Saturday 16 July 2011

கறுப்புப் பண சிறப்பு விசாரணை குழுவுக்கு மத்திய அரசு எதிர்ப்பு

புது தில்லி : கறுப்புப் பணம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) அமைக்க மத்திய அரசு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.கறுப்புப் பணம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்து, திரும்பப் பெற வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.முன்னதாக வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் போடப்பட்டுள்ள கறுப்புப் பணம் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.பி. ஜீவன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. இக்குழுவின் துணைத் தலைவராக எம்.பி. ஷா நியமிக்கப்பட்டுள்ளார். 

இக்குழுவில் மத்திய ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு (ரா) அமைப்பின் உறுப்பினர்கள் 13 பேர் இடம்பெற்றுள்ளனர்.இதேபோல உயர் நிலைக் குழு ஒன்றையும் (ஹெச்எல்சி) அரசு அமைக்கலாம் என நீதிமன்றம் பரிந்துரைத்தது. இக்குழுவும் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அங்கமாக செயல்படலாம் என குறிப்பிட்டிருந்தது.

இவ்வாறு சிறப்பு விசாரணைக் குழு அமைப்பதற்கான சாத்தியங்கள் குறித்து உள்துறை, நிதி அமைச்சகங்கள், சட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தின. அட்டர்னி ஜெனரல் வாஹன்வதி, மற்றும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.இதன் பின் உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

அதில், கறுப்புப் பணம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்க வேண்டுமென கூறியிருப்பதையும் பரீசிலித்து திரும்பப் பெற வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது.கறுப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வரும் விவகாரத்தில் மத்திய அரசு எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 

இந்த விஷயத்தில் மத்திய அரசின் விளக்கத்தை முழுவதுமாக உச்ச நீதிமன்றம் தெரிந்து கொள்ளவில்லை என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இதேபோல, உச்ச நீதிமன்றம் ஜூலை 4-ஆம் தேதி அமைத்த பி.பி.ஜீவன் தலைமையிலான விசாரணைக் குழு மறுபரீசிலனை செய்ய வேண்டுமென்று தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment