Tuesday 28 June 2011

மக்களிடம் ஆட்சியை ஒப்படைக்க ராணுவ ஆட்சியாளர்கள் விருப்பம்

எகிப்தில் விரைவில் தேர்தல் நடத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியிடம் பொறுப்பை ஒப்படைக்க ராணுவ ஆட்சியாளர்கள் விருப்பம் தெரிவித்து இருப்பதாக அமெரிக்க செனட் சபை உறுப்பினர் ஜான் மிக்கெய்ன் தெரிவித்துள்ளார்.


தற்போது ஆட்சி செய்து வரும் ராணுவ ஆட்சியாளர்கள் முபாரக்கிற்கு ஆதரவானவர்கள், ஆதலால் விரைவில் அவர்களை ஆட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும். புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கும் வரை தேர்தல் நடத்த தாமதம் செய்தால் இது இஸ்லாமிய கட்சிகளுக்கு ஆதரவாகிவிடும் என்று மதச்சார்பற்ற மற்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தனர்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் சமீபத்தில் அந்நாட்டு பிரதமர் எசம் ஷரப் அரசு பத்திரிகையான அல் அரம்மிற்கு அளித்த பேட்டியில்,"செப்டம்பர் மாதத்திற்கு பாராளுமன்ற தேர்தலை ஒத்தி வைத்து இருப்பது அரசியல் கட்சிகள் தங்களை தயார்படுத்திக் கொள்ள கூடுதல் நேரத்தை அளிக்கும். மேலும் அதிக கட்சிகள் போட்டியிட வாய்ப்பளிக்கும்" என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் எகிப்து தலைநகர் கெய்ரோ வந்திருந்த அமெரிக்க செனட் சபையின் ரிபப்ளிக்கன் கட்சி உறுப்பினர் ஜான் மிக்கைன் கூறியதாவது: ராணுவ ஆட்சியின் உயர்மட்டக் கவுன்சில் தலைவரான பீல்டு மார்ஷல் ஹூசைன் தந்தாவியை சந்தித்து பேசினேன்.
விரைவில் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியிடம் பொறுப்பை ஒப்படைக்க விரும்புவதாக ஹூசைன் தெரிவித்தார். மேலும் தேர்தலை மேற்பார்வையிட சர்வதேச பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று ஹூசைனிடம் கேட்டுக் கொண்டோம். இதுபோன்ற பரிந்துரைகளை முன்பு முபாரக் நிராகரித்து வந்தார்.

அமெரிக்க செனட் சபையின் குடியரசுக் கட்சி உறுப்பினர் ஜான் கெர்ரி கூறுகையில்,"மக்களால் தேர்வு செய்யப்படும் ஆட்சியாளர்களிடம் ஆட்சியை ஒப்படைக்க ராணுவ ஆட்சியாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்" என்றார்.

எகிப்து நாட்டை 30 ஆண்டுகளாக ஆட்சி செய்த வந்த ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிராக அந்நாட்டு மக்கள் பயங்கர கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து கடந்த பிப்ரவரி  11ம் தேதி  அந்நாட்டை விட்டு தனது குடும்பத்தினருடன் முபாரக் வெளியேறினார். இதையடுத்து அந்நாட்டின் ஆட்சி அதிகாரம் ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து வரும் செப்டம்பர் மாதம் பாராளுமன்ற தேர்தலும், நவம்பர் மாதத்தில் அதிபருக்கான தேர்தலும் நடத்தப்படும் என்று ராணுவ ஆட்சியாளர்கள் அறிவித்தனர்.

No comments:

Post a Comment