Saturday, 25 June 2011

மீனவர்களின் வழிகாட்டியாகும் ஜி.பி.எஸ். கருவி

ஜூன் 24: ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு துணையாக ஜிபிஎஸ் (Global Positioning System) எனப்படும் உலக இடநிர்ணயிப்புக் கருவி விளங்குகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குப் பயன்படுத்தப்படும் படகுகளில் இத்தகைய கருவிகள் இருந்தாலும் அவற்றை முழுமையாகப் பயன்படுத்துவது குறித்து பெரும்பாலான மீனவர்களுக்குத் தெரியவில்லை. அக்கருவிகளைக் கையாள்வது குறித்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் சரியான திசையில் சென்று மீன்பிடித்துவிட்டு கரைக்குத் திரும்புவது என்பது பெரும் சவாலான விஷயமாகும். சூரியன், நிலா, நட்சத்திரம், காற்றின் திசை, கடலின் நீரோட்டம் இவற்றைக் கொண்டு கடலில் திசையைக் கண்டுபிடித்து மீனவர்கள் கரைக்கு வந்து சேர்கிறார்கள்.

இவ்வாறு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் திசைமாறிச் செல்வதும், இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்படுவதும் தொடர்கிறது. சர்வதேச கடல் எல்லையைத் தாண்டும் மீனவர்கள் அண்டை நாட்டு கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுகிறார்கள். பல கடல்மைல் தொலைவுக்குப் படகில் சென்று வலைகளை வீசி போதுமான அளவுக்கு மீன்கள் கிடைக்காமல் கரைக்குத் திரும்பும் நிலையும் ஏற்படுகிறது.

இத்தகைய பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் மீனவர்களுக்கு வழிகாட்டும் வகையில் வந்துள்ள கருவிதான் உலக இடநிர்ணயிப்புக் கருவி எனப்படும் ஜிபிஎஸ். செயற்கைக்கோள் உதவியுடன் செயல்படும் இக்கருவி பொருத்தப்பட்ட மீன்பிடிப் படகு எந்த இடத்தில் உள்ளது என்பதை அறியலாம்.

இதை உலகின் எந்த இடத்திலிருந்தும் இயக்க முடியும். கரைக்குச் செல்லும் வழி எது?, கடலுக்குள் எந்த இடத்தில் பாறைகள் உள்ளன, கடலில் அபாயகரமான பகுதிகள், மீன்பிடித் தளங்கள், மீன்கள் கிடைக்கும் இடங்கள் குறித்த பல்வேறு விஷயங்களையும் இதன் மூலம் அறிய முடியும். இரவு நேரத்தில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் செல்லும் விசைப்படகுகளும், நாட்டுப்படகுகளும் திக்குத் தெரியாத கடலில் மீன்பிடித்துவிட்டு கரைக்குத் திரும்ப இக்கருவி வழி சொல்கிறது. இந்த கருவியின் விலை, தொழில்நுட்பத்தைப் பொறுத்து ரூ.10 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை இருக்கும்.

சர்வதேச கடல் எல்லை வந்தால் மீனவர்களை எச்சரிக்கை செய்யும் வசதியும் இதில் உள்ளது. இக்கருவியின் பயன்பாடு குறித்து மீனவர்களுக்கு இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. மீன்பிடித் தளங்களுக்குச் செல்வது, அங்கிருந்து கரை திரும்புவது உள்ளிட்ட ஒருசில அம்சங்களை மட்டுமே மீனவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

எனவே, இக்கருவியின் பயன்பாட்டை பரவலாக்கும் நோக்குடன் ஜிபிஎஸ் இயக்குவதற்கான பயிற்சியை நாகர்கோவிலில் அமைந்துள்ள எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன கிராம வளமையமும், ஹைதராபாத் தேசிய மீன்வளர்ச்சி வாரியமும் கன்னியாகுமரி மாவட்டத்தில் வழங்கத் தொடங்கியிருக்கின்றன என்று கிராமவள மைய விஞ்ஞானி முகமது பிலால் கூறினார்.

இதுவரை கோவளம், கீழமணக்குடி, கடியப்பட்டினம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த தலா 25 மீனவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஜிபிஎஸ் பயன்பாடு, அது எவ்வாறு செயல்படுகிறது, இடத்தை நிர்ணயித்துக் கொள்வது, கடலடி ஆபத்து நிறைந்த பகுதிகளை அடையாளமிடுவது, ஓரிடத்திருந்து மற்றொரு மீன்பிடி இடத்துக்குச் சென்று பத்திரமாகத் திரும்புவது குறித்து பயிற்சியில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மீனவர்களை கடலுக்கு படகுகளில் அழைத்துச் சென்றும் செய்முறை விளக்கமும் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் மீனவர்களுக்கு இத்தகைய பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

ஜிபிஎஸ் கருவி முழுக்க முழுக்க ஆங்கில மொழியின் அடிப்படையில் செயல்படக்கூடியது. இக் கருவிகளில் தமிழையும் புகுத்தி அவற்றை சாதாரண மீனவர்களும் பயன்படுத்தும்படி செய்ய வேண்டும். அதே நேரத்தில் பாரம்பரிய மீன்பிடிப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என்கிறார் நெய்தல் மக்கள் இயக்க பொதுச்செயலர் சி. பெர்லின்.

No comments:

Post a Comment