Tuesday 19 July 2011

சென்னையில் 200 அடுக்குமாடி கட்டிடங்கள் இடிக்கப்படுகிறது: பெருநகர வளர்ச்சிக்குழுமம் நோட்டீசு

சென்னை : அனுமதியின்றியும், விதிமுறைகளை மீறியும் கட்டப்பட்டுள்ள சுமார் 200 வணிக நிறுவன கட்டிடங்களை இடிப்பதற்கு நோட்டீஸ் அனுப்ப பெருநகர வளர்ச்சிக்குழுமம் முடிவு செய்துள்ளது.

சென்னை நகரில் அனுமதியின்றி விதிமுறையை மீறி கட்டி உள்ள கட்டிடங்கள் பெரும் பிரச்சினையாக உள்ளது. விதியை மீறி கட்டியுள்ள கட்டிடங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதற்காக உயர்நீதிமன்றம் ஆய்வு குழுவை அமைத்தது. இந்த குழுவினர், ஆய்வு செய்து விதிமுறை மீறிய கட்டிய கட்டிடங்கள் பற்றிய பட்டியல் தயாரித்தனர். 

இந்நிலையில் 2007-க்கு முன்னர் கட்டிய கட்டிடங்களை இடிப்பதை தவிர்ப்பதற்காக ஒரு அவசர சட்டத்தை அரசு கொண்டுவந்தது. மேலும் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கிலும் உயர்நீதிமன்றம் நியமித்த குழு நடவடிக்கைக்கு தற்காலிக தடைவிதிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் தடை நீக்கப்பட்டு விட்டது. கால நீட்டிப்பு செய்யப்பட்ட அவசர சட்டமும் வருகிற 27ஆம் தேதியுடன் முடிகிறது. இதையடுத்து பெருநகர வளர்ச்சி குழுமத்தில் குழுவினர் கூடி விவாதித்தனர்.

அனுமதியின்றியும், விதிமுறைகளை மீறியும் கட்டப்பட்டுள்ள சுமார் 200 வணிக நிறுவன கட்டிடங்களை இடிப்பதற்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளனர். இதில் பெருவாரியான கட்டிடங்கள் தியாகராயநகர், உஸ்மான் ரோடு பகுதியில் உள்ளன. 

சென்னையில் கட்டிடங்கள் கட்டுவதற்கு கடுமையான விதிமுறைகள் உள்ளன. தரைதளம், அதற்கு மேல் 2 மாடிகள் வரை கட்டுவதற்கு மாநகராட்சியிலும், பலமாடி கட்டிடங்கள் கட்ட பெருநகர வளர்ச்சி குழுமத்திலும் அனுமதி வழங்கப்படுகிறது.

வணிக நிறுவனங்கள் கட்டும்போது 1000 சதுர அடிக்கு ஒரு கார்பார்க்கிங் வசதி, கட்டிடத்தின் முன்புறம் மற்றும் பக்கவாட்டில் காலி இடங்கள் விடுவது என்று பலவிதிமுறைகள் உள்ளன. ஆனால் அதை யாரும் பின்பற்றுவது கிடையாது. விதிமுறையை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் 30 ஆயிரத்துக்கும் மேல் இருப்பது தெரியவந்துள்ளது.

அடுக்குமாடி கட்டிடங்கள் ஓரிரு நாட்களில் கட்டிவிட முடியாது. பல மாதங்கள் பணி நடைபெறும். அப்போது எல்லாம் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. எல்லா வார்டுகளிலும் இளநிலை உதவி பொறியாளர், உதவி பொறியாளர், செயற்பொறியாளர் என்று பல அதிகாரிகளின் கண்காணிப்பு வளையம் உள்ளது.

விதியை மீறி கட்டப்படும் கட்டிடங்களை அதிகாரிகள் கண்டு கொள்ளாதது ஏன்? என்று பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்த உடனேயே கட்டலாம் என்ற விதியும் உள்ளது. இதை பயன்படுத்தி பலர் முறைகேடாக கட்டிடங்களை கட்டுவதாக கூறப்படுகிறது.

இதுபற்றி மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் சைதை ரவி கூறும்போது, இடநெருக்கடி காரணமாக சென்னையில் கட்டிடங்கள் கட்டுவதற்கான விதிமுறைகளை தளர்த்த வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் கட்டிடங்கள் கட்டும்போது அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். ஆரம்பத்திலேயே தடுத்து விட்டால் இடிப்பு, கோர்ட்டு வழக்கு என்று பல பிரச்சினைகளை தவிர்க்கலாம் என்றார்.

No comments:

Post a Comment