியில், அமைச்சரவையில் 40 வயது, 50 வயதானவர்கள் தான் இடம் பெற வேண்டும். நான் உள்பட 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் விலகி நிற்க வேண்டும். இளைய தலைமுறை மீதும், இளம் அரசியல்வாதிகள் மீதும் எனக்கு நம்பிக்கை அதிகம் உண்டு என்றார்.

ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்று கூறி வரும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங்கின் கருத்துடன் உங்கள் கருத்து ஒத்துப் போவதாக சொல்லலாமா என்று கேட்டதற்கு பதிலளித்த சிதம்பரம், நான் அந்த விஷயத்தைப் பற்றியே பேசவில்லை. ஒவ்வொரு தலைமுறையும் ஒரு தலைவரைத் தருகிறது. ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு பிரதமர் பதவிக்குத் தகுதியான நபர் கிடைக்கிறார். ராகுல் காந்தி உரிய நேரத்தில் பிரதமரானால் காங்கிரஸ் கட்சி மிகவும் மகிழ்ச்சியடையும் என்றார்.

பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சி குறித்த கேள்விக்கு பதிலளித்த சிதம்பரம், பிரதமர் மன்மோகன் சிங் இந்த நாட்டை 7 ஆண்டுகளாக மிகச் சிறப்பாக ஆண்டு வருகிறார். அவரது வழிகாட்டுதலில் பல வெற்றிகளையும் சில பிரச்சனைகளையும் சந்தித்து இருக்கிறோம். ஆனால், இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம் என்பதே உண்மை. இந்தக் கருத்தை பிரதமரும் காங்கிரஸ் தலைவர் சோனியாவும் ஏற்பார்கள் என்றே நினைக்கிறேன் என்றார்.

நீங்கள் பிரதமராக விரும்புகிறீர்களா என்ற கேள்விக்கு, எனது மிச்சமுள்ள காலத்தை எப்படி செலவிட வேண்டும் என்பதை நான் அறிவேன். நான் நிறைய படிக்க விரும்புகிறேன். நிறைய பயணம் செய்ய ஆசைப்படுகிறேன். அதைவிட மேலாக எழுதவும் விரும்புகிறேன். எனக்குள் ஒரு எழுத்தாளனும் இருக்கிறார். அருந்ததி ராய் மாதிரி எழுத என்னாலும் முடியும். அருந்ததியின் கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடே கிடையாது, ஆனால், அவரது எழுத்து நடையை ரசிப்பவன் நான் என்றார்.

விரைவில் நடக்கவுள்ள அமைச்சரவை மாற்றத்தின்போது உள்துறை அமைச்சர் பதவியை தொடர்ந்து வைத்திருக்க ஆசைப்படுகிறீர்களா என்ற கேள்விக்கு, எனக்கு வேறு வழி இருக்கிறதா... எனக்கு வேறு சாய்ஸ் இல்லை என்றே நினைக்கிறேன். இதைப்பற்றி முடிவு செய்ய வேண்டியது இருவர். ஒருவர் காங்கிரஸ் தலைவர். இன்னொருவர் பிரதமர். அவர்களது முடிவுகளை நான் எப்போதும் ஏற்பவன். இந்த நாளோடு நான் உள்துறை அமைச்சர் பதவிக்கு வந்து இரண்டரை வருடங்கள், 25 நாட்கள் ஆகிவிட்டன என்றார் சிதம்பரம்.

அமைச்சரவை மாற்றத்தின்போது சிதம்பரத்தின் இலாகாவும் மாற்றப்படக் கூடும் என்று டெல்லியில் கிசுகிசுக்கள் பரவியுள்ள நிலையில் அவரது இந்தப் பேட்டி மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

No comments:

Post a Comment