பதேபூர் : கல்கா மெயில் ரயில் விபத்தில் உயிரிழந்தோர்
எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. விபத்தில் காயம் அடைந்தவர்கள் கான்பூர்
மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி பலர்
இறந்தனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்தது.
ஹவுராவிலிருந்து
தில்லிக்கு சென்று கொண்டிருந்த கல்கா மெயில் ரயில் உத்தரபிரதேச மாநிலம்
மால்வா ரயில் நிலையம் அருகே நேற்று (ஜுலை 10) தடம் புரண்டது. ரயிலின் 15
பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி கவிழ்ந்து நொறுங்கியது. இதில் 10
பெட்டிகள் மிகவும் மோசமான நிலையில் நொறுங்கின.
கல்கா மெயில் ரயில்
அதிகபட்ச வேகமான 108 கிலோ மீட்டர் வேகத்தில் வந்ததால் தடம் புரண்டு
விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. அந்த ரயிலில் சுமார் 1200 பயணிகள்
இருந்தனர். தடம் புரண்ட 15 பெட்டிகளில் 2 பெட்டிகள் சுக்கல், சுக்கலாகிப்
போனது. அதில் இருந்த பயணிகளில் 31 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
200-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.
விபத்து நடந்த
இடத்துக்கு மீட்பு குழுக்கள் செல்வதில் சிறிது தாமதம் ஏற்பட்டது.
இதையடுத்து சுமார் 100 ராணுவ வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
காயம் அடைந்தவர்கள் கான்பூர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அங்கு
சிகிச்சை பலனின்றி பலர் இறந்தனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 62 ஆக
உயர்ந்தது.
காயம் அடைந்தவர்களுக்கு உதவுவதற்காக கான்பூர், அலகாபாத்
நகரங்களில் இருந்து சிறப்பு மருத்துவ ரயில்கள் இயக்கப்பட்டன. ஹவுராவில்
இருந்தும் சிறப்பு ரயிலில் பயணிகளின் உறவினர்கள் அழைத்து வரப்பட்டனர்.
தில்லியில் இருந்தும் ஒரு சிறப்பு ரயில் மால்வா பகுதிக்கு வந்தது. நடு
வழியில் தவித்து கொண்டிருந்த பயணிகள் அந்த ரயிலில் ஏற்றி அனுப்பி
வைக்கப்பட்டனர். அந்த சிறப்பு ரயில் இன்று காலை தில்லி போய் சேர்ந்தது.
கல்கா
மெயில் ரயில் தடம் புரண்டதால் அந்த வழியாக செல்லும் 13 ரயில்கள் ரத்து
செய்யப்பட்டன. 25 ரயில்கள் அலகாபாத்-கான்பூர் வழியாக திருப்பி விடப்பட்டன.
ரயில்வே ராஜாங்க மந்திரி முனியப்பா சம்பவ இடத்துக்கு நேரில் சென்று
பார்வையிட்டார். விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 5
லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சமும் நிதி உதவி வழங்க
உத்தரவிடப்பட்டுள்ளது.
விபத்தில் சுவீடன் நாட்டைச் சேர்ந்த 2 பேர்
பலியாகி விட்டனர். அதிர்ஷ்டவசமாக 100 வயது பயணி ஒருவர் உயிர் தப்பினார்.
விபத்து நடந்த இடத்தில் தண்டவாளங்களை சீரமைக்கும் பணி விடிய, விடிய
நடந்தது. விபத்து நடந்ததற்கான காரணத்தை கண்டுபிடிக்க உயர்மட்டக்குழு ஒன்று
விசாரணை நடத்தி வருகிறது.
No comments:
Post a Comment