Thursday 28 July 2011

லஞ்ச ஒழிப்புப் போலீஸ் ரெய்டு கூடுதல் டிஜிபி ஜாபரின் வீட்டில் கிடைத்த சிடி-க்கள் : வெளிச்சத்திற்கு வருமா சில உண்மைகள்

சென்னை : முன்னாள் உளவுப்பிரிவு கூடுதல் டிஜிபி ஜாபர் சேட் வீட்டில் நடத்திய ரெய்டில் பல ஆடியோ சிடிக்கள் சிக்கியுள்ளன. இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் போலீஸாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளனவாம். முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நெருக்கமாக இருந்து வந்த சேட், அவரது பேச்சையே ஒட்டுக் கேட்டு டேப் செய்து வைத்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் சேட். கருணாநிதி எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும் சேட்டிடம் ஒரு வார்த்தை கேட்டு விட்டுத்தான் முடிவெடுப்பார் என்பார்கள். அந்த அளவுக்கு கருணாநிதி, சேட் மீது நல்ல மதிப்பு வைத்திருந்தார், நம்பினார். ஆனால் கருணாநிதியும், அவரது குடும்பத்தினரும் பேசியதையே ஒட்டுக் கேட்டுடேப் செய்து வைத்துள்ளார் ஜாபர் சேட் என்பது சமீபத்தில் அவரது வீட்டில் நடந்த ரெய்டின்போது கிடைத்த சிடிக்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

தற்போது மண்டபம் அகதிகள் முகாம் பொறுப்பாளராக பணியாற்றி வரும் ஜாபர் சேட்டுக்குச் சொந்தமான வீடுகள், அவரது மாமனார் வீடு உள்ளிட்ட

இடங்களில் சமீபத்தில்,லஞ்ச ஒழிப்புப் போலீஸார் ரெய்டு நடத்தினர். மொத்தம் எட்டு இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. இதில் சென்னை அண்ணா நகரில் உள்ள சேட்டின் வீடு, அவரது மாமனாரின் பெரியகுளம் வீடு, கருணாநிதியின் தனிச் செயலாளர் ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கரின் வீடு ஆகியவற்றில் பல முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளனவாம்.

அண்ணா நகர் வீட்டில் 35 ஆடியோ சிடிக்கள், 8 ஐபாட்கள் மற்றும் இரண்டு லேப்டாப்கள் சிக்கியுள்ளன. தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீட்டு மனை ஒதுக்கீடு தொடர்பான ஆவணங்களும் கிடைத்துள்ளனவாம்.

ஜாபர் வீட்டில் சிக்கிய சிடிக்களைப் போட்டுப் பார்த்தபோது போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், அதில் ஒன்றில் கருணாநிதியும், அவரது குடும்பத்தினரும் பேசிக் கொண்ட பேச்சுக்கள் இடம் பெற்றுள்ளன. அதாவது கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினரின் பேச்சுக்களை ஒட்டுக் கேட்டு அதைப் பதிவு செய்துள்ளார் ஜாபர் சேட்.

திருப்பதிக்கே லட்டு என்பது போல உளவு பார்க்குமாறு உத்தரவிடக் கூடிய பொறுப்பில் இருந்த கருணாநிதி பேச்சையே உளவு பார்த்துள்ளார் ஜாபர் சேட். இதற்கு முன்பு இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.

மேலும் அவரது லேப்டாப் உள்ளிட்டவற்றில் கிடைத்துள்ள சில முக்கியத் தகவல்களும் திமுக ஆட்சியில் நடந்த சில சம்பவங்களுக்கு வலுவான ஆதாரமாக கருதப்படுகிறது.

இந்த சிடிக்கள், லேப்டாப்கள், ஐபாட்கள் உள்ளிட்டவற்றில் கிடைத்துள்ள தொலைபேசி உரையாடல்கள், ஆவணங்கள், ஆதாரங்கள் அடிப்படையில் விரைவில் பல்வேறு வழக்குகள் அணிவகுக்கும் என காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment