Tuesday, 28 June 2011

சோட்டா ராஜன் உத்தரவால் பத்திரிகையாளரைக் கொன்றோம்


பத்திரிகையாளர் ஜோதிர்மய தேவ் கொலை வழக்கு தொடர்பாக மும்பையில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்ட 7 பேர். (வலது) கொலையாளிகள் பயன்படுத்திய ஆயுதங்கள்

மும்பை, ஜூன் 27: எண்ணெய் மாஃபியா கும்பலால் கொல்லப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட பத்திரிகையாளர் ஜோதிர்மய தேவ் கொலை வழக்கு தொடர்பாக 7 பேரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர்.


சம்பவம் நிகழ்ந்து 15 நாள்களுக்குப் பிறகு இந்த வழக்கு தொடர்பாக மும்பையில் சிலரும், தமிழ்நாட்டில் சிலரும் கைது செய்யப்பட்டதாக மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீல் தெரிவித்தார்.

நிழல் உலக தாதா சோட்டா ராஜனின் உத்தரவின் பேரில் இவர்கள் கொலை செய்ததாக தெரியவந்துள்ளது. அவர் நியமித்த 7 கூலிப்படையினரையும் கைது செய்துவிட்டதாக போலீஸ் இணை ஆணையர் ஹிமன்ஸý ராய் தெரிவித்தார்.

இந்த கொலைக்கு திட்டம் தீட்டியவர் ரோஹித் தங்கப்பன் என்கிற சதீஷ் கால்யா. இவர் சோட்டா ராஜனுக்காக இதைச் செய்துள்ளார்.

ராமேஸ்வரத்தில் 3 பேர் சிக்கினர்: மூன்று பேர் ராமேஸ்வரத்திலும், ஒருவர் சோலாப்பூரிலும் மற்ற மூவர் மும்பையிலும் கைது செய்யப்ட்டனர். இவர்கள் அனைவருமே மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர்களாவர்.

இந்த வழக்கில் எட்டப்பட்ட முன்னேற்றம் குறித்து காவல்துறை ஆணையர், இணை ஆணையர் ஆகியோர் தம்மிடம் தெரிவித்ததாக பாட்டீல் கூறினார்.

கைது செய்யப்பட்டவர்களில் சதீஷ் கால்யா, அனில் வக்மோட் ஆகிய இருவரும் அடையாளம் காணப்பட்டதாக அவர் தெரிவித்தார். அத்துடன் இந்த வழக்கை விரைவாக விசாரித்து குற்றவாளிகளைக் கண்டுபிடித்ததற்காக மாநில போலீஸாருக்கு ரூ. 10 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்றும் பாட்டீல் தெரிவித்தார்.

"மிட் டே' ஆங்கில நாளிதழில் பணியாற்றிய ஜோதிர்மய தேவ் (56), ஜூன் 11-ம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தொழில்முறை குற்றவாளிகளால் இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. மிகவும் நெருக்கமான இடைவெளியில் சுடப்பட்டதால் இவரது உடலில் ஐந்து குண்டுகள் பாய்ந்திருந்தன.

மூத்த பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மும்பை போலீஸ் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பாக அனைத்து கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தினர். தேவ் பயன்படுத்திய லேப் டாப், தகவல் சேமித்து வைக்கப்பட்டிருந்த ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றையும் போலீஸார் சோதித்து அதன் மூலம் சில முக்கியமான தகவலை பெற்றனர்.

இந்தவழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்களும் அரசுக்கு கோரிக்கை வைத்தன. ஆனால் அதை மகாராஷ்டிர மாநில அரசு ஏற்கவில்லை.

கைது செய்யப்பட்ட 7 பேரும் திங்கள்கிழமை நீதிபதிகள் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களை ஜூலை 4-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். கைது செய்யப்பட்டவர்களில் சிலர் குறிபார்த்து சுடுவதில் வல்லவர்கள்.

கொலை செய்த பிறகுதான் தாங்கள் பத்திரிகையாளரை கொன்றுவிட்ட தகவல் இவர்களுக்கு தெரியவந்துள்ளது.

பின்னர் சோட்டா ராஜனுடன் செல்போனில் பேசியபோது, அனைவரும் மும்பையிலிருந்து தப்பி விடுங்கள் என்றும் மற்றவற்றை தான் பார்த்துக் கொள்வதாகக் கூறியதாக

பிடிபட்ட குற்றவாளிகளில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜூன் 11-ம் தேதி தேவ் கொல்லப்படுவதற்கு 20 நாள்களுக்கு முன்பு சோட்டா ராஜன் செல்போனில் சதீஷ் கால்யாவுடன் பேசியுள்ளார். அப்போது தனக்கு ஒரு உதவி தேவை என்றும், அதை நிறைவேற்ற தேவையான பணம் மற்றும் கொலைக்குத் தேவைப்படும் ஆயுதங்களை அளிப்பதாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்தே செம்பூரில் ரூ. 2 லட்சம் ரொக்கமும், நைனிடாலில் துப்பாக்கியையும் அவர்கள் பெற்றுள்ளனர்.

இந்த கொலைக்கான காரணத்தைக் கண்டறியும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment