Monday 25 July 2011

தியோபந்த்: மோடியின் ஆட்சிக்கு வக்காலத்து வாங்கிய துணைவேந்தர் பதவி நீக்கம்

தியோபந்த் : குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பாராட்டியதால் பிரச்சனையில் சிக்கிய தாருல் உலூ்ம் தியோபந்த் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மெளலானா குலாம் முகம்மத் வஸ்தான்வி இன்று பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஷரன்பூர் மாவட்டத்தில் உள்ள தியோபந்த் நகரில் உள்ளது இந்தப் பல்கலைக்கழகம்.

குஜராத்தின் சூரத் நகரைச் சேர்ந்த வஸ்தான்வி கடந்த ஜனவரியில் இந்தப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரானார். இதையடுத்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், முஸ்லீம்கள் 2002ம் ஆண்டு குஜராத் கலவரத்தை மறந்துவிட வேண்டும். முதல்வர் நரேந்திர மோடியின் ஆட்சியில் குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எந்த பாகுபாடும் காட்டப்படவில்லை என்றார்.

இதற்கு பல்கலைக்கழக மாணவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து, தான் நரேந்திர மோடிக்கு ஆதரவாகப் பேசவில்லை என்று வஸ்தான்வி மறுத்தார்.

இதையடுத்து அவர் பதவி விலக வேண்டும் என்று மாணவர்கள் மத்தியில்  நெருக்குதல் ஆரம்பித்தது. இதைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் பதவி விலகுவதாக கூறிய அவர், பதவி விலகவில்லை.

இந் நிலையில் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழு இன்று அவரை பதவி நீக்கம் செய்தது.

அந்த பல்கலைக்கழக நிர்வாகத்தின் ஒப்புதல் படி  தற்காலிக துணை வேந்தராக முப்தி அபுல் காசிம் நியமிக்கப்பட்டுள்ளார்...

No comments:

Post a Comment