Monday 25 July 2011

கர்நாடகா: எதியூரப்பாவுக்கு ஆர்.எஸ்.எஸ் உதவுமா குழப்பத்தில் முதல்வர்

பெங்களூர் : தான் பதவி விலகியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் வந்தால் தனது மகன் ராகவேந்திரா அல்லது தனக்கு நெருக்கமான அமைச்சர் ஷோபா கரந்லஜேவைத் தான் முதல்வராக்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் எதியூரப்பா தெரிவித்துள்ளார்.

லோக் ஆயுக்தாவின் அறிக்கையில் சுரங்க மோசடியில் கர்நாடக முதல்வர் எதியூரப்பா மற்றும் அவரது அமைச்சரவையில் உள்ள மூத்த தலைவர்கள் சிலருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து எதியூரப்பாவை உடனடியாக பதவி விலகக் கோரி காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

முதலில் எதியூரப்பாவை பதவி விலகச் சொல்ல மாட்டோம் என்று கூறி வந்த பாஜகவும் தற்போது அது குறித்து சிந்திக்கத் துவங்கியுள்ளது. இதனால் எதியூரப்பாவின் முதல்வர் பதவிக்கு ஆபத்து வந்துள்ளது.

மொரீஷியசுக்கு ஒய்வெடுக்கச் சென்ற எதியூரப்பா இன்று காலை பெங்களூர் திரும்பினார். இன்று ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார். தன்னை ஆர்எஸ்எஸ் காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் எதியூரப்பா உள்ளார்.

ஆனால், 2ஜி, ஆதர்ஷ், காமன்வெல்த் உள்ளிட்ட பல ஊழல் விவகாரங்களி்ல் சிக்கியுள்ள காங்கிரஸ் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பாஜகவை சந்திக்கு இழுப்பதால் பாஜகவும் ஊழலுக்கு எதிராக செயல்படுவது போல காட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

மேலும் எதியூரப்பாவால் தேசிய அளவில் பாஜகவின் பெயர் கெட்டுப் போய்விட்டதாக அந்தக் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் கருதுகின்றனர். ஆனால், ஆர்எஸ்எஸ் ஆதரவுடன் எதியூரப்பா தப்பி வருகிறார்.

இந் நிலையில் எதியூரப்பாவை பதவி விலகச் செய்தால் மட்டுமே கட்சியின் பெயரைக் காக்க முடியும் என ஆர்எஸ்எஸ்சிடம் பாஜக தலைவர்கள் சில எடுத்துக் கூறி வருகின்றனர். இதனால் ஆர்எஸ்எஸ் ஒப்புக் கொண்டால், எதியூரப்பா பதவி விலகியே ஆக வேண்டிய நிலை ஏற்படும்.

ஒரு வேளை தான் முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டி வந்தால் தனது மகன் ராகவேந்திரா அல்லது தனக்கு நெருக்கமான அமைச்சர் ஷோபா கரந்லஜேவைத் தான் முதல்வராக்க வேண்டும் என்று எதியூரப்பா நிபந்தனை போட ஆரம்பித்துள்ளார்.

இதைச் செய்யாவிட்டால் அரசையே கவிழ்ப்பேன் என்றும் அவர் எச்சரிக்க ஆரம்பித்துள்ளார். பாஜகவில் பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் எதியூரப்பாவின் லிங்காயத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர் நினைத்தால் ஆட்சியைக் கவிழ்க்கவும் முடியும்.

இதையடுத்து எதியூரப்பாவிடம் சாமாதானம் பேசி அவரை பதவி விலகச் செய்யும் முயற்சிகளில் பாஜக இறங்கியுள்ளது.

ராஜினாமா செய்ய மாட்டேன்-எதியூரப்பா:

இதற்கிடையே மொரீஷியசிலிருந்து பெங்களூர் திரும்பிய எதியூரப்பா விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசுகையில், கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை.

நான் பதவி விலகுவேன் என்று நம்பும் எதிர்கட்சிகள் ஏமாற்றம் அடைவது உறுதி. லோக்ஆயுக்தா இதுவரை தனது அறிக்கையை அரசுக்கு அளிக்கவில்லை. லோக் ஆயுக்தாவிடம் இருந்து அறிக்கையைப் பெற்றவுடன்தான் அனைத்து கேள்விகளுக்கும் நான் பதிலளிக்க இயலும்.

இப்போதுவரை லோக்ஆயுக்தா சந்தோஷ் ஹெக்டே மீது அதிக மரியாதை வைத்துள்ளேன். அனைவரும் லோக் ஆயுக்தாவின் அறிக்கைக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம். அந்த அறிக்கையைப் பெற்றவுடன், கர்நாடகாவின் 6 கோடி மக்களுக்கும் அரசின் பதிலை அளிப்பேன்.

தொலைபேசி ஒட்டுக்கேட்பு-மன்னிக்க முடியாத குற்றம் என்கிறார் எடியூரப்பா:

கர்நாடக லோக்ஆயுக்தாவின் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்டது மன்னிக்க முடியாத குற்றம் . இந்த விவகாரத்தில் மத்தியக் குழு விசாரணை நடத்த வேண்டும். இதில் பாஜகவோ நானோ சம்பந்தப்படவில்லை.

தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தால் நான் மிகவும் வேதனை அடைந்தேன். இந்த விவகாரத்தில் இப்போதும்கூட தாமதமாகிவிடவில்லை. தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தை விசாரிக்க முக்கியக் குழு ஒன்றை அனுப்புமாறு பிரதமரிடம் கேட்கப் போகிறேன். இதுபோன்ற மன்னிக்க முடியாத குற்றத்தை நானோ, எனது கட்சியோ செய்ய மாட்டோம் என்றார்.

No comments:

Post a Comment