Friday 1 July 2011

அமெரிக்காவின் அந்நிய நாடுகள் மீதான ஆக்கிரமிப்புச்செலவு ரூ.19,40,00,00,00,00,000

வாஷிங்டன்:ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் அமெரிக்கா நடத்திய ஆக்கிரமிப்புற்கு செலவழிக்கப்பட்ட தொகை 3.7 லட்சம் கோடி டாலர் முதல் 4.4 லட்சம் கோடி டாலர் வரையாகும் (அதாவது 164 லட்சம் கோடி முதல் 194 லட்சம் கோடி வரையிலாகும்).


ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுடன் பாகிஸ்தானிலும் அமெரிக்காவின் ராணுவ ஆக்கிரமிப்பு தொடர்வதால் போர் செலவும் இனியும் அதிகரிக்கும் என ப்ரவுன் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ’போருக்கான செலவு’ என்ற தலைப்பிலான ஆய்வுக்கட்டுரை கூறுகிறது.

2001 செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதி நியூயார்க் இரட்டைக்கோபுரம் தகர்க்கப்பட்டவுடன் அல்காயிதாவின் மீது குற்றம் சுமத்தி உஸாமா பின்லேடனை பிடிக்கப்போகிறோம் எனக்கூறி ஆப்கானிஸ்தான் மீது ஆக்கிரமிப்பு போரை தொடுத்தது அமெரிக்கா.ஆப்கானில் மட்டுமே ஆக்கிரமிப்பு போருக்காக அமெரிக்கா 100 லட்சம் டாலர் தொகையை செலவிட்டுள்ளது என ஆய்வுக்கட்டுரை கூறுகிறது.

அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு போர் மூலம் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,24,475 ஆகும். இதில் ஈராக்கில் மட்டும் 1,51,472 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் 39,127 பேரும், ஆப்கானில் 33,877 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். மரணித்தவர்களில் 1,72,100 பேர் அப்பாவியான சாதாரணமக்கள் ஆவர். 

அமெரிக்க ராணுவத்தினர் 6051 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சமூக சேவகர்கள் 266 பேர் கொல்லப்பட்டனர். பத்திரிகையாளர்கள் 168 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 3,65,000 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. 78 லட்சம்பேர் வீடுகளை இழந்துள்ளனர் என ஆய்வுக்கட்டுரையின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கானில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெறப்படும் என பாரக் ஒபாமா அறிவித்ததற்கு காரணம் பெருமளவிலான போர்ச்செலவு என கருதப்படுகிறது.

No comments:

Post a Comment