Saturday 25 June 2011

சென்னையில் ஒரு சதுர கி.மீ.க்கு 26,903 பேர் வசிக்கும் அவலம்

பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கிறது. சமீபத்தில் நடந்த கணக்கெடுப்பில் நாடு முழுவதும் 121 கோடி மக்கள் தொகை இருப்பது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் 7 கோடியே 21 லட்சத்து 389 பேர் உள்ளனர். 10 ஆண்டுகளில் 97 லட்சம் பேர் அதிகரித்துள்ளனர். மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 15.6 சதவீதம். தமிழகத்தில் ஒரு சதுர கி.மீ.க்கு 555 பேர் வசிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

சென்னை, கோவை, மதுரை மற்றும் சென்னையை ஒட்டிய மாவட்டங்களில் நகரமயமாக்கல் மற்றும் தொழில்மயமாக்கலால் மக்கள் தொகை கணிசமாக உயர்ந்துள்ளது. சென்னை, கோவை, மதுரை போன்ற இடங்களில் ஒரு மனிதனுக்கு வாழ்விடத்திற்கு தேவையான இடத்தின் பரப்பளவு சுருங்கி வருகிறது.

மக்கள்தொகை அடர்த்தி, மாநிலத்தின் ஒட்டுமொத்த சராசரி ஒரு சதுர கி.மீட்டரில் 555 பேர். ஆனால் சென்னையில் 26,903 பேர் வசிக்கின்றனர். கன்னியாகுமரியில் 1106, திருவள்ளூரில் 1049, காஞ்சிபுரத்தில் 927, மதுரையில் 823, கோவையில் 748 பேர் வசிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் கோவையை தவிர பிற மாவட்டங்களின் மக்கள்தொகை அடர்த்தி மாநில சராசரியை விட குறைவு. ஈரோட்டில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 397 பேரும், நீலகிரியில் 288 பேரும், திருப்பூரில் 476 பேரும் வசிக்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் 2001ல் சதுர கிலோ மீட்டருக்கு 299 பேர் வசித்தது குறிப்பிடத்தக்கது. ஷ

நகரமயமாக்கலின் விளைவாக பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர், சுகாதாரம், இதர கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டிய கட்டாயம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ளது. கோவை போன்ற நகரங்களில் வாழ்விட பரப்பு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் துணை நகரங்கள் ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

அதேபோல் நகர பகுதியில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. தற்போது ஒரு குடிமகனுக்கு தினமும் 90 லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும் என்பது தேசிய சராசரியாக உள்ளது. தமிழகத்தில் அதை காட்டிலும் குறைவாகவே வழங்கப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில் 2001ல் சதுர கிலோமீட்டருக்கு 631 பேர் மட்டுமே வசித்தனர். மக்கள் தொகை அடர்த்தியில் அப்போது 9வது இடத்தில் இருந்த கோவை இந்த முறை 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

கோவை மாவட்டத்தில் தற்போது 34 லட்சத்து 72 ஆயிரத்து 578 பேர் உள்ளனர். 10 ஆண்டின் சராசரி விகிதம் 18.46 சதவீதம். 2001 கணக்கெடுப்பின் போது வளர்ச்சி விகிதம் 16.96 சதவீதம்.

No comments:

Post a Comment