திருச்சி, ஜூலை 18: திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஹோட்டல்
ஒன்றை மிரட்டி அபகரித்ததாக, முன்னாள் அமைச்சர் கே.என். நேரு, துணை மேயர் மு.
அன்பழகன் உள்ளிட்ட 11 பேர் மீது திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் புகார்
அளிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் கே. கதிர்வேல், திருச்சி மாநகர காவல்
ஆணையர் இ.மா. மாசானமுத்துவிடம் திங்கள்கிழமை அளித்த புகார் மனு:
"2005-ம் ஆண்டு
திருச்சியில் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஹோட்டல் ஒன்றை அதன்
உரிமையாளர்கள் ஆர். குரு சங்கர நாராயணன், ஆர். சங்கரிதேவி, ஆர். சுப்புலட்சுமி,
வளமங்கை நாச்சியார் ஆகியோரிடமிருந்து வாங்கினேன்.
இதற்காக எங்களுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது. தொடர்ந்து
ஹோட்டல் தொடர்பான அனைத்து வரிகள், கட்டணங்களை நான் செலுத்தியுள்ளேன்.
பின்னர், ரூ. 1.5 கோடியில் ஹோட்டலைப் புதுப்பித்து நடத்தி வந்தேன்.
இந்நிலையில், கடந்த 2007-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் மத்திய பேருந்து நிலையம்
அருகேயுள்ள மற்றொரு ஹோட்டலின் உரிமையாளர்கள் ஜி. ரங்கநாதன், ஜி. மணி மற்றும் சிலர்
என்னை மிரட்டினர்.
இந்த ஹோட்டலை வாங்குவதில் திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு, அவருடைய
சகோதரர் கே.என். ராமஜெயம் ஆகியோர் ஆர்வமாக இருப்பதாகவும், அவர்களை மீறி இங்கு தொழில்
நடத்த முடியாது என்றும் அவர்கள் மிரட்டினர்.
தொடர்ந்து வந்த மிரட்டல்கள் குறித்து 2007-ம் ஆண்டு, டிசம்பர் 22-ம் தேதி
கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தேன். அடுத்த நாள் நள்ளிரவு 1.30
மணிக்கு திமுக கொடி கட்டிய காரில் வந்தவர்கள் ஹோட்டலை அடித்து நொறுக்கிவிட்டுப்
பணியாளர்களை விரட்டினர்.
அப்போது கன்டோன்மென்ட் காவல் ஆய்வாளராக இருந்த சுவாமிநாதனிடம் தொலைபேசியில்
பேசியபோது, அமைச்சர் மற்றும் அவரது தம்பி ஆகியோர் ஆசைப்படுவதைத் தடுக்க இயலாது
என்றும், அமைச்சரின் தம்பியிடம் சமரசமாகச் செல்லுமாறும் கூறினார். இந்த உரையாடல்
பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
நான் கொடுத்த புகார்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல் துறையினர்,
எதிர்மனுதாரர்களிடம் ஒரு பொய்ப் புகாரைப் பெற்றுக் கொண்டு என் மீதும், என் சகோதரர்
மற்றும் சிலர் மீதும் வழக்குத் தொடுத்துள்ளனர்.
பெருத்த நஷ்டத்துக்கு ஆளாகியுள்ள எனக்கு, இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு
அராஜகத்தால் பிடுங்கப்பட்ட எனது ஹோட்டலை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என
அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புகார் மனுவுடன், ஹோட்டலின் நிர்வாகப் பொறுப்புகளை ஏற்ற போது போடப்பட்ட
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நகல், காவல் ஆய்வாளருடன் பேசிய உரையாடலின் சிடி பதிவு,
வரிகள் உள்ளிட்ட கட்டணங்கள் செலுத்தியதற்கான ரசீதுகளின் நகல்கள், இதுவரை அனுப்பி
வைக்கப்பட்ட புகார் மனுக்களின் நகல்கள் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment