Tuesday 21 June 2011

சமச்சீர் கல்வி தமிழக அரசு மீது உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு

புது தில்லி: நீதிமன்ற உத்தரவை மீறி விட்டதாக தமிழக அரசு மீது உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

வழக்கறிஞர் ஹரீஷ் குமார் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.


நடப்புக் கல்வி ஆண்டில் 1-ம் வகுப்புக்கும், 6-ம் வகுப்புக்கும் ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டம் தொடர வேண்டும் என கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்காக தமிழக தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி தலைமையில் குழு அமைக்க வேண்டும். இந்தக் குழு மூன்று வாரங்களில் தங்களது கருத்துகளை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.


இதன்படி, சமச்சீர் பாடத்திட்டத்தை ஆய்வு செய்ய தேவேந்திரநாத் சாரங்கி தலைமையில் 9 பேர் கொண்ட குழுவைத் தமிழக முதல்வர் ஜெயலலிதா அமைத்தார்.


இந் நிலையில் சமச்சீர் கல்வி தொடர்பாக தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தொடரப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ஹரீஷ் குமார் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:


1-ம் வகுப்புக்கும், 6-ம் வகுப்புக்கும் சமச்சீர் கல்வித் திட்டத்தை மாற்றம் செய்யாமல் அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது.


ஆனால் 1-ம் வகுப்பு, 6-ம் வகுப்பு சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தில் சில குறிப்பிட்ட பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. இது உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவை மீறும் செயல். இதற்கு தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கியும், பள்ளிக் கல்வித் துறை செயலாளர் சபிதா ஆகியோரும் பொறுப்பேற்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த மனு ஜூலை மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.





No comments:

Post a Comment