Saturday, 25 June 2011

சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தில் துனிஷியா இணைந்தது

இந்த ஆண்டு துவக்கத்தில் அரபு போராட்டங்கள் ஏற்பட்ட பகுதியாக துனிஷியா இருந்தது. இந்த நாடு சர்வதேச கிரிமினல் கோர்ட்டில் இணைந்தது.


இந்த அமைப்பில் இணைந்த முதல் வட ஆப்பிரிக்க தேசம் துனிஷியா ஆகும். சர்வதேச கிரிமினல் கோர்ட் விதிமுறைகளை ஏற்கும் என துனிஷியா வெள்ளிக்கிழமை ஐ.சி.சி எனப்படும் சர்வதேச கிரிமினல் கோர்ட் மற்றும் ஐ.நா பொதுச் செயலாளரிடம் உரிய விவரங்களை சமர்ப்பித்தது.
ஐ.சி.சி விமுறைகளை ஏற்பதாக அறிவித்து கையெழுத்திட்ட 116வது நாடு துனிஷியா ஆகும். இந்த ஒப்பந்தப்படி இனப்படுகொலை, போர் குற்ற நிகழ்வுகள் மற்றும் மனித இனத்திற்கு எதிராக குற்றங்கள் ஆகியவற்றை விசாரிக்கும் அதிகார நிலையை சர்வதேச கிரிமினல் கோர்ட் மேற்கொள்ளும்.

ஐ.சி.சி.யில் இணைந்த 32வது ஆப்பிரிக்க நாடு துனிஷியா ஆகும். அரபு அமைப்பு நாடுகளில் 4வது நாடாகவும் துனிஷியா உள்ளது. இதற்கு முன்னர் அரபு நாடுகளான காமரோஸ், ஜோர்டான் மற்றும் திபோட்டி ஐ.சி.சி அமைப்பில் இணைந்துள்ளன.

ரோம் ஸ்டாட்யூட் எனப்படும் நீதிமன்றத்தின் நிர்வாக ஒப்பந்தத்தில் துனிஷியா இணைந்ததை கிறிஸ்டியன் வெனாவெர் வரவேற்றார். இவர் ஐ.சி.சி நிர்வாக அமைப்பு நாடுகள் சபையின் தலைவர் ஆவார். துனிஷியாவை பின்பற்றி இதர நாடுகளும் இணையும் என நம்பிக்கை தெரிவித்தார். துனிஷியா நடவடிக்கையை சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பும் வரவேற்று உள்ளது.

No comments:

Post a Comment