Saturday 16 July 2011

டெல்லி போலீஸ் மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி


புது தில்லி : நாட்டையே பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கிய வோட்டுக்குப் பணம் அளித்த விவகாரத்தை விசாரிப்பதில் தில்லி போலீஸ் காட்டும் மெத்தனப் போக்கை உச்ச நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது.

2008-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது 3 பாஜக எம்.பிக்கள் தங்களுக்கு லஞ்சப் பணம் அளிக்கப்பட்டதாக ரூ. 1 கோடியை மக்களவைத் தலைவர் முன்பாகக் கொண்டு வந்து ஒப்படைத்தனர்.


அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டதால் அப்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கம்யூனிஸ்ட் கட்சிகள் விலக்கிக் கொண்டன. இதனால் அரசு கவிழ்வதிலிருந்து தப்பிக்க தங்களுக்கு லஞ்சப் பணம் அளித்ததாக பாஜக எம்.பி.க்கள் அசோக் அர்கல், ஃபாகன் சிங் குலாஸ்தி, மஹாவீர் பகோரா ஆகியோர் குற்றம் சாட்டியிருந்தனர்.

இந்த வழக்கு தொடர்பான மனுவை முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஜே.எம். லிங்டோ உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கில் தொடர்புடைய அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தார். 

இந்த வழக்கு விசாரணை குறித்து இதுவரை தில்லி போலீஸார் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) கூட பதிவு செய்யவில்லை. நாடாளுமன்ற கூட்டு நடவடிக்கைக் குழு கூட இது குறித்து உறுதியான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. எனவே இந்த வழக்கு விசாரணைக்கு தனி புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும் என்று லிங்டோ தனது மனுவில் வலியுறுத்தியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி அஃப்தாப் ஆலம் முன் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய தில்லி போலீஸின் பதில் ஏமாற்றமும் அதிர்ச்சியும் அளிப்பதாக நீதிபதி கூறினார். கடந்த இரண்டு ஆண்டுகளில் விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் எட்டப்படாதது ஆச்சர்யமாக உள்ளதாக நீதிபதி தெரிவித்தார். 

விசாரணை என்பது விரைவாக நடத்தப்பட்டால்தான் முடிவு விரைவாக எடுக்க முடியும் என்று நீதிபதி தெரிவித்தார்.ஆனால் தில்லி போலீஸின் விசாரணை அறிக்கையைப் பார்க்கும் போது அது விசாரணை அறிக்கை போலவே இல்லை. மற்றவர்கள் கூறிய தகவலை அப்படியே தொகுத்து நீதிமன்றத்துக்கு கதையாக தந்துள்ளீர்கள் என்று நீதிபதி கடுமையாக சாடினார். 

இந்த விஷயத்தில் போலீஸார் எவ்வித முடிவையும் எடுக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக எவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்காதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார்.

மக்களவைச் செயலர் அளித்த புகாரின் பேரில் தில்லி போலீஸ் மேற்கொண்ட விசாரணை முழுக்க முழுக்க மற்றவர்கள் அளித்த கருத்துகளின் தொகுப்பாக உள்ளது. போலீஸ் விசாரணை முடிவு எதுவும் அதில் இல்லை என்று நீதிபதி தெரிவித்தார்.

இந்த வழக்கு விசாரணை தொடர்பாக இரண்டு வார காலத்திற்குள் புதிய விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தில்லி போலீஸýக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment