Saturday 2 July 2011

புதிய தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையராக பிரதீப் குமார் தேர்வு

டெல்லி: புதிய தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையராக பாதுகாப்புத்துறை செயலாளர் பிரதீப் குமார் இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மன்மோகன் சிங், சுஷ்மா சுவராஜ், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் இன்று பிரதமரின் இல்லத்தில் கூடி, புதிய தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையரைத் தேர்வு செய்யும் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர்.
இக்கூட்டத்தில் பிரதீப் குமார் புதிய தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இந்தத் தேர்வு நடந்ததாக பின்னர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.

கூட்டத்திற்குப் பின்னர் சுஷ்மா செய்தியாளர்களிடம் பேசுகையில், புதிய தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையரின் பெயர் இறுதி செய்யப்பட்டு விட்டது. அரசு விரைவில் பெயரை அறிவிக்கும். புதிய தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர் தேர்வின்போது நான் ஆட்சேபனை எதையும் தெரிவிக்கவில்லை என்றார்.

முன்னதாக தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையராக இருந்து வந்த பி.ஜே. தாமஸ் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் இருந்ததால் அவரது நியமனம் பெரும் சர்ச்சைக்குள்ளானது.

தாமஸ் பதவியில் நீடிக்கக் கூடாது என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், தாமஸ் நியமனம் செல்லாது என்று தீர்ப்பளித்தது. இதையடுத்து அவரது பதவி தானாகவே காலியானது. இதைத் தொடர்ந்து தற்போது புதிய தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையரை மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது.

பிரதீப் குமாரின் நியமனம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் அவர்தான் அடுத்த தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர் என்பது உறுதியாகியுள்ளது.

பிரதீப் குமார் ஜூலை 31ம் தேதியுடன் பாதுகாப்புத்துறை செயலாளர் பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார். அவரது நியமனம், பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் சுஷ்மாவால் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தாமஸ் நியமனத்தின்போது சுஷ்மா சுவராஜ் தனது அதிருப்தியையும், எதிர்ப்பையும் பதிவு செய்ததாகவும், அதை பிரதமரும், உள்துறை அமைச்சரும் பொருட்படுத்தவில்லை என்று சர்ச்சை கிளம்பியது நினைவிருக்கலாம்.

புதிய தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையராக தேர்வாகியுள்ள பிரதீப் குமார் ஹரியானாவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஆவார். தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையராக நான்கு ஆண்டுகளுக்கு அவர் பதவி வகிப்பார்.

முன்னதாக பிரதீப் குமார் தவிர முன்னாள் உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை, முன்னாள் ரசாயணம் மற்றும் உரத்துறை செயலாளர் பிஜய் சாட்டர்ஜி, நாடாளுமன்ற விவகாரத்துறை முன்னாள் செயலாளர் வி.கே.பாஷின், முன்னாள் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் எம்.ராமச்சந்திரன், பெர்சனல் துறை செயலாளர் அல்கா சிரோஹி ஆகியோரின் பெயர்களும் பரிசீலிக்கப்பட்டன.

ஆனால் பிள்ளையும், சிரோஹியும் தாங்களாகவே போட்டியிலிருந்து விலகிக் கொண்டனர்.

No comments:

Post a Comment