Saturday, 25 June 2011

இஷ்ரத் ஜஹான் வழக்கு:பதவி விலக அனுமதிக்கவேண்டும்-எஸ்.ஐ.டி தலைவர்

அஹ்மதாபாத்: இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில் விசாரணை நடத்திவரும் சிறப்பு புலனாய்வுக்குழு(எஸ்.ஐ.டி) தலைவர் சத்யபால் சிங் பதவி விலக அனுமதியளிக்க வேண்டும் என குஜராத் உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

எஸ்.ஐ.டியின் இதர உறுப்பினர்களான மோகன் ஜா, சதீஷ் வர்மா ஆகியோருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் தன்னை தலைவர் பதவியிலிருந்து மாற்ற வேண்டும் என சத்யபால் சிங் நீதிபதிகளான ஜெயந்த் பட்டேல், அபிலாஷ குமாரி ஆகியோர் அடங்கும் பெஞ்சின் முன்பாக சமர்ப்பித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இம்மாதம் 18 ஆம் தேதி சிங் பதவியேற்றார். குஜராத் மொழியை புரிந்துக்கொள்வதில் தான் சிரமப்படுவதாக சிங் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். பெரும்பாலான சாட்சிகளின் வாக்கு மூலங்களும், போலீஸ் அதிகாரிகளின் வாக்கு மூலமும் குஜராத்தி மொழியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவற்றை பூரணமாக புரிந்துக்கொள்ள தனக்கு சிரமமாக உள்ளது என சிங் கூறுகிறார். அதே வேளையில் மொழி தெரியாது என்பது பொறுப்பில் இருந்து மாறுவதற்கு காரணமாகாது என நீதிபதி பட்டேல் கூறினார். கோத்ரா வழக்கை விசாரணை நடத்திய எஸ்.ஐ.டி தலைவர் ஆர்.கே.ராகவனும், சொஹ்ரபுத்தீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கை விசாரணை நடத்திய சி.பி.ஐ துணை இயக்குநர் பி.கந்தசாமிக்கும் குஜராத் மொழி தெரியாத போதும் அவர்களுக்கு இது ஒரு பிரச்சனையாக இல்லை என பட்டேல் கூறினார்.

ஆனால், சத்யபால் சிங்கிற்கு தலைவர் பதவியில் தொடர விருப்பமில்லை என்றால் அவர் பதவியிலிருந்து விலகலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிமன்றத்திற்கு அளித்த கோரிக்கையின் விபரங்களை ஊடகங்களுக்கு அளித்த சத்யபால் சிங்கை நீதிமன்றம் விமர்சித்தது. இவரது கோரிக்கை தொடர்பாக ஒருவாரத்திற்குள் பதிலளிக்க குஜராத் உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment