Wednesday 29 June 2011

தமிழகத்தில் கேஸ் விலை ரூ 14.73 குறைப்பு! - முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

சென்னை: தமிழகத்தில் சமையல் எரிவாயு மீதான மதிப்புக் கூட்டு வரி 4 சதவீதம் குறைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதன் மூலம் கேஸ் விலை சிலிண்டருக்கு ரூ 14.73 குறையும்.


வரும் ஜூலை 1-ம்தேதி முதல் இந்த விலைக்குறைப்பு நடைமுறைக்கு வரும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
அண்மையில் டீஸல் லிட்டருக்கு ரூ 3-ம், கேஸ் சிலிண்டருக்கு ரூ 50ம், மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ 2-ம் உயர்த்தப்பட்டது.

மத்திய அரசின் இந்த விலை உயர்வு மக்களைக் கடுமையாக பாதித்துவிட்டது. அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் ஜிவ்வென்று உயர்ந்தன. விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி எதிர்க்கட்சிகள் மத்திய அரசைக் கேட்டுக் கொண்டன.

ஆனால் விலை உயர்வை திரும்பப் பெறுவது சாத்தியமில்லை என்றும், மாநில அரசுகள் தங்கள் வரிகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு நேற்று கடிதம் எழுதியது, அனைத்து மாநில அரசுகளுக்கும்.

இதைத் தொடர்ந்து டெல்லி உள்ளிட்ட 6 மாநில அரசுகள் வரிகளைக் குறைத்தன. டெல்லி அதிகபட்சமாக ரூ 40 வரை குறைத்தது சமையல் கேஸ் சிலிண்டருக்கு.

இப்போது தமிழக முதல்வர் ஜெயலலிதா வரிக்குறைப்பை அறிவித்துள்ளார். தமிழகத்தில் சமையல் காஸ் மீதான மதிப்பு கூட்டு வரி 4 சதவீதம் ஜூலை 1ம் தேதி முதல் குறைக்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

இதன் மூலம் காஸ் மீதான விலை 14 ரூபாய் 73 பைசா குறையும். இந்த வரி குறைப்பு மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுதோறும் 170 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இந்த வரிகுறைப்புக்கான உத்தரவை இன்று முதல்வர் பிறப்பித்துள்ளதாக தமிழக அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment