Tuesday, 12 July 2011

சூடான்: எண்ணெய் வளமிக்க அப்யாய் நகரம் எங்களுடையதே ஒமர் அல் பஷீர்

சூடான் மற்றும் தெற்கு சூடான் நாடுகளுக்கு இடையில் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் எண்ணெய் வளமிக்க அப்யாய் நகரத்தின் மீது அத்துமீறி தெற்கு சூடான் அதிகாரம் காட்டக் கூடாது என சூடான் அதிபர் ஒமர் அல் பஷீர் எச்சரித்துள்ளார்.



 சூடான் நாட்டில் இருந்து பிரிந்து கடந்த 9ம் தேதி உலகின் 193வது நாடாக தெற்கு சூடான் உதயமானது. 20 ஆண்டுகளுக்கும் மேல் நடந்த போரில் தெற்கு சூடான் 15 லட்சம் மக்களை பலி கொடுத்து தனி நாடாக உதயமாகியுள்ளது. ஆனாலும் இன்னும் சர்ச்சை ஓயவில்லை.

இருநாடுகளையும் பிரிக்கும் எல்லையில் தற்போது சூடான்(வடக்கு சூடான்) நாட்டின் கட்டுப்பாட்டில் அப்யாய் நகரம் உள்ளது. இது எண்ணெய் வளமிக்க நகரம். இந்நகரத்தின் மீது தெற்கு சூடான் நிர்வாக அதிகாரம் செலுத்தக் கூடாது என சூடான் அதிபர் ஒமர் அல் பஷீர் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: சூடான் மற்றும் தெற்கு சூடான் நாடுகள் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அது நடக்கவில்லை. எனவே போரை முடிவுக்கு கொண்டு வந்து தெற்கு சூடான் மக்களின் விருப்பப்படி தனி நாடு அறிவிப்பை செயல்படுத்தினேன்.

அதற்காக சூடான் கட்டுப்பாட்டில் உள்ள அப்யாய் நகருக்கு தெற்கு சூடான் சொந்தம் கொண்டாடக் கூடாது. அப்படி சொந்தம் கொண்டாடினால் இருநாடுகளுக்கும் இடையில் புதிய விரோதம் உருவாகும்.

அப்யாய் எல்லைப் பகுதியில் ஐ.நா.வின் அமைதிப் படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் வாபஸ் பெறவேண்டும். இங்கு எத்தியோப்பியா அமைதிப் படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படலாம்.

இருநாடுகளும் இதை வரவேற்கிறோம். ஐ.நா அமைதிப் படையினரால் செய்ய முடியாததை எத்தியோப்பியா படையினரால் செய்ய முடியும் என்று நம்புகிறோம்.

கடந்த 2004ம் ஆண்டில் அப்யாய் நகருக்கு தனி சுயாட்சி வழங்கப்பட்டது. அரபு நாடோடி பழங்குடியின மக்களை அதிகம் கொண்ட இந்நகருக்கு தேர்தல் நடத்துவது தள்ளிப் போவதால் அப்யாய் நகரின் மீது அதிகாரம் செலுத்துவதில் சிக்கல் நீடிக்கிறது.

கடந்த மே மாதம் இருதரப்பினருக்கும் இடையே நடந்த சண்டையில் அப்யாய் நகரை தங்களது கட்டுப்பாட்டிற்குள் சூடான் நாட்டினர் கொண்டு வந்தனர். தற்போது ஐ.நா கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment