பிரிட்டனில் குடியேறி வருபவர்களின் விவகாரம் ஒரு
கட்டுப்பாட்டுக்குள் வராவிட்டால், இங்கு அடுத்த ஒரு தலைமுறையும்
முற்றிலும் சமூகநல
உதவித் திட்டங்களில் தங்கியிருக்கும் நிலைமை
உருவாகிவிடும் என்று பிரிட்டனின் மூத்த அரசாங்க அமைச்சர் ஒருவர்
எச்சரித்துள்ளார்.
பிரிட்டனில் உள்ள வணிக நிறுவனங்கள்
கூட தொழிலாளர்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை விட, பிரிட்டிஷ்
இளைஞர்களுக்கு சந்தர்ப்பங்களை
வழங்குவதன் மூலம், உதவ முடியும் என்று நல உதவிகள்
மற்றும் ஓய்வூதியத் துறைக்கான அமைச்சர் இயான் டங்கன் ஸ்மித் கூறியுள்ளார்.
நல உதவித் திட்டங்களும்,
குடியேறிகளின் பிரச்சினையும் பிரிட்டிஷ் அரசியல் எதிர்கொள்ளும் இரண்டு
முக்கிய விவகாரங்களாகும். இங்கு
அளவுக்கு அதிகமாக ஆட்கள் குடியேறுவதாகவும், நல உதவித்
திட்டங்கள் மிகவும் தாராளமாக இருப்பதாகவும் பெருமளவில் வாக்காளர்கள்
உணருவதாக
கருத்தறியும் வாக்கெடுப்புக்கள் கூறுகின்றன.
தற்போது இந்த விவாதத்துக்குள் நுழைந்திருக்கும் அமைச்சர்
இயான் டங்கன் ஸ்மித், பிரிட்டனை நோக்கிய குடியேற்றங்கள்
தடுக்கப்படாவிட்டால்,
பல இளைஞர்கள், தமது பெற்றோரைப் போல, தமது தாத்தா
பாட்டியைப் போல வேலையில்லாமல், நல உதவிகளையே நம்பி வாழும் நிலை பரம்பரை
பரம்பரையாக
தொடர்ந்து உருவாகும் என்று எச்சரித்துள்ளார்.
ஐரோப்பாவுக்கு வெளியே இருந்து
பிரிட்டனுக்கு குடியேறுபவர்கள் விடயத்தில் புதிய மட்டுப்பாடுகளைக் கொண்டு
வருவதன் மூலமும், வேலை
மூலந்தான் வருமானம் கிடைக்கும் என்பதை உறுதி செய்யும்
நோக்கில் நல உதவித் திட்டங்களில் மறுசீரமைப்பைச் செய்வதன் மூலமும்
அரசாங்கம்
இந்த விடயத்தில் தனது பங்கைச் செய்யும் என்றும் டங்கன்
ஸ்மித் கூறியுள்ளார்.
கடந்த 14 வருடங்களில் உருவாக்கப்பட்ட முப்பது லட்சம் புதிய தொழில் வாய்ப்புக்களில் 80 வீதமானவை குடியேறிகளால் நிரப்பப்பட்டதாகவும், அதில் அரைவாசிப்பேர் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியே இருந்து வந்தவர்கள் என்றும் அதிகாரபூர்வ தகவல்கள் கூறுகின்றன.
No comments:
Post a Comment