Monday 11 July 2011

கொங்கோவில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 74 பேர் உயிரிழப்பு

கொங்கோ ஜனநாயகக் குடியரசின் வட கிழக்குப் பகுதியில் பயணிகள் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 74 பேர் உயிரிழந்துள்ளனர்.112 பேருடன் பயணித்த இவ் விமானம் கொங்கோ ஜனநாயகக் குடியரசின் கிசாங்கனி விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்த போது கடந்த வெள்ளிக்கிழமை இரவு விபத்துக்குள்ளானது.


கடும் மழை மற்றும் இடி முழக்கத்திற்கு மத்தியில் விமானி விமானத்தை தரையிறக்க முயற்சித்ததாகவும் ஆனால் ஓடுபாதையை அடைவதற்கு முன்பாக விமானம் எரிந்ததாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

விமான நிலையத்திற்கு மிகச் சமீபமாகவுள்ள வனப்பகுதியொன்றின் தரையில் விமானம் மோதியதைத் தொடர்ந்து அங்கிருந்த மூங்கில் மரங்கள் தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில் இவ் விபத்தில் 56 பேர் உயிரிழந்ததாக முன்னதாக அறிவிக்கப்பட்டபோதும் மேலும் 28 உடல்கள் விமானத்தின் சிதைவுகளுக்குள்ளிருந்து மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

6 பேரைக் கொண்ட விமானிக் குழு இவ் விமானத்தில் இருந்த நிலையில் மீட்கப்பட்ட உடல்களில் இரு விமானிகளின் உடல்களும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இவ் விபத்தில் கடும் எரிகாயங்களுக்குள்ளான 40 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கொங்கோவின் தனிப்பட்ட விமானசேவையொன்றுக்குச் சொந்தமான இவ் விமானம் தலைநகர் கின்ஷாசாவுக்கும் நாட்டில் ஏனைய பகுதிகளுக்குமிடையில் சேவையில் ஈடுபடுவதாகும்.

குறைந்தளவு பாதுகாப்பு வசதிகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றிய விமான சேவைகளுக்கான கறுப்புப் பட்டியலில் இவ் விமான சேவையும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment