Thursday 7 July 2011

சிரியாவில் மனித உரிமை மீறல் பற்றி சர்வதேச குற்றவியல் கோர்ட்டு முன் விசாரணை நடத்தவேண்டும்: பொது மன்னிப்பு அமைப்பு வேண்டுகோள்

சிரியாவில் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச குற்றவியல் கோர்ட்டு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அரசியல்வாதிகளுக்கான சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.



 சிரியா நாட்டை 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வரும் அந்நாட்டு அதிபர் பஷர் அல் அசாத்தை எதிர்த்து அந்நாட்டு மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். மக்களிடம் ஆட்சியை ஒப்படைத்து ஜனநாயகத்தை உருவாக்க வேண்டும் என்று கிளர்ச்சியாளர்கள் தொடர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இவர்களை அந்நாட்டு ராணுவம் அடக்கி வருகிறது. இச்சம்பவத்தில் இதுவரை 1,350 பொது மக்களும், 350 பாதுகாப்புப் படையினரும் பலியானதாக செய்தி வெளியாகியுள்ளது.

அப்பாவிகளை கொன்று குவித்து வரும் சிரிய நாட்டின் மனித உரிமை மீறல்களை விசாரிக்க நெதர்லாந்தில் உள்ள சர்வதேச குற்றவியல் கோர்ட்க்கு உத்தரவிட வேண்டும் என்று அரசியல்வாதிகளுக்கான சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பு ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலை கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து மத்திய கிழக்கு மற்றும் வடஆப்ரிக்காவிற்கான சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பின் இணை இயக்குனர் பிலிப் லுதெர் கூறியதாவது: லெபனான் எல்லையையொட்டிய டெல் கலாக் என்ற இடத்தில் தப்ப முயன்ற குடும்பத்தினர் மீது சிரிய பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

மனிதாபிமானமற்ற முறையில் பெரும்பாலான பகுதிகளில் அப்பாவி மக்களை கைது செய்து சிறையில் அடைத்து கொடுமைபடுத்துகின்றனர். கைது செய்யப்பட்டவர்களின் கழுத்தில் சிகரெட் துண்டுகளால் சுட்டுள்ளனர்.

இளைஞர்கள் பலரை கைது செய்து சிறையில் எங்கும் நகர முடியாத அளவிற்கு அடைத்து வைத்து கொடுமை செய்து வருகின்றனர். பலருக்கு மின்சாரத்தை பாய்ச்சி விசாரணை மேற்கொண்டுள்ளனர். சில அப்பாவிகளை கைது செய்து காலின் நுனி விரலில் நிற்க வைத்துள்ளனர்.

குறிப்பாக டெல் கலாக் என்ற இடத்தில் சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளில் ஒன்பது பேர் பலியாயினர். அவர்களது கால் மற்றும் தொடைகளில் குண்டு பாய்ந்தது மற்றும் வன்முறைகள் நடத்தப்பட்டதற்கான தடயங்கள் காணப்பட்டன. டெல் கலாக் பகுதியில் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட குற்றங்கள் மனிதாபிமானத்திற்கு எதிராக நடத்தப்பட்டது போன்றது.

எனவே நாங்கள் சுட்டிக் காட்டிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சிரிய அரசின் மீது சர்வதேச குற்றவியல் கோர்ட்டின் விசாரணைக்கு ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் பரிந்துரைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

சிரிய நாட்டின் மனித உரிமைக் குழு கூறுகையில்,"நாட்டின் மத்தியில் உள்ள ஹோம்ஸ் என்ற இடத்தில் தொடர்ந்து அந்நாட்டு பாதுகாப்பு படை தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களை கைது செய்து வருகிறது" என்று குற்றம்சாட்டியுள்ளது.

சிரியாவில் வன்முறை நடந்து வருகையில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன் வர மாட்டோம் என்று சிரிய அரசு விடுத்த அழைப்பை எதிர்க்கட்சிகள் நிராகரித்து விட்டன.

No comments:

Post a Comment