வங்கதேசத்தில் பொதுத்தேர்தல்கள் நடத்தும்போது கட்சிசாரா இடைக்கால அர்சாங்கம் ஒன்று பதவியில் இருக்கவேண்டும் என்று கூறும் சட்டத்தை
அந்நாட்டு நாடாளுமன்றம் இன்று ரத்து செய்திருக்கிறது.
இப்படியானதொரு சட்டம் 1990களின்
மத்தியில் அங்கே கொண்டுவரப்பட்டது. தேர்தல்களின் போது ஏற்படும் வன்முறை
மற்றும் முறைகேடுகளை முடிவுக்குக்
கொண்டுவருவதற்காக இப்படியானதொரு முறை அங்கே
அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தச் சட்டத்தை ரத்து செய்யும் இன்றைய முடிவை
எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்த்துள்ளன. ஆட்சியில் இருக்கும் கட்சி
வாக்குப்பதிவு
முறையில் தனக்கு சாதகமான முறையில் முறைகேடுகள்
செய்வதற்கு இன்றைய மாற்றம் வழிவகுக்கும் என்று எதிர்கட்சிகள் குற்றம்
சாட்டியுள்ளன.
2006 மற்றும் 2008க்கு இடையில் ஆட்சி செய்த இடைக்கால அரசாங்கத்தை இன்றைய பிரதமர் ஷேக் ஹசினா மிகக் கடுமையாக சாடியிருந்தார்.
தனக்கு அளிக்கப்பட்ட மூன்று மாத பதவிக்காலத்தை தாண்டி அன்றைய இடைக்கால அரசாங்கம் பதவியில் இருந்தது மட்டுமல்லாமல் பொதுத்தேர்தல்களை
இரண்டு ஆண்டுகள் நடத்தாமல் இழுத்தடித்தது என்பது அவரது குற்றச்சாட்டு.
அதேசமயம், தேர்தல் காலத்தில் இடைக்கால அரசாங்கம் தேவை என்கிற சட்டத்தை தான் இன்று ரத்து செய்திருப்பது அவரது அரசாங்கம் அடுத்த
தேர்தலில் முறைகேடுகளை செய்வதற்கு உதவியாக இருக்கும் என்கிற குற்றச்சாட்டை அவர் மறுத்தார்.
இன்றைய மாற்றம் என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்று கூறும் அவர் தேர்ந்தெடுக்கப்படாத நிர்வாகம் தேசிய தேர்தல்களை
மேற்பார்வை செய்யும் போக்கை இனிமேலும் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தார்.
ஆனால் இன்றைய மாற்றத்துக்கு எதிராக
தாங்கள் தொடர்ந்து போராடப்போவதாக எதிர்கட்சிகள் அறிவித்துள்ளன. இந்த
மாற்றத்திற்கு எதிராக இந்த
மாத ஆரம்பத்தில் துவங்கிய தங்களின் எதிர்ப்பு தொடரும்
என்றும் அதை மேலும் தீவிரப்படுத்தப்போவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.
நாட்டின் ஜனநாயக எதிர்காலத்திற்கு இந்த மாற்றம் நல்லதல்ல என்கிறார் சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் பாசல் அசிம்.
345 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தில் இன்றைய சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக 291 பேரும் எதிராக ஒரு உறுப்பினரும் வாக்களித்தனர்.
345 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தில் இன்றைய சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக 291 பேரும் எதிராக ஒரு உறுப்பினரும் வாக்களித்தனர்.
முன்னாள் பிரதமர் கலித ஜியாவின் தலைமையிலான பிரதான எதிர்கட்சியான பிஎன்பி கட்சியின் உறுப்பினர்கள் இந்த வாக்கெடுப்பை புறக்கணித்தனர்.
இடைக்கால அரசாங்கங்கள் நாட்டின் அரசியல் சட்டத்திற்கு முரணானவை என்று வங்கதேச உச்சநீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பளித்திருந்தது.
கடந்தகாலங்களில் நிர்வாக வல்லுநர்களடங்கிய இடைக்கால அரசுகள் 90 நாட்களுக்கு ஆட்சியில் இருப்பார்கள். அந்த காலகட்டத்தில் தேர்தல்களை
நடத்தி புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியாளர்களிடம் அரசு நிர்வாகத்தை கையளிப்பது இவர்களின் பணி.
கடைசியாக ஆட்சியில் இருந்த இடைக்கால
அரசாங்கம் ஊழலை கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக ஷேக் ஹசினா
மற்றும் கலிதா ஜியா
உள்ளிட்ட நூற்றுக்கணக்கான அரசியல்வாதிகளை சிறைக்கு
அனுப்பியது. இவர்கள் தங்களின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகவும்
முறைகேடாக
சொத்து சேர்த்ததாகவும் அப்போது குற்றம் சாட்டப்பட்டது.
ஆனால் இவர்கள் அனைவரும் 2008 ஆம் ஆண்டு நடந்த தேர்தலை ஒட்டி விடுதலை செய்யப்பட்டனர்.
அடுத்த தேர்தல் 2013 ஆம் ஆண்டு இறுதியில் நடக்க இருக்கிறது.
No comments:
Post a Comment