இங்கிலாந்தில் கடந்த 168 ஆண்டுகளாக வெளிவந்த பிரபல பத்திரிக்கை நியூஸ் ஆப்
தி வேர்ல்டு. கடந்த சில ஆண்டுகளாக போன் ஒட்டு கேட்பு மூலம் பரபரப்பு
செய்திகளை வெளியிட்டது அம்பலமானது.
இந்த விவகாரம் நாடாளுமன்றம் வரை
சென்றதால் தீவிர விசாரணை நடந்தது. போலிசாருக்கு பல கோடிகளை லஞ்சமாக
கொடுத்து போன் ஒட்டு கேட்பு வேலையில் நியூஸ் ஆப் தி வேர்ல்டு பத்திரிக்கை
ஈடுபட்டது தெரிந்தது. இந்த குற்றச்சாட்டை அடுத்து நியூஸ் ஆப் தி வேர்ல்டு
பத்திரிகை நிறுவனத்தை மூடுவதாக அதன் அதிபர் ரூபர்ட் முர்டோக் அறிவித்தார்.
இந்த குற்றச்சாட்டில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டனர். ரூபர்ட்
முர்டோக்கின் நியூஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக
இருந்த ரெபாகா ப்ரூக்ஸ்(43) லண்டனில் நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.
இவ்விவகாரத்தில் ஸ்காட்லாந்து யார்டு புலனாய்வு போலிசாரும்
சம்பந்தப்பட்டிருப்பதால் இதற்கு தார்மீக பொறுப்பேற்று லண்டன் போலிஸ்
கமிஷனர் பால் ஸ்டீபன்சன் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்துள்ளார்.
மேலும் பத்திரிகையின் முன்னாள் எக்ஸிகியூட்டிவ் எடிட்டர் நீல் வாலிஸ்
என்பவரை சில காலம் போலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் தொடர்பு ஆலோசகராக போலிஸ் கமிஷனர் பால் ஸ்டீபன்சன் நியமித்திருந்தார்.
போன் ஒட்டு கேட்பு விவகாரத்தில் நீல் வாலிசும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனால் தர்மசங்கடமான நிலைக்கு ஆளான பால் ஸ்டீபன்சன் தனது பதவியை ராஜினாமா
செய்தது தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment