Wednesday, 29 June 2011

அஜ்மீர் குண்டுவெடிப்பு:கேரளாவைச்சார்ந்த சுரேஷ் நாயர் உள்பட நான்குபேர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிப்பு

புதுடெல்லி:அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் கேரளாவைச்சார்ந்த ஹிந்துத்துவா பயங்கரவாதி சுரேஷ் நாயர் உள்பட நான்கு பேரை தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்துள்ளது.




இவர்களை கைதுச்செய்ய போதிய தகவல்களை அளிப்பவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுரேஷ் நாயர், ரமேஷ் கோஹில், மஹத் பாயி, பாவேஷ் பட்டேல் ஆகியோர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மஹத் பாயியை சுனில்ஜோஷி கொலை வழக்கிலும் என்.ஐ.ஏ தேடி வருகிறது.

2007 டிசம்பர் 29-ஆம் தேதி சுனில்ஜோஷி கொலைச்செய்யப்படும் முன்பு மஹத் பாயி சுனில் ஜோஷியுடன் தங்கியிருந்தான்.பின்னர் அவன் தலைமறைவாகிவிட்டான். மூன்று நபர்கொல்லப்பட்டு 17 பேருக்கு காயமேற்பட்ட அஜ்மீர் குண்டுவெடிப்பின் சதித்திட்டம் தீட்டியதிலிருந்து 2007 அக்டோபர் மாதம் 11-ஆம் தேதி அஜ்மீர் தர்காவில் குண்டுவெடிப்பு நிகழும் வரையிலான நடவடிக்கைகளில் நான்கு பேருக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏ வெளியிட்ட நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.கொல்லப்பட்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுனில்ஜோஷியின் கட்டளைப்படி இவர்கள் அஜ்மீர் தர்காவில் குண்டை வைத்துள்ளனர்.

குண்டுவெடிப்பிற்கு டைமராக உபயோகிக்க 11 சிம்கார்டுகளும், நான்கு நோக்கியா ஃபோன்களும் மேற்கண்ட நான்குபேரும் சேர்ந்தே வாங்கியுள்ளனர்.2004 ஏப்ரல் மாதம் உஜ்ஜயினில் நடந்த கும்பமேளாவில் இந்த நான்குபேரும் இவ்வழக்கில் மற்றொரு குற்றவாளியான அஸிமானந்தாவுடன் சந்திப்பை நடத்தினர் என என்.ஐ.ஏ கூறுகிறது.குஜராத் மாநிலம் கேதா மாவட்டத்தில் தாகோரில் சுரேஷ் நாயர் தங்கியிருந்தார் என என்.ஐ.ஏ முன்னர் கண்டறிந்தது.


குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் சுரேஷ் நாயர் தலைமறைவாக தங்கியுள்ளார் என தகவல் கிடைத்ததன் அடிப்படையில் இம்மாதம் முதல்வாரத்தில் என்.ஐ.ஏ புலனாய்வு குழு குஜராத்திற்கு சென்று விசாரணை நடத்தியிருந்தது.சுரேஷ் நாயரின் தந்தை தாமோதரன் நாயரிடம் தேசிய புலனாய்வு ஏஜன்சி விசாரணை நடத்தியிருந்தது.

No comments:

Post a Comment