வாஷிங்டன் : அமெரிக்காவில் நடந்த விமான விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த மூளைப் புற்று நோய் நிபுணர் விஸ்வநாதன் ராஜாராமன், அவரது மனைவி உயிரிழந்தனர்.
காப்பி அடித்து ஆங்கில நாவல் ஒன்றை எழுதியதாக 2006ல் சர்ச்சையில் சிக்கிய நாவலாசிரியர் காவ்யாவின் பெற்றோர் இவர்கள்.
தமிழகத்தைச் சேர்ந்தவர் டாக்டர் விஸ்வநாதன் ராஜாராமன் (54). இவர் மூளைப் புற்று நோய் நிபுணர். அவரது மனைவி மேரி ஜெ சுந்தரம் (50). இவரும் டாக்டர். நியூ ஜெர்சியில் வசித்து வருகின்றனர். மகள் காவ்யாவை பார்ப்பதற்காக அவர்களுக்குச் சொந்தமான சிறியரக விமானத்தில் வாஷிங்டன் சென்றனர்.
விஸ்வநாதன் ராஜாராமனுக்கு விமானம் ஓட்டவும் தெரியும். வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ் டவுன் சட்டக் கல்லூரியில் காவ்யா பட்டப்படிப்பை முடித்து சமீபத்தில் பட்டதாரியானார். அதற்காக அவரை பார்க்க விஸ்வநாதன் ராஜாராமன் தம்பதி வெள்ளிக்கிழமை வந்தனர்.
அவரை பார்த்து விட்டு, கொலம்பஸில் விமானத்தில் எரிபொருளை நிரப்பிக் கொண்டு நியூஜெர்சிக்கு திரும்பி கொண்டிருந்தனர். புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, விமானத்தில் கோளாறு ஏற்பட்டு, ஓஹையோ மாகாணத்தில் சோளக் கொல்லையில் விழுந்து விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்புப் படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வர முயன்றும் முடியாமல் போனது. விபத்தில் விஸ்வநாதன் ராஜாராமனும் அவரது மனைவியும் உடல் கருகி உயிரிழந்தனர்.
நான்கு பேர் பயணம் செய்யக்கூடிய இந்த விமானத்தில் பாராசூட் வசதியும் இருந்தது. விபத்து காலங்களில் அது விரிந்து பத்திரமாக தரையிறங்க உதவும். விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment