வரம்புமீறிய,
அனுமதியில்லாத கட்டடங்களை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் இடிக்கும்
நடவடிக்கையை நிறுத்தி வைக்கும் அவசரச் சட்டம் ஜூலை 27-ம் தேதியுடன் முடிவடைந்தது.
முந்தைய திமுக ஆட்சியில், தொடர்ந்து
நான்காவது முறையாக, ஜூலை 27, 2010-ல் அமல்படுத்தப்பட்ட இந்த அவசரச் சட்டம்
முடிவுக்கு வந்துவிட்டதால், அனைவர் மனதிலும் எழும் அடுத்த கேள்வி,
"சட்டவிதிமுறைகளுக்குக் கட்டுப்படாமல், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும
அதிகாரிகளின் மறைமுக ஆதரவுடன் எழுப்பப்பட்ட இந்த வரம்பு மீறிய கட்டடங்கள்
இனிமேலாவது இடிக்கப்படுமா' என்பதுதான்.
சென்னை பெருநகரில் மட்டும்
1.7 லட்சம் கட்டடங்கள் அனுமதி பெறாமலும், வரம்பு மீறியும் கட்டப்பட்டுள்ளன.
இவற்றில் மிகப்பெரிய 147 வணிக வளாகங்களும் அடங்கும்.சென்னையில்
கட்டடங்கள் விதிமுறைகளை மீறியும், எந்த வரன்முறைகள் இல்லாமலும்,
மாநகராட்சியின் அனுமதி பெறாமலும் கட்டப்படுவது அதிகமாக நடைபெற்றதன்
விளைவாகத்தான் போக்குவரத்து நெருக்கடி, விபத்துகள், சில அடுக்குமாடிக்
குடியிருப்புகள் மண்ணுக்குள் புதைந்து அழுந்திய சம்பவங்கள் நிகழ்ந்தன,
நிகழ்ந்து வருகின்றன.இதுகுறித்து பரவலாகப் பேசப்பட்டது.
பத்திரிகைகளில் எழுதப்பட்டது. இந்த விதிமுறை மீறலுக்குப் பின்புலமாக இருந்த
அதிகாரிகள் மீது, வழக்கம்போல நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால், சில
கட்டடங்கள் மட்டும் இடிக்கப்பட்டன.
இதில் நடிகை ஸ்ரீதேவிக்குச் சொந்தமான
எட்டு மாடிக் கட்டடத்தின் சில மாடிகள் இடிக்கப்பட்டு, பரபரப்பான
செய்தியானது. ஒரு ஜவுளி நிறுவனத்தின் மேல்தளம் இடிக்கப்பட்டது. இவையெல்லாம்
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் நடுநிலையைக் காட்டுவதாகத்
தோன்றினாலும், ஏன் ஏனைய வரம்பு மீறிய கட்டடங்களின் மீதும் இதேபோன்ற
நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற கேள்விக்குப் பதில் அளிக்கும்விதமாக
முந்தைய திமுக அரசு அந்தக் கட்டடங்களைப் பாதுகாக்க அவசரச் சட்டம்
பிறப்பித்தது.
1999-ம் ஆண்டு முதல் விதிமுறை மீறிய கட்டடங்கள்
குறிப்பிட்ட அபராதத் தொகையைச் செலுத்தி அந்த வரம்புமீறல்கள்
அனுமதிக்கப்பட்டு வரன்முறைப்படுத்திக் கொள்ளலாம் என்று தமிழக அரசு
அறிவித்தது.
இது தொடர்ந்து 2000, 2001, 2002-ம் ஆண்டுகளுக்கும்
நீட்டிக்கப்பட்டபோது, இது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் தமிழக அரசைக்
கண்டித்தது.
இப்படி அபராதம் செலுத்தி வரன்முறைப்படுத்திக்கொள்வது,
முதல் ஆண்டுக்கு மட்டுமே சரியானது. தொடர்ந்து இதை அனுமதிப்பது, மீண்டும்
மீண்டும் விதிமுறைகளை மீறவும் அபராதத்துடன் வரன்முறைப்படுத்திக்கொள்ளும்
செய்கையை ஊக்குவிப்பதாகவும் முடியும். ஆகவே, 1999-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட
வரன்முறைப்படுத்தும் திட்டம் மட்டுமே செல்லத்தக்கது என்று கூறிய
நீதிமன்றம், இந்தக் கட்டடங்களை இடிக்க வேண்டும் என்று 2007-ம் ஆண்டு
உத்தரவிட்டது.இந்த உத்தரவை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்
அமல்படுத்த முடியாதபடி தமிழக அரசு ஜூலை 27, 2007-ல் ஓர் அவசரச் சட்டம்
கொண்டு வந்து, இந்த நடவடிக்கையை நிறுத்திவைத்தது.
அடுத்த ஆண்டு சென்னை தியாகராயர்
நகர், ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ், அதிகாலைத் தீ விபத்தில்
சேதமடைந்தபோது, 2008, செப்டம்பர் 2-ம் தேதி, மீண்டும் இந்த விசயத்தில் அரசுதான் குற்றவாளியாக நிற்கிறது.
""................இது
அரசுக்கும் அதிகாரிகளுக்கும் தெரியாமல் நடக்கும் விஷயமல்ல. 10 மீட்டர்
அகலமுள்ள சென்னை ரங்கநாதன் தெருவில் பல அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்ட
அனுமதிக்கப்படவே கூடாது.
ஆனால், விதிமுறைகளை மீறி சுமார் 14 கட்டடங்கள்
எப்படிக் கட்டப்பட்டன? மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும
அதிகாரிகளுக்குத் தெரியாமலா இந்தக் கட்டடங்கள் கட்டப்பட்டன?ரங்கநாதன்
தெருவின் உள்ளே நுழையவே சிரமப்பட்டதாகத் தீயணைப்புப் படையினர்
கூறியிருக்கிறார்கள்.
அதிகாலை நேரமாக இல்லாமல், தீவிபத்து நேரிட்டபோது
உள்ளே நூற்றுக்கணக்கில் நுகர்வோர்கள் இருந்திருந்தால், தங்களால் ஒன்றும்
செய்திருக்கவே முடியாது என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். நிலைமை
இப்படி இருக்கும்போது, இந்தக் கட்டடங்களில் காணப்படும் விதிமுறை மீறல்களைச்
சுட்டிக்காட்டி இடித்துத்தள்ள நீதிமன்றம் உத்தரவிட்டால், சட்டம் இயற்றி
அந்த விதிமுறை மீறல்களை அங்கீகரிப்பதில் முனைப்பு காட்டுகிறது
அரசு.......'' என்று குறிப்பிட்டிருந்தோம்..
இந்த அத்துமீறல்கள்
அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் கூட்டணியால் நடைபெற்றவை என்பது
வெளிப்படை. அதனால்தான் சட்டம் போட்டுத் தடுக்கிறார்கள். இருப்பினும்,
இதனால் பாதிக்கப்படுவோர் மக்கள்தான்.
தீ விபத்து அல்லது வெடிகுண்டு புரளி
ஏற்பட்டால், அடுத்த 2 நிமிடத்திற்குள் கட்டடத்தில் உள்ள அனைத்து
நுகர்வோரும், கடைக்காரர்களும் வெளியேறக்கூடிய அளவில் வணிக வளாகங்கள்
அமைக்கப்பட வேண்டும் என்பது பொதுவான விதிமுறை.
இந்த விதிமுறையின்கீழ்
எத்தனை கட்டடங்கள் இன்று சென்னையில் இருக்கின்றன?கடந்த திமுக அரசு
தொடர்ந்து 4 ஆண்டுகளாக அமல்படுத்திவந்த அவசரச் சட்டம் ஜூலை 27-ம் தேதியுடன்
காலாவதியாகிவிட்ட நிலையில், இப்போது ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்துள்ள
அதிமுக அரசு என்ன செய்யப்போகிறது என்பதுதான் அனைவருடைய எதிர்பார்ப்பாக
இருக்கிறது.
இந்தக் கட்டடங்களை இடித்து, மக்கள் அரசு என்று
நிரூபிக்கப் போகிறதா அல்லது முந்தைய அரசின் பாணியில் விதிமுறை மீறல்களை
அனுமதிக்கும், அங்கீகரிக்கும்விதமாக இன்றைய ஜெயலலிதா அரசும் விவகாரத்தைத்
தள்ளிப்போடப் போகிறதா? அதிமுக அரசுக்கு இது நிறம்அறி சோதனை!
No comments:
Post a Comment