Tuesday, 21 June 2011

அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்பும் படி மக்களுக்கு அதிபர் அழைப்பு

சிரியாவில் நடந்து வரும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் சிறிய குழுக்களை கொண்ட நாசவேலைக்காரர்களின் செயல். எனவே பொதுமக்கள் அமைதி பேச்சுக்கு திரும்ப வேண்டும் என அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.


சிரியா அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று மூன்றாவது முறையாக நாட்டு மக்களுக்கு அதிபர் பஷர் அல் அசாத் தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது: சிரியா மக்களின் தேவையை பூர்த்தி செய்ய அரசு தயாராக இருக்கிறது. ஆனால் சிறிய குழுக்களை கொண்ட நாசவேலைக்காரர்கள் இதை நிறைவேற்ற விடாமல் சதிவேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேசிய அளவிலான பேச்சுவார்த்தை சிரியா நாட்டின் எதிர்காலத்தை சீரமைக்கும். வன்முறையைத் தொடர்ந்து துருக்கி நாட்டில் அடைக்கலமானவர்கள் தாய் நாட்டிற்கு திரும்ப வேண்டும். வன்முறையில் பலியானவர்களுக்காக வருந்துகிறேன். இவர்களது பலி நாட்டிற்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளது. நாசவேலையில் ஈடுபட்டுள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். ஸ்திரத்தன்மை இல்லாமல் வளர்ச்சி இல்லை. வன்முறையால் சீர்திருத்தம் ஏற்படாது.


சீர்திருத்த திட்டங்களைக் கொண்டு வர தேசிய அளவில் ஆணையம் அமைக்கப்படும். சட்ட திருத்தங்களை மேற்கொள்ள மற்றொரு குழு ஏற்படுத்தப்படும். ஊழலை ஒழிப்பதில் மூத்த குடிமக்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.


சமீபத்தில் குற்றங்களில் கைது செய்யப்பட்டவர்களுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட வேண்டும் என்று நீதித்துறை அமைச்சரை கேட்டுக் கொண்டுள்ளேன். குறிப்பாக ஜிசிர் அல் சுகுர் பகுதி மக்கள் நாடு திரும்ப வேண்டும். அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள். அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மக்கள் முன்வரவேண்டும்.


சிரியாவில் அரசுக்கு எதிரான வன்முறையால் இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் துருக்கியில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதுவரை அரசு படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான போரில் ஆயிரத்து 300க்கும் அதிகமான சிரியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment