Tuesday, 19 July 2011

கடன் பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் அமெரிக்கா: ஒபாமா கவலை

அமெரிக்கா தனது கடன் உச்சவரம்பை எட்டிவிட்ட நிலையில் அந்த உச்சவரம்பை மேலும் அதிகரிப்பது குறித்து அந்நாட்டு காங்கிரஸ் சபையில் இன்று ஓட்டெடுப்பு நடக்க உள்ளது.

இந்த உச்சவரம்பு அதிகரிக்கப்படாவிட்டால் அமெரிக்கா தனது கடன்களைத் திருப்பியளிக்க முடியாமல் போய்விடும். அதனால் இந்தியா, சீனா உள்ளிட்ட உலக நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.


அமெரிக்கா வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டில் வாங்கிய கடன் தொகை கடந்த மே மாதம் 14.3 டிரில்லியன் டாலரைத் தொட்டது. இது தான் அமெரிக்காவின் கடன் உச்சவரம்புத் தொகை.

இதையடுத்து அந்நாட்டு நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் ஆகஸ்ட் 2ம் தேதிக்குள் கடன் உச்சவரம்பு மாற்றியமைக்கப்படாவிட்டால் நாடு நிதி நெருக்கடியைச் சந்திக்கும் என்று எச்சரித்திருந்தது. (1 டிரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடி. 1 டிரில்லியன் டாலர் என்பது ஒரு லட்சம் கோடி  டாலர்).

கடந்த ஒரு வார காலமாக வெள்ளை மாளிகையில் அதிபர் பராக் ஒபாமா தலைமையில் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையைச் சேர்ந்த எம்.பி.க்களுடன் ஐந்து முறை ஆலோசனைகள் நடந்தன.

அதில் கடன் உச்சவரம்பு அதிகரிக்கப்பட வேண்டும், நாட்டின் எண்ணெய் நிறுவனங்கள் உள்ளிட்ட வளமான அமெரிக்கர்களின் வரி அதிகரிக்கப்பட வேண்டும் என அதிபர் ஒபாமா கூறினார்.

ஆனால் எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி எம்.பி.க்கள்,"கடன் உச்சவரம்பை அதிகரிக்க வேண்டுமானால் வரியை அதிகரிக்கக் கூடாது. அரசின் செலவினங்களைப் ஆண்டுக்கு 111 பில்லியன் டாலர் வீதம் குறைக்க வேண்டும்" என நிபந்தனை விதித்தனர். இதனால் ஐந்து கட்ட ஆலோசனையில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை.

கடன் உச்சவரம்புத் தொகையை அதிகரிக்க வேண்டுமானால் அமெரிக்க அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்ய வேண்டும். இதற்கான தீர்மானத்தை இம்மாதம் 22ம் தேதிக்குள் எடுக்க வேண்டும், அதையடுத்து சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் மொத்தத்தில் அனைத்து நடவடிக்கைகளையும் ஆகஸ்ட் 2ம் தேதிக்குள் முடித்து விட வேண்டும் என்று ஒபாமா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் செலவினங்களைக் குறைத்து கடன் உச்சவரம்பை அதிகரிப்பதற்காக சட்டத் திருத்தத்திற்கு வழி செய்யும் "கட், கேப் அண்டு பேலன்ஸ்" என்ற மசோதாவை எதிர்க்கட்சியின் மூத்த தலைவரும், பிரதிநிதிகள் சபை சபாநாயகருமான ஜான் பாய்னர் கொண்டு வர உள்ளார்.

இம்மசோதா நிறைவேறுமானால் ஒபாமா அரசு குடியரசு கட்சிகளின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டதாகும். மேலும் செனட் சபையில் அரசு சார்பில் மசோதா கொண்டு வர முடியாது.

இதனால் அவருக்கு பெரும் அரசியல் நெருக்கடி ஏற்படும். இந்த மசோதாவை நிறைவேறவிடாமல் அரசின் மசோதாவை வெற்றி பெற செய்யும் முயற்சியில் ஒபாமா உள்ளார். இது நடக்கையில் அரசு மசோதா நிறைவேறாதவாறு அபாய நிலை ஏற்படும் குழப்பமான சூழ்நிலை உள்ளது.

No comments:

Post a Comment