Monday 11 July 2011

உலக வரைபடத்தில் 193 ஆவது நாடாக மலர்ந்தது தென் சூடான்

தென் சூடான் உலகின் புதிய நாடாக நேற்று சனிக்கிழமை மலர்ந்துள்ளது. கார்ட்டோம் நிர்வாகத்தின் கீழிலிருந்த தென் சூடான் 20 இலட்சம் உயிர்களை காவுகொண்ட கொடூர குற்றம் தசாப்தங்களாக தொடர்ந்த நிலையில் இப்போது புதிய தேசமாக உலக வரைபடத்தில் இடம்பெற்றிருக்கிறது.


 தென்சூடானின் தலைநகரான கியூபாவில் வெள்ளி நள்ளிரவில் சுதந்திரக் கொண்டாட்டங்கள் கோலாகலமாக ஆரம்பமாகின. வீதிகள் ஓரம் மக்கள் குழுமியிருந்து ஆடல், பாடலுடன் வாத்தியங்களை இசைத்துக்கொண்டும் கொடிகளை உயர்த்தியவாறும் புதிய தேசத்தின் ஜனாதிபதியான சைவா கிர் மாயாடிட்டின் நாமத்தை உச்சாடனம் செய்துகொண்டும் மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.

நள்ளிரவு முடிவடைந்து புதிய உதயம் ஆரம்பமானபோது தெற்கு சூடானின் புதிய தேசிய கீதம் இசைக்கப்பட்டது. உலகில் 193 நாடாகவும் ஐ.நா.வில் ஆபிரிக்காவைச் சேர்ந்த 54 ஆவது உறுப்பினராகவும் தென்சூடான் பரிணமித்துள்ளது.

சூடான் ஜனாதிபதி (வட சூடான்) ஒமர் அல் பசீர் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் இந்திய துணை ஜனாதிபதி ஹமீட் அன்சாரி உட்பட உலகின் முன்னணித் தலைவர்கள் பலர் வைபவத்தில் கலந்துகொண்டனர். வெள்ளிக்கிழமை மாலை தெற்கு சூடானை சுதந்திர தேசமாக சூடான் அங்கீகரித்துள்ளது.

சூடான் குடியரசு தெற்கு சூடான் குடியரசை சுதந்திர நாடாக அங்கீகரிப்பதாகவும் 1956 ஜனவரி 1 இல் வகுக்கப்பட்ட எல்லைகளின் பிரகாரம் அந்த நாட்டை சுதந்திர தேசமாக ஏற்றுக்கொள்வதாகவும் சூடானின் ஜனாதிபதி விவகார அமைச்சர் பத்க்கிரி ஹசன் சலிக் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சர்வஜன வாக்கெடுப்புக்கும் பின்னரான சகல விவகாரங்களுக்கும் தீர்வு காணப்படுமெனவும் விரிவான சமாதான உடன்படிக்கையை சூடான் அரசாங்கம் அமுல்படுத்துவதில் உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷின் கீழ் வெளிவிவகார அமைச்சராக இருந்த ஹொலின் பவலின் அனுசரணையுடன் 2005 இல் வடக்கு சூடானும் தென் சூடானும் விரிவான சமாதான உடன்படிக்கையை எட்டியிருந்தனர்.

இதன் மூலம் உள்நாட்டு யுத்தம் நிறுத்தப்பட்டு கடந்த ஜனவரியில் சர்வஜன வாக்கெடுப்பு இடம்பெற்றது. 99 சதவீதமான தென் சூடான் மக்கள் சுதந்திர நாட்டுடுக்கு சர்வஜன வாக்கெடுப்பில் ஆதரவளித்திருந்தனர். ஆனால், 2005 சமாதான உடன்படிக்கையில் உள்ளடங்கியிருக்கும் பிரதான விடயங்கள் பலவற்றிற்கு இன்னரும் தீர்வு காணப்படவில்லை.

எண்ணெய் வள பிராந்தியமான அபேயை எந்த சூடானின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்ற பிரச்சினைக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை. அத்துடன், எல்லைகளில் உள்ள சிறுபான்மை இனங்களின் பிரஜாவுரிமைப் பாதுகாப்பு எண்ணெய் மூலமான சம்பாத்தியங்களை எவ்வாறு பகிர்ந்துகொள்வது என்பது தொடர்பான பிரச்சினைகளுக்கும் இன்னமும் தீர்வு எட்டப்படவில்லை.

தென்சூடானே 70 சதவீதமான எண்ணெய் வளத்தைக் கொண்டிருக்கின்றது.

No comments:

Post a Comment