Wednesday 29 June 2011

லிபிய அதிபர் கடாபிக்கு எதிரான கைது வாரண்டை லிபியா நிராகரிப்பு

திரிபோலி: லிபிய அதிபர் முவாம்மர் கடாபிக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் பிறப்பித்த கைது வாரண்டை லிபியா நிராகரித்துள்ளது.


இது குறித்து லிபிய நீதித்துறை அமைச்சர் முகமது அல்-காமூதி கூறுகையில், "மேற்கத்திய உலகின் கருவியாக இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை எல்லாம் லிபியா ஏற்றுக் கொள்ளாது. கடாபி மற்றும் அவரது மகனுக்கு லிபிய அரசில் எந்த அதிகாரப்பூர்வமான பதவியும் இல்லை. அதனால் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை", என்றார்.

கடாபி லிபியாவை 41 ஆண்டு காலமாக ஆண்டாலும் அந்நாட்டு அரசியல் அமைப்பில் அவருக்கு எந்த பதவியும் இல்லை.

மனிதத்திற்கு எதிராக செயல்பட்டதற்காக சர்வதேச நீதிமன்றம் அதிபர் கடாபி, அவரது மகன் சைப் அல்-இஸ்லாம் மற்றும் லிபியா உளவுத்துறை தலைவர் அப்துல்லா அல்-செனுசி ஆகியோருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்தது.

லிபியாவில் கடந்த பிப்ரவரி மாத மத்தியிலிருந்து பெரும் கலவரம் வெடித்தது. கடாபிக்கு எதிரான அதிருப்தியாளர்கள் படை பலத்துடன் மோதலில் குதித்ததால், அவர்களுக்கும், கடாபி ஆதரவு ராணுவத்தினருக்கும் இடையே மோதல் உக்கிரமடைந்தது. இதில் சிக்கி இதுவரை பல ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த படுகொலையில் இந்த 3 பேருக்கும் தொடர்பு உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சஞ்சி மோனகேங் கூறுகையில், கடாபியும், அவரது மகனும், குற்றம் இழைத்தவர்கள் என்று நம்புவதற்கு போதுமான காரணங்கள் உள்ளன. அப்பாவி மக்களை கொன்ற குற்றச்சாட்டுக்கு அவர்கள் பொருத்தமானவர்களாக உள்ளனர். அவர்களது குற்றங்கள் தண்டனைக்குரியவை. செனுசி அதிபர் கட்டளைப்படி தாக்குதல்கள் நடத்தியுள்ளார் என்றார்.

கடாபி லிபியாவில் அதிகாரத்தில் இருக்கும் வரை அவர் கைது செய்யப்படுவாரா என்பது சந்தேகம் தான். இருப்பினும் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்பை லிபியா போராளிகளும், நேட்டோ ஆதரவாளர்களும் வரவேற்றுள்ளனர்.

No comments:

Post a Comment