Saturday, 25 June 2011

சிரியாவில் அதிபருக்கு எதிராக கடும் போராட்டம்: 15 பேர் சுட்டுக் கொலை

சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் அசாத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 15 பேர் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளாலும், துப்பாக்கி குண்டுகளாலும் தாக்கினர்.


இது குறித்து சிரியா அரசு தொலைக்காட்சி கூறுகையில்,"அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கி தாக்குதலால் உயிரிழப்பு ஏற்பட்டது" என தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே ஐரோப்பிய ஒன்றியம் அசாத் அரசுக்கு எதிரான தடைகளை நீட்டித்தது. கடந்த மார்ச் மாதம் சிரியா அரசுக்கு எதிராக போராட்டம் துவங்கியது. இதுவரை நடந்த போராட்டத்தில் 1300 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் போராட்டக்காரர்கள் விடுத்த அறிவிப்பின் போது வெள்ளிக்கிழமை பிரார்த்தனைக்கு பின்னர் எங்களது போராட்டத்தில் இணைய வேண்டும் என அவர்கள் கூறி இருந்தார்கள். இந்த வேண்டுகோள் பேஸ்புக் இணையதளத்தில் வெளியாகி இருந்தது.

நீண்ட காலம் எமது ஜனாதிபதியாக பஷார் இருக்க முடியாது என்று அந்த போராட்ட அழைப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. சிரியாவில் நடக்கும் போராட்டங்களை வெளி உலகிற்கு அதிகம் தெரியக்கூடாது என அயல் நாட்டு பத்திரிகையாளர்களுக்கு சிரியா கட்டுப்பாடு விதித்தது.

வெள்ளிக்கிழமை போராட்ட அழைப்பை தொடர்ந்து டமாஸ்கசின் புறநகர் பகுதியான இர்பின், ஹாம்ஸ், ஹமா, தேரா ஆகிய இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தார்கள்.

No comments:

Post a Comment