Tuesday 28 June 2011

தலை ஒட்டிப் பிறந்த இரட்டையர்களின் சாதனை

தலை ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் வயலின் இசையில் சாதனை படைத்து வருகின்றனர்.


அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தை சேர்ந்த தம்பதி டிம் டெல்ப் - நான்சி ஹோப்மன். திருமணமாகி 4 வருடங்கள் கழிந்த நிலையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.

அவர்களால் சந்தோஷப்பட முடியவில்லை. காரணம் இரண்டும் தலை ஒட்டிய நிலையில் இருந்தன. ஓபரேஷன் செய்து பிரித்தால் ஒருவரையோ, இருவரையுமோ இழக்க வேண்டி வரும் என்று மருத்துவர்கள் கூறினர்.

இழந்து விடுவதற்கு தலை ஒட்டிய அவஸ்தையே மேல் என்று மனதை தேற்றிக் கொண்டனர் பெற்றோர். தலை ஒட்டிய குழந்தைகளை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்க்க ஆரம்பித்தார்கள்.

இணை பிரியா அந்த இரட்டை சகோதரர்களின் பெயர் ஸ்டீபன், டைலர்டெல்ப். இப்போது வயது 19. "நாங்க ரெண்டு பேரும் நல்ல நண்பர்கள்" என்று மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

பள்ளி படிப்பை முடித்து விட்டார்கள். மனம் தளராமல் வயலின் கற்றுக் கொண்டு இப்போது தூள் கிளப்புகிறார்கள். இசை ஆர்வத்தில் இருவரின் ரசனையும் வேறுபடுகிறது. ஸ்டீபன் பொப் இசை ரசிகர். டைலருக்கு பிடித்தது நாட்டுப்புற இசை.

தங்களை பற்றி அவர்கள் கூறியதாவது: நாங்கள் உச்சந்தலை ஒட்டி பிறந்தவர்கள். அதனால் தான் ஒன்றாக வாழ்ந்தாலும் கூட ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டதில்லை. அதில் வருத்தம் தான். எதையாவது பார்த்து ரசிக்க வேண்டும் என்றால் முதலில் ஒருவர் பார்ப்போம்.

பின்னர் ஒரு சுற்று சுற்றி நின்ற பிறகு இன்னொருவர் பார்ப்போம். இணைந்தே இருப்பதால் எங்கள் மனக்குமுறல்கள், மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள வேறு யாரையும் தேடுவதில்லை. இரு வேறு கருத்துகள், சிந்தனை இருந்தாலும் கடின உழைப்பு, தன்னம்பிக்கையால் கட்டாயம் முன்னேறுவோம். தலை இணைந்திருப்பது அதற்கு தடையாக இருக்காது.

தன் பிள்ளைகள் பற்றி தாய் நான்சி கூறியதாவது: கருவுற்ற 14வது வாரத்தில் இவர்கள் தலை ஒட்டியிருப்பது தெரியவந்தது. எப்படி இருந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். இசையை கற்றதால் தங்கள் வேதனையை அவர்கள் மெல்ல மறந்து வருகின்றனர்.

இவர்களது மண்டை ஓடு இணைந்த நிலையில் உள்ளது. 25 லட்சம் பேரில் ஒன்று தான் இப்படி இருக்கும். இதை கார்னியோபாகஸ் என்கிறோம். பெற்றோரின் கவனிப்பு, ஒத்துழைப்பால் ஆரோக்கியமான இரட்டையர்களாக உள்ளனர் என மருத்துவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment