Saturday, 16 July 2011

பர்தா ஒரு பார்வை

பர்தா

இஸ்லாம் பெண்களுக்கு கட்டாயப்படுத்தும் கடமைகளில் பர்தாவும் ஒன்றாகும். ஒரு முஸ்லிம் பெண் அந்நிய ஆண்களுக்கு முன்வர அவசியப்படும் போது அவள் தன்னை மார்க்க ஷரீஅத்படி முறையாக மூடிமறைத்து வருவது அவசியமாகும். மார்க்க ஒழுக்கத்துக்கு கட்டுப்பட்டு அவள் தன்னை மூடிமறைத்துக்கொள்ள பயன் படும் சாதனமே பர்தா ஆகும். பர்தா ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பாகவும். அந்நிய ஆண்களின் தீயப்பார்வை தம்மீது விலாமல் பாதுகாத்துக்கொள்ள பர்தா ஒரு பெண்ணுக்கு மிக மிக அவசியமாகிறது.

இறைவனின் கட்டளை

“(நபியே!) விசுவாசமுள்ள பெண்களுக்கு நீர் கூறும் அவர்கள் தங்கள் பார்வையைக் கீழ் நோக்கியே வைத்து,
தங்கள் கற்பையும் இரட்சித்துக் கொள்ளவும். அன்றி, தங்கள் தேகத்தில் (பெரும்பாலும்) வெளியில் இருக்கக் கூடியவைகளைத் தவிர, தங்கள் (ஆடை, ஆபரணம் போன்ற) அலங்காரத்தை வெளிக்காட்டாது மறைத்துக் கொள்ளவும். தங்கள் முந்தானைகளால் மார்பையும் மறைத்துக் கொள்ளவும். பெண்கள் தங்களுடைய கணவர்கள், தங்களுடைய தந்தைகள், தங்களுடைய கணவர்களின் தந்தைகள், தங்களுடைய குமாரர்கள், தங்களுடைய கணவர்களின் குமாரர்கள், தங்களுடைய சகோதரர்கள், தங்களுடைய சகோதரர்களின் குமாரர்கள், தங்களுடைய சகோதரிகளின் குமாரர்கள் அல்லது (முஸ்லிமாகிய தங்களுடைய இனத்தாரின் பெண்கள், தங்களுடைய அடிமைகள், அல்லது பெண்களின் விருப்பமுற்றுத் தங்களை அண்டி ஜீவிக்கும் ஆண்கள், பெண்களின் மறைவான அவயவங்களை அறிந்து கொள்ளாத சிறு பிராயத்தையுடைய (ஆண்) குழந்தைகள் ஆகிய இவர்களைத் தவிர, மற்றெவருக்கும் (தாங்கள் அணிந்திருக்கும் ஆடை, ஆபரணகள் போன்ற) தங்களுடைய அலங்காரத்தைக் காட்ட வேண்டாம். அன்றி தங்களுடைய அலங்காரத்தில் மறைந்திருப்பதை அறிவிக்கும் நோக்கத்துடன் தங்களுடைய கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம். விசுவாசிகளே! (இதில் ஏதும் உங்களில் தவறு ஏற்பட்டுவிட்டால்) நீங்கள் சித்தி பெரும் பொருட்டு, அல்லாஹ்வின் பக்கமே பாவமன்னிப்பைக்கோரி, (உங்கள்) மனதைத் திருப்புங்கள்.”
                                                                                                                                                                                        அல் குர்ஆன்: 24 :31

பெண்களின் நிலை

ஆனால் பர்தாவின் அவசியத்தை எத்தனை முஸ்லிம்கள்தான் இன்று புரிந்துக்கொண்டுள்ளார்கள்? அதன் உண்மை நிலையை எத்தனை பேர்தான் தெரிந்துக்கொண்டிருக்கிறார்கள்? பர்தா என்பது பெண்கள் வெளியில் போகும் போது போட்டுக்கொள்ளும் ஒரு போர்வை மட்டுமே என்று நாம் நினைத்திருக்கிறோம். ஆனால் அதுவல்ல பர்தா வீட்டிலேயும் சரி, வெளியிலும் சரி பெண்கள் எங்கிருந்தாலும் அந்நிய ஆண்களின் பார்வையிலிருந்து பாதுகாத்துக்கொள்வதே பர்தா ஆகும். ஆனால் பெண்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா? வீட்டில் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். மச்சான், சொந்தக்காரன், இவர்களின் முன் பர்தா தேவையில்லை. ஆனால் வெளியில் போகும் போது மட்டும் துணியை எடுத்து போர்த்திக்கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். உண்மையில் இது பர்தா ஆகாது. இது வெளி வேஷமாகும். இன்று எங்கள் கல்யாண வீடுகளில் எத்தனையோ அனாச்சாரங்கள். அதில் ஒன்று கல்யாண வீடுகளில் எங்கள் முஸ்லிம் பெண்கள் நடந்துக்கொள்ளும் முறை படு மோசம. கல்யாண வீடுகளில் பெண்கள் பர்தா இல்லாமல் முந்தாநிகளை சரியாக அணியாமல் தன் கணவன்மார்களின் கூட்டாளிகளிடம் சாதாரணமாக பேசி அரட்டை அடிக்கிறார்கள். இதை கணவனும் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கிறான். இதேபோல கல்யாண வீடுகளில் முஸ்லிம் பெண்களும், ஆண்களும் மறைவுயில்லாமல் சரிசமமாக டைனிங் டேபலில் அமர்ந்து உணவருந்துகிறார்கள். திருமணத்தை செய்கிறவர்கள் இப்படி ஏற்பாடையும் செய்துவிடுகிறார்கள். இங்கு பர்தாவும் இல்லை, கத்திரிக்காயும் இல்லை. எவன் வேண்டுமானாலும் இவளை வேண்டுமானாலும் பார்க்கலாம், ரசிக்கலாம். இதுதான் இன்று நம் பெண்களின் பர்தாவின் அழகு. வெட்கம், நாணம, கூச்சம் இதுயெல்லாம் பறிப்போய்விட்ட நிலையில் இன்று முஸ்லிம் பெண்கள் இருக்கிறார்கள். இன்று நாம் நினைக்கிறோம் எவன் பார்த்தல் என்ன பார்த்துவிட்டு போகட்டுமே அப்படியென்ன மத்த பெண்களிடம் இல்லாதது நம்மிடம் இருக்கிறது என்ற அகங்காரம் சில பெண்களிடம். மற்றவர்கள் பார்ப்பதற்காகத்தானே அழகழகான சல்வார் உடுக்குறோம் அழகான முந்தானிகள் போடுறோம். கண்ணை கவரும் அலங்காரம் செய்றோம், உதடுகளுக்கு லிப்ஸ்டிக் பூசுறோம் என்ற திமிர் சில பெண்களிடம் இப்படி எந்தளவுக்கு தங்கள் உடலை அலங்காரத்தை அந்நிய ஆண்களுக்கு காட்சி பொருளாக்க முடியுமோ அந்தளவுக்கு காட்டிவிட்டு கல்யாணம் முடிந்தப்பின் இவர்கள் வெளியே செல்வதை பார்த்தால் முழு ஷரீஅத்தையும் பேணி பர்தாவோடு செல்வார்கள். இது முனாபிக்தனத்தை காட்டுகிறது.
 

மாணிக்கம் மறைத்து வைக்க
எது ஒன்றுக்குமே ஓர் எல்லை வகுத்துவிட்ட இஸ்லாம், முஸ்லிம் மாதர்கள் கைக்கொள்ளவேண்டிய ‘பர்தா’ முறைக்கும் ஒரு வரையறை உருவாக்கிவிட்டது. எத்தகையோருடன் பெண்கள் எப்படி நடந்துக்கொள்ள வேண்டுமென்பதை, அல்லாஹ், ஒரு நீண்ட பட்டியலையே தயாரித்துக்கொடுத்து விட்டான். நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அன்னவர்கள் மொழிவழியாக ‘பர்தா’ வின் செயல் முறை என்ன? கருத்தென்ன? காரணமென்ன? பலன் என்ன? என்பதையெல்லாம் மிகத் துல்லியமாகக் காண முடிகிறது. சட்டமேதைகள் இந்த முறையை அணு அனுவாகப் பிரித்துக் காட்டித் திட்டம் தீட்டித் தந்து விட்டனர் முஸ்லிம்களுக்கு. ஒழுங்கு பெற செயல் படுபனர்கள் வெற்றிவாகை குடிக்கொண்டிருக்கின்றனர். வக்கிரபுத்தி கொண்டோர், வாது செய்த வண்ணமே வீழ்ச்சியடைந்து வருகின்றனர். மாணிக்கங்களை மறைத்து வைப்பதிலே தான் மதிப்பு உயருகிறது. வெளியிலே வீதிகளிலே புலன்க விட்டால், கூழாங் கல்லுக்கும், மாணிக்கத்திற்கும் வித்தியாசம் தெரியாது போய்விடும். பெண்கள் இயற்கையிலேயே பலஹீனமாகப் படைக்கப்பட்டவர்கள். அவர்களது சொல்லும், செயலும், உணவும், உடையும், புழக்கமும் எல்லை மீறினால் அனர்த்தத்தை விளைவிக்கும். இதுவே காலக் கண்ணாடியிலே நாம் காணும் காட்சிகள். ‘நாகரிகமுள்ளவர்கள் நாம்’ எனப் பறை சாற்றிக்கொண்டு, தமது வீட்டுப் பெண்களை எல்லை மீறிவிட்டு கட்டவிழ்த்து விட்டுக் கண்டதே காட்சி! கொண்டதே கோலம்! எனத் திரிபவர்களது முன் மாதிரி நமக்கு வேண்டாம்! நாம் முஸ்லிம்கள்! உலக மக்களுக்கு நாகரீகம் கற்பித்தவர்கள், நல்ல பழக்க வழக்கங்களை பயன்பாடுகளை வளர்த்தவர்கள். எனவே, எந்த விஷயத்திலும் மனம் போன போக்கிலே போகக் கூடாது, பேசக்கூடாது! எதனை நமது முன்னோர்கள் நமக்குப் போதித்தார்களோ, அதன்படியே நாம் நடந்து காட்ட வேண்டும். அதிலேதாம் நமது இக, பர இரு வாழ்விலும் வெற்றி உண்டு.


மூன்று வகையான ‘பர்தா’ விதிகள்!

“நபியே! உம்முடைய மனைவிகளுக்கும், உம்முடைய புதல்விகளுக்கும், விசுவாசிகளின் பெண்களுக்கும் (அவர்கள் வெளியில் செல்லும்பொழுது) தங்களுடைய முந்தானைகளை இறக்கிக் கொள்ளும்படி நீர் கூறுவீராக. அவர்களை அறிந்து கொள்வதற்காகவும், அவர்களுக்குத் தொந்தரவு கொடுக்காமலிருப்பதற்காகவும் இதுவே மிகச் சரியானதாகும். மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், அன்புடையோனாகவும் இருக்கிறான்.”
                                                                                                                                                                                       அல் குர்ஆன்: 33: 59


‘பர்தா’ வை உபயோகிக்கும் முறை மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது, அதன் அமைப்பை விளக்கிக் கொள்வோம்.


1. முதல் வகை: முகம், உள்ளங்கை, பாதங்கள் மட்டும் தெரியக்கூடிய அளவில் விட்டு வைத்து, உடலின் மீதி எல்லாப் பகுதிகளையும் மூடி மறைப்பது, இது ஆகக் கடைசி தரமான ‘பர்தா’ அனுஷ்டிக்கும் முறையாகும்.
2. இரண்டாவது வகை: முகம், உள்ளங்கை, பாதங்களையும் மூடக்கூடிய அளவிலுள்ள ‘புர்கா’ வை அணிந்து, உடலின் எல்லாப் பாகத்தையும் மூடி மறைப்பது, இது நடுத்தரமான ‘பர்தா’ அனுஷ்டிக்கும் முறையாகும்.
3. மூன்றாவது வகை: ஒரு பெண், திரை அல்லது சுவருக்குப் பின்னிலிருந்துதனது வாழ் நாட்களைக் கழிப்பது, அவள் தரிக்கும் ஆடைகள் கூட அன்னியப்புருடர்களின் பார்வையில் படாதவாறு பாதுகாப்பது. இது முதல் தரமான ‘பர்தா’ அனுஷ்டிக்கும் முறையாகும்.



முதல் வகைக்குரிய ஆதாரம்!

 
‘பர்தா’ வை எப்படி அனுஷ்டிப்பது என்பதை, திருக்குர்ஆனின் 2:31, 24:60, 33:33, 33:59 ஆகிய வசனங்கள் மூலம் அறிந்து கொண்டோம். இதில், திருக்குர்ஆனின் 24:31 வசனம் (15- ஆவது பக்கத்திளுள்ளது) ‘பர்தா’ வின் முதல் வகையைக் குறிப்பதாகும். இது, ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களது அவ்வவ்போதையை சம்பவங்களையொட்டி, ‘பர்தா’ வைக் குறித்துக் கூறிய உபதேசங்களையும், பர்தாவின் மற்ற இரண்டு வகைகளுக்குரிய ஆதாரங்களையும் கவனிப்போம்.

இரண்டாவது வகைக்குரிய ஆதாரம்!

 
ஹஸ்ரத் அஸ்மா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களிடம் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினதாக ஹஸ்ரத் அபூதாவுத் (ரலியல்லாஹு அன்ஹு) ஆதாரம் கூறுகிறார்கள். “ஓ அஸ்மாவே! ஒரு பெண் பருவமடைந்து விட்டாளேயானால், அவள் (நாயகமவர்கள் தம்முடைய முகத்தையும் உள்ளங்கைகளையும் சுட்டிக்காட்டி) இவற்றைத் தவிர தன் உடலின் எந்தப் பாகத்தையும் அன்னியப் புருடன் முன் முன் திறந்து காட்ட அனுமதியில்லை.” “பெண்கள், தமது கால் சட்டைகளை (கெண்டைக்காலிலிருந்து) ஒரு ஜான் கீழே தொங்கவிட்டுக் கொள்ளவும்” என்று ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறியதும், “அவர்களது பாதங்கள் இந்த நிலையில் வெளித்தெரியுமே!” என்று ஹஸ்ரத் உம்மு ஸல்மா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் கேட்டார்கள். “அப்படியானால், ஒரு முழம் தொங்க விட்டுக் கொள்ளட்டும்” என்றார்கள் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள்” என்று, ஹஸ்ரத் அபூதாவுத் (ரலியல்லாஹு அன்ஹு) ஆதாரம் கூறுகிறார்கள். ஒருதடவை, ஒரு பெண், ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களிடம் வந்து “யா ரசூலுல்லாஹ்! நம்மில் யாருக்கேனும் துப்பட்டி (போர்வை) இல்லையெனில், (இதுப் பெருநாள் தொழுகைக்கு எப்படிப் போவது?” என்று கேட்டபொழுது நாயகமவர்கள், “அவளுடநிருப்பவன், அவளைத் தனது துப்பட்டியால் போர்த்திக் கொள்ளவும்” என்று கூறினார்கள். (இந்த நாயக உத்தரவு பிறகு மாற்றப்பட்டுவிட்டது) மேற்காணும் இந்த நாயக வாக்கியங்களும், “பெண்கள், தங்கள் மீது துப்பட்டியைப் போட்டுக் கொள்வார்களாக” என்ற திருக்குர்ஆன் வசனமும், ‘பர்தா’ வின் இரண்டாவது வகையை அடிப்படையைக் கொண்டதாகயிருக்கின்றன.

மூன்றாவது வகைக்குரிய ஆதாரம்!

 
இனி, ‘பர்தா’ வின் மூன்றாவது வகைக்குரிய ஆதாரங்களைக் கவனிப்போம்: திருக்குர்ஆனில் ஓரிடத்தில், “(ஓ பெண்களே!) நீங்கள், உங்களுடைய வீடுகளில் இருந்து கொள்ளுங்கள்” (33: 33) என்றும், மற்றோரிடத்தில், “மேலும், நீங்கள் பெண்களிடமிருந்து ஏதேனும் பொருள், உபயோகத்திற்காகக் கேட்பதாயிருந்தால், திரை மறைவிலிருந்து கொண்டு கேளுங்கள்” (33: 53) என்றும், வேறோரிடத்தில், “மேலும், பெண்களை அவர்களுடைய வீடுகளிலிருந்து வெளிக் கிளப்பாதீர்கள், மேலும் அவர்களும் (அந்தப் பெண்களும்) வெளிக் கிளம்ப வேண்டாம்” (65: 1) என்னும் திருவசனங்கள் காணப்படுகின்றன.


குருடர் முன்னாலும் ‘பர்தா’ அவசியமே

ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள், ஹஸ்ரத் உம்முஸல்மா, ஹஸ்ரத் மைமூனா (ரலியல்லாஹு அன்ஹுமா) ஆகியோரிடம், கண் பார்வையற்ற ஹஸ்ரத் அப்துல்லாஹ் பின் உம்மெ மக்தூம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களைச் சுட்டிக்காட்டி, ‘இவர்முன் ‘பர்தா’ அனுஷ்டியுங்கள்’ என்று கூறினார்கள். ஹஸ்ரத் உம்மு ஸல்மா (ரலியல்லாஹு அன்ஹா) கூறுகிறார்கள்: ‘நான், நாயகமவர்களிடம், “யா ரஸூலுல்லாஹ், இவர் குருடரல்லவா? நம்மை எப்படிக் காண முடியும்?” என்று கேட்டேன். அதற்கு நாயகமவர்கள், “நீயும் குருடாகி விட்டாயா நீயும் அவரைப் பார்க்க முடியவில்லை?” என்றார்கள். இந்த நாயக வாக்கிற்கு இமாம் அஹ்மத், திர்மிதி அபூதாவுத் ஆதாரம் தருகிறார்கள். ஹஸ்ரத் ஸவுதா பின்த ஜம்ஆ (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களிடம் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் சொன்னார்கள்: “நீர், (ஜம்ஆவுடைய அடிமையின் மகனோடு) ‘பர்தா’ அனுஷ்டிக்கவும்.” (அந்தப் பையன் ஜம்ஆவின் மகன்தான், அவருடைய அடிமையின் வயிற்றிலிருந்து பிறந்திருக்கிறான் என நாயகமவர்கள் முடிவு செய்திருந்தார்கள். ஆனால் ஹஸ்ரத் ஸவுதா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களை அந்தப் பையனோடு ‘பர்தா’ அனுஷ்டிக்க வேண்டுமென்று நாயகமவர்கள் உத்தரவிட்டதற்குக் காரணமென்னவென்றால் அந்தப் பையனுடைய முகச்சாயல். உத்பாவுடைய முகச்சாயலோடு அதிகம் ஒத்திருந்தது. உத்பாவும் அந்தப் பையன் தனக்குப் பிறந்தவன்தான் என வாதாடிக்கொண்டிருந்ததை, ‘ஷரீஅத்’சட்டப்படி நீக்கப்பட்டு விட்டது) இந்த நாயக சம்பவத்தை ஆதாரம் கூறுபவர்கள் குறிப்பிடுகிறார்கள். ‘நாயகத்தின் இந்த உத்தரவிற்குப் பிறகு, அந்தப் பையன் தனது வாழ் நாள் முழுமையிலும் ஒரு தடவை கூட ஹஸ்ரத் ஸவுதா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களைப் பார்க்கவே இல்லையென்று. (புஹாரி)
‘பெண், திரைமறைவில் இருக்கக்கூடியவள், அவள் வெளிவருவதை எதிர்பார்த்த வண்ணமாக ஷைத்தான் (அவளது வீட்டு வாயிற்படி முன்) இருந்து கொண்டிருக்கிறான்.’ இந்த நாயக வாக்கு ‘திர்மிதி’ யிலிருக்கிறது. மேற்கண்ட திருக்குர்ஆன் வசனங்களிலும், நாயக வாக்கியங்களிலும், நமக்கு ‘பர்தா’ அனுஷ்டிக்கவேண்டிய மூன்றாவது வகைக்குரிய ஆதாரங்கள் கிடைக்கின்றன. இந்த மூன்று வகையான ‘பர்தா’ முறைகளும் நம்மீது கடமையாக்கப்பட்டுள்ளன, ‘ஷரீஅத்’ தும் இம் மூன்று வகையையும் அனுமதித்திருக்கிறது. இவற்றின் இடையே செயல்படுவதில் வித்தியாசம் தெரியவந்தாலும், இம்மூன்றும் அதனதனிடத்திலே சரியான முலையில் தானுள்ளன. வித்தியாசப்படுத்துவதற்குக் காரணம், சூழ்நிலையைப் பொறுத்துச்செயல்படுவதற்கே. எனவே, இந்த வித்தியாசத்தினால் எது ஒன்றும் கடமையில் குறைவு கொள்ளவில்லை. ஒவ்வொருவருடைய நிலையையும், அந்தஸ்தையும், இறையச்சத்தையும் பொறுத்துச் செயல்படச் சவுகரியமாக அமைக்கப்பட்டுள்ளது.


‘பர்தா’ ஏன் அவசியப்படுகிறது!


