புதுடெல்லி: மும்பையில் கடந்த புதன்கிழமை மூன்று இடங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளை சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது.
கண்டிக்கத்தக்க கோழைத்தனமான இச்செயல் நடுங்கச்செய்ததாகவும், கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அனுதாபத்தை தெரிவிப்பதாகவும் எஸ்.டி.பி.ஐயின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கொல்லப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள், காயமடைந்தவர்கள் ஆகியோரின் துயரத்தில் பங்கேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குண்டு வெடிப்பு சம்பவத்தை மனிதத்தன்மை விரோதமானது என குறிப்பிட்ட இ.அபூபக்கர், இதன் பின்னணியில் செயல்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என கோரிக்கைவிடுத்தார்.
அனைத்து சமூக மக்களும் வாழும் ஒரு நகரத்தில் பிரிவினையை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு நடத்தப்பட்ட கூட்டுப் படுகொலையாகும் இது. சந்தேகத்தின் அடிப்படையில் மட்டும் ஏதேனும் ஒரு பிரிவினரை நோக்கி விரலை சுட்டிக்காட்டுவதிலிருந்து புலனாய்வு ஏஜன்சிகளும், அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் விலகவேண்டும்.
ஊகங்களின் அடிப்படையிலான குற்றச்சாட்டுக்கள் ஏற்கனவே பல நிரபராதிகளின் வாழ்க்கையை சீரழித்துள்ளது. கடந்த காலங்களில் நடந்த ஏராளமான குண்டு வெடிப்புகளில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சார்ந்த நிரபராதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
உண்மையான குற்றவாளிகள் குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகும், நிரபராதிகள் இதுவரை விடுவிக்கப் படவில்லை. ஏதேனும் ஒரு மதத்தையோ, பிரிவினரையோ, சமுதாயத்தையோ முற்றிலும் குற்றம் சாட்டுவதை நிறுத்திவிடுவது நல்லது.
அதற்கு பதிலாக தீவிரவாதத்தை தனிமைப்படுத்துவதிலும், எதிர்கொள் வதிலும் மத்திய-மாநில அரசுகள் சந்தர்ப்பசூழலுக்கு தகுந்தவாறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நிரபராதிகள் கொடுமைக்கு ஆட்படுத்தாதவிதம் ஒவ்வொரு வழக்குகளையும் ஆதாரங்களின் அடிப்படையில் கையாளவேண்டும் என இ.அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment