சென்னை : நவீன தகவல் தொடர்பு செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.ஸ்ரீஹரிகோட்டா
சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து வெள்ளிக்கிழமை ஏவப்பட்ட இந்த
ராக்கெட், ஜிசாட்-12 செயற்கைக்கோளுடன் சென்றுள்ளது.
பி.எஸ்.எல்.வி. சி-17 ராக்கெட் வெள்ளிக்கிழமை
வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதைத் தொடர்ந்து, ஸ்ரீஹரிகோட்டாவில்
செய்தியாளர்களைச் சந்தித்த காட்சி
இது முழுக்க முழுக்க இந்தியாவில் உருவாக்கப்பட்டது. 1,410 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், ரூ. 148 கோடி செலவில் உருவாக்கப்பட்டது. இந்த ராக்கெட் ஏவுவதற்கான 53 மணி நேர கவுன்டவுன் புதன்கிழமை காலை 11.48 மணிக்கு தொடங்கியது. கவுன்டவுன் நெருங்க நெருங்க விஞ்ஞானிகளுடமும், விண்வெளி மையத்தில் கூடியிருந்த பொதுமக்கள், பத்திரிகையாளர்களிடமும் பெரும் பரபரப்பு தொற்றியது.
திட்டமிட்டப்படி வெள்ளிக்கிழமை மாலை சரியாக 4.48 மணிக்கு பெரும் சப்தத்துடன் புகையை கக்கியபடி ராக்கெட் விண்ணை நோக்கிக் கிளம்பியது. இதைப் பார்த்தவுடன் கூடியிருந்த அனைவரும் கைகளைத் தட்டி ஆரவாரம் செய்தனர். மெதுவாக கிளம்பிய ராக்கெட் பின்னர் விண்ணில் சீறிப்பாய்ந்தது.ராக்கெட் செலுத்தப்படுவதை விஞ்ஞானிகள் கம்ப்யூட்டர் மூலம் தொடர்ந்து கண்காணித்தனர். ஒவ்வொரு நிலையை ராக்கெட் வெற்றிகரமாக கடக்கும்போதும், விஞ்ஞானிகள் கைகளைத் தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இறுதி நிலையான 4-ம் நிலையைத் தாண்டி, திட்டமிட்ட நீளவட்டப் பாதையை ராக்கெட் சென்றடைந்ததும், விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் கைகளைக் குலுக்கி வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.÷இஸ்ரோ தலைவர் கே. ராதாகிருஷ்ணன் கைகளை உயர்த்தி வெற்றிச் சின்னத்தைக் காண்பித்து, சக விஞ்ஞானிகளுடன் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டார்.
18-வது வெற்றி: இதன் மூலம் 18-வது முறையாக பி.எஸ்.எல்.வி. ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் மூலம் விண்ணுக்குச் சென்றுள்ள செயற்கைக்கோள், 7 முதல் 8 ஆண்டுகள் வரை ஆயுள் காலம் கொண்டது.
இதில் 12 விரிவுபடுத்தப்பட்ட சி-பாண்ட் டிரான்பாண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. தொலை கல்வி, தொலை மருத்துவம் மற்றும் கிராம வள மையங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல் தொடர்பு சேவைகளுக்கு இது பயன்படும்.
"ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் 2012-ல் ஏவப்படும்'முழுக்க இந்தியாவில் தயாரித்த கிரையோஜெனிக் இன்ஜின் பொருத்திய ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் 2012- ல் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் கூறினார்.ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து வெள்ளிக்கிழமை ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இதன் பின்னர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:பி.எஸ்.எல்.வி. சி-17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் தகவல் தொடர்பு செயற்கைகோள் அனுப்படுவது இதுவே முதல் முறையாகும்.
டிரான்ஸ்பாண்டர்கள் பற்றாக்குறை உள்ள காரணத்தால் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் தகவல் தொடர்பு செயற்கைகோள் அனுப்பியுள்ளோம்.கடந்த ஏப்ரல் மாதத்தில் 151 டிரான்ஸ்பாண்டர்கள் இருந்தன.
இந்த எண்ணிக்கை இப்போது 175-ஆக உயர்ந்துள்ளன. 12 டிரான்ஸ்பாண்டர்களுடன் விண்ணில் ஏவப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக செயல்படும் எனில், நம்மிடம் உள்ள டிரான்ஸ்பாண்டர்கள் எண்ணிக்கை 187-ஆக உயரும். இருந்தபோதும் 2012 ஏப்ரலில் நமக்கு மொத்தம் 215 டிரான்ஸ்பாண்டர்கள் தேவை.இதுபோன்ற டிரான்ஸ்பாண்டர்கள் பற்றாக்குறை இருந்தபோதும், குறைந்த எடையுள்ள செயற்கைகோள்களை பி.எஸ்.எல்.வி. மூலம் அனுப்ப வழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் தொடர் தோல்வியை சந்தித்து வந்துள்ளன. இதற்கான காரணம் அறியப்பட்டு, தீர்வும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே 2012-ல் முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜின் பொருத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் விண்ணில் ஏவப்படும்.
சந்திரயான்-2: சந்திரயான்-2 பணிகள் சிறப்பாக முன்னேற்றம் அடைந்து வருகிறது. லேண்டர், ரோவர், ஆர்பிட்டர் ஆகியவை தயாரிக்கும் பணிகள் நிறைவுபெற்றுவிட்டன. வடிவமைப்பு பணிகளும் முடிந்துவிட்டன. சோதனைக்கு பின்பு 2014-ல் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் சந்திரயான்-2 அனுப்ப திட்டமிடப்பட்டு வருகிறது.மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்துக்கு மத்திய அரசு முதல் கட்டமாக ரூ.145 கோடி ஒதுக்கியுள்ளது.
இந்த திட்டம் குறித்து இன்னும் நீண்ட ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. விண்வெளிக்கு அனுப்பப்படும் மனிதருக்கு தேவையான பிரத்யேக ஆடை வடிவமைப்பது, செல்லும் வழியில் பிரச்னை ஏற்பட்டால் அந்த நபர் தப்பிப்பதற்கான வழியை கண்டுபிடிப்பது.
விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பும்போது பாதுகாப்பாக தரையிறங்கச் செய்வது உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. முதலில் 2 பேரை 7 நாள்களுக்கு விண்ணுக்கு அனுப்ப பரிசீலித்தோம். ஆனால் இப்போது 3 பேரை 7 நாள்கள் அனுப்ப முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்த மனித விண்வெளி ஓடத்தை ஜி.எஸ்.எல்.வி. மார்க் - 3 ராக்கெட் மூலம் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது என்றார் ராதாகிருஷ்ணன்.
No comments:
Post a Comment