‘பித்னா’ (குழப்பம்) விலிருந்து காப்பதே ‘பர்தா’ வின் முக்கிய நோக்கம், உலகிலே பல குழப்பங்கள், சண்டைகள், பகைமைகள், கொலைகள் ஏற்படக் காரணமாயிருப்பவர்கள் பெண்களாகவே இருக்கின்றனர். இது நாம் கண் கூடாகக் கண்டு வரும் ஓர் உண்மை. எனவேதான், ‘ஒரு பெண் வெளியில் வருவதை ஷைத்தான் (அவளால் குழப்பம் செய்வதற்காக) எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறான்.” என்று ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள், கூறியிருக்கிறார்கள். இதே நாயக வாக்கைப் பிரதிபலிக்கும் முறையில் கீழ்வரும் வசனம் காணப்படுகிறது. ‘நபியுடைய மனைவிகளே! நீங்கள் மற்ற (சாதாரணப்) பெண்களைப்போலன்று, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயப்பட்டவர்களாயின், (அந்நியருடன் பேசும் சமயத்தில்) நளினமாகப் பேசாதீர்கள். ஏனென்றால், எவருடைய இருதயங்களில் (பாவ) நோய் இருக்கின்றதோ, அவர்கள் (தவறான) விருப்பங்களைக் கொள்ளக்கூடும். நீங்கள் (எதைப்பற்றிப் பேசவிருந்தாலும்) யதார்த்த வாதிகளைப் போல (கண்டிப்புடன்) பேசி விடுங்கள்.” ஒரு பெண், அவள் நபியின் மனைவியுடைய அந்தஸ்து கொண்டிருந்தாலும்கூட, ‘பித்னா’ வை விட்டுப்பாதுகாப்பாயிருக்க வேண்டுமென்பதே அல்லாஹ்வின் இந்த எச்சரிக்கை! இந்த ‘பித்னா’ எந்த இடத்தில், எவரால், எப்பொழுது ஆரம்பமாகும் என்று திட்டமாகச் சொல்ல முடியாதாகையால், எந்தச் சமயத்திலும், எந்தப் பருவத்திலும் பெண்கள் பேணுதலாயிருப்பதே சாலவும் சிறந்தது.



‘பர்தா’ அணியாதவர்களுக்கு கிடைக்கும் தண்டனை
ஸைய்யதினா அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள்: “ஒரு நாள் நானும், பாத்திமாவும் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் வீட்டுக்குப் போனோம். அந்த நேரம் அன்னவர்கள் அழுதுக்கொண்டிருந்தார்கள். அதைப்பார்த்த பாத்திமா நாயகி (ரலியல்லாஹு அன்ஹா) கண் கலங்கி, கலக்கமடைந்து “அருமை தந்தையே! தாங்கள் அழு காரணம் என்ன?” எனக்கேட்டார்கள். அப்போது ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள்,: “அருமை மகளே! நான் மிஹ்ராஜ் சென்று இருந்த இரவில் நரகத்தில் சில பெண்களை கண்டேன். அவர்கள் வேதனைப்படுவதற்கு காரணங்களை தெரிந்துக்கொண்டேன் அதை நினைத்தே அழுகிறேன்.” என்று கூறினார்கள். அதற்கு பாத்திமா நாயகி (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் “அருமைத்தந்தையே! அந்தப்பெண்கள் எந்த காரணத்துக்காக, எப்படி வேதனை செய்யப்படுகிறார்கள்? எனக்கேட்க, அதற்கு ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள், “ஒருப்பேன் அவளுடைய முடியால் தொங்கிக்கொண்டிருந்தால் அவளுடைய மூளை பயங்கரமாக கொதித்துக்கொண்டிருந்தது. காரணம் அந்தப்பெண் தன்னுடைய முடியை அந்நிய ஆண்களின் பார்வையிலிருந்து மறைத்துக்கொள்ளாதவள். இன்னொரு பெண்ணின் உடல் நெருப்பிலான கத்தரிக்கோலால் வேட்டப்பட்டுக்கொண்டிருந்தது. அதற்கு காரணம் அவள் தன்னுடைய உடலையும், அலங்காரத்தையும் அந்நிய ஆண்களுக்கு காட்டிக்கொண்டிருந்தவள் என்று கூறப்பட்டது.

No comments:

Post a Comment