Friday 1 July 2011

உ.பி. தேர்தலில் மாயாவதிக்கு மரண அடி கிடைக்கும்: சர்வே

டெல்லி: உ.பி சட்டசபைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியை இழக்கும் என்று கருத்துக் கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது. மேலும், சமாஜ்வாடி கட்சி மைனாரிட்டி ஆட்சியை அமைக்கும் என்றும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு நான்காவது இடமே கிடைக்கும் என்றும் அந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
403 தொகுதிகளைக் கொண்ட உ.பி. சட்டசபைக்கு தேர்தல் வேகமாக நெருங்கி வருகிறது. இந்த நிலையில் முதல்வர் மாயாவதி தலைமையிலான நிர்வாகம் கிட்டத்தட்ட சீர்குலைந்து கொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கு கிலோ என்ன விலை என்ற ரேஞ்சுக்குப் போய் விட்டது. தடுக்கி விழுந்தால் பாலியல் பலாத்கார வழக்குகள் குவி்ந்து வருகின்றன.

48 மணி நேரத்தில் 6 பெண்கள்-அவர்களில் பாதிப்பேர் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர வைத்தது. இதுகுறித்து கேட்டால், நாட்டில் வேறு எங்குமே பாலியல் பலாத்காரம் நடக்கவில்லையா. டெல்லியில் நடக்கவில்லையா, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் நடக்கவில்லையை என்று கூறுகிறார் மாயாவதி.

சட்டம் ஒழுங்கு மோசம், பாலியல் பலாத்காரங்கள் அதிகரிப்பு ஆகியவற்றால் மாயாவதி மீது மக்கள் அதிருப்தி பெருகி வருகிறது.

இந்த நிலையில் எடுக்கப்பட்ட சர்வே ஒன்றில் மாயாவதி அரசு, வரும் தேர்தலில் ஆட்சியை இழக்கும் என்று தெரிய வந்துள்ளது. அதேசமயம், யாருக்கும் தனிப்பெரும்பான்மை பலம் கிடைக்காது என்றும் தெரிய வந்துள்ளது.

மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சிக்கு 112 சீட்கள் மட்டுமே வருகிற தேர்தலில் கிடைக்கும். முலாயம் சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடிக் கட்சிக்கு 168 இடங்கள் கிடைக்கும். இக்கட்சி தனிப் பெரும் கட்சியாக உருவெடுக்கும். அதேசமயம், இக்கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காது.

3வது இடத்தை பாஜக பிடிக்கும். இக்கட்சிக்கு 53 இடங்கள் வரை கிடைக்கலாம். காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் காந்தியால் பெரும் பலன் கிடைக்க வாய்ப்பில்லை. அக்கட்சிக்கு 45 இடங்கள் வரை மட்டுமே கிடைக்கலாம் என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமாஜ்வாடிக் கட்சி தலைமையில் சிறுபான்மை அரசு ஆட்சியமைக்கும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. அந்த அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுக்கும். எதிர்க்கட்சி வரிசைக்கு மாயாவதி தள்ளப்படலாம் என்பது இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவாகும்.

சமாஜ்வாடிக் கட்சிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகியுள்ள போதிலும் கூட அதற்கு தனிப்பெரும்பான்மை பலம் கிடைக்கும் நிலை இல்லை. ஒரு வேளை கிடைத்தாலும் கூட மிக மெல்லிய பெரும்பான்மை பலமே கிடைக்கக் கூடும்.

மொத்த வாக்காளர்களில் 26.9 சதவீத வாக்குகளை சமாஜ்வாடிக் கட்சி பெறலாம். அதேசமயம், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 26.1 சதவீத வாக்குகள் கிடைக்கலாம்.

யாதவ சமூகத்தினரும், முஸ்லீ்ம்களும் சமாஜ்வாடிக் கட்சியின் முக்கியப் பலமாக உள்ளனர்.

அதேசமயம் தலித் வாக்கு வங்கியில் பெரும் ஓட்டையைச் சந்திக்கவில்லை பகுஜன் சமாஜ் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வாக்கு வங்கி அப்படியேதான் உள்ளது. மாயாவதிக்கு ஆதரவாகவே அவர்கள் முழுமையாக உள்ளனர்.மாநிலம் முழுவதும் தலித்களின் முதல் சாய்ஸ் மாயாவதியாகவே உள்ளபோதிலும், ஆட்சியில் ஏற்பட்டுள்ள குறைபாடும், நிர்வாக சீர்குலைவுமே மாயாவதியைக் கைவிடுவதாக அமைந்துள்ளது.

அதாவது வாக்கு வங்கி நன்றாக இருந்தும், திறமையற்ற ஆட்சி, குளறுபடியான ஆட்சி காரணமாக பதவியை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் மாயாவதி. சுருங்கச் சொல்வதாக இருந்தால் சட்டி சரியாக இருந்தும், சாம்பார் சரியில்லை என்ற கதைதான்.

குற்றங்களைத் தடுப்பதில் அரசு மோசமாக செயல்படுவதாக 61 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மோசமாக உள்ளதாக 55 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். சாலை வசதிகள், குடிநீர், மின்சாரம் உள்ளிட்டவை திருப்தி தரவில்லை என்றும் இவர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

முதல்வர் பதவிக்கு தகுதியானவராக 33 சதவீதம் பேர் முலாயம் சிங் யாதவையும், 29 சதவீதம் பேர் மாயாவதியையும், 18 சதவீதம் பேர் ராஜ்நாத் சிங்கையும் கூறியுள்ளனர்.

காங்கிரஸ் தரப்பிலிருந்து யாருமே இந்தப் பட்டியலில் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது காங்கிரஸ் கட்சியை மக்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்று இதன் மூலம் தெரிகிறது.

மே 26 முதல் ஜூன் 4ம் தேதி வரை உ.பியில் உள்ள 12 சட்டசபைத் தொகுதிகளில் 2822 பேரிடம் கருத்து கேட்டு இந்த சர்வே முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment