Tuesday, 21 June 2011

பி.இ. கலந்தாய்வு: ஜூலை 8-ல் தொடங்குகிறது

சென்னை: பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 8-ம் தேதி தொடங்குகிறது.


தொடர்ந்து 35 நாள்களுக்கு இந்த கலந்தாய்வு நடைபெற உள்ளது. இத்தகவலை தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் திங்கள்கிழமை (ஜூன் 20) வெளியிட்டார்.


சென்னையில் மட்டும் கலந்தாய்வு:



தமிழகத்தில் உள்ள 494 பொறியியல் கல்லூரிகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பொறியியல் இடங்கள் உள்ளன. இதில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படும் 1.25 லட்சம் இடங்களில், ஒற்றைச் சாளர கலந்தாய்வு முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்த கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது.

எவ்வளவு விண்ணப்பங்கள்?


கலந்தாய்வு மூலம் பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக மொத்தம் 1 லட்சத்து 63 ஆயிரத்து 509 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை விண்ணப்பிக்க கடைசி நாளான ஜூன் 3-ம் தேதி வரை 1 லட்சத்து 48 ஆயிரத்து 353 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

விண்ணப்பித்துள்ளவர்களில் 89,298 பேர் ஆண்கள். 59,055 பேர் பெண்கள். தொழில் பிரிவு (வொக்கேஷனல்) ஒதுக்கீட்டின் கீழ் 5,578 பேர் விண்ணப்பித்துள்ளனர். விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீட்டின் கீழ் 2,302 ஆண்கள், 1,155 பெண்கள் என மொத்தம் 3,457 பேர் விண்ணப்பித்துள்ளனர். மாற்றுத் திறனாளிகள் பிரிவு ஒதுக்கீட்டின் கீழ் 464 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் பெண்கள் 149 பேர். ராணுவத்தினரின் வாரிசுகள் பிரிவு ஒதுக்கீட்டின் கீழ் 2,193 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

விண்ணப்பித்துள்ளவர்களில் 64,410 பேர் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள்.


தர வரிசைப் பட்டியல் எப்போது?


கலந்தாய்வில் பங்கேற்க உள்ள மாணவர்களுக்கான தர வரிசைப் பட்டியல் (ரேங்க் லிஸ்ட்) ஜூன் 24-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. தர வரிசை எண்ணை அண்ணா பல்கலைக்கழக இணைய தளமான www.annauniv.edu/tnea2011 மூலம் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

கலந்தாய்வு எப்போது?


விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீட்டின் கீழ் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ளவர்களுக்கு ஜூன் 30-ம் தேதி கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. முன்னதாக ஜூன் 28, 29 தேதிகளில் இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். தொழில் பிரிவு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்துள்ளவர்களுக்கு ஜூலை 1-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும்.

மாற்றுத் திறனாளிகள் பிரிவு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்துள்ளவர்களுக்கு ஜூலை 7-ம் தேதி கலந்தாய்வு நடைபெறும்.

பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 8-ம் தேதி தொடங்குகிறது. தொடர்ந்து 35 நாள்களுக்கு பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடத்தப்படும்.


சம வாய்ப்பு எண் (ரேண்டம் எண்) வெளியீடு:

அண்ணா பல்கலைக்கழக தேர்வு மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பி.இ. கலந்தாய்வில் பங்கேற்க உள்ள மாணவர்களுக்கான சம வாய்ப்பு எண் வெளியிடும் நிகழ்ச்சியை அமைச்சர் பழனியப்பன் தொடங்கி வைத்தார்.

பல மாணவர்கள் ஒரே கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றிருக்கும்போது அவர்களை வரிசைப்படுத்த கம்ப்யூட்டர் மூலம் இந்த சம வாய்ப்பு எண் வழங்கப்படுகிறது.

இந்த சம வாய்ப்பு எண் அண்ணா பல்கலைக்கழக www.annauniv.edu/tnea2011 இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களுடை விண்ணப்ப எண்ணை அதில் பதிவு செய்து, சம வாய்ப்பு எண்ணைத் தெரிந்து கொள்ளலாம்.

சம வாய்ப்பு எண் வெளியிடும் நிகழ்ச்சியில் உயர் கல்வித் துறை செயலர் கண்ணன், தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் (பொறுப்பு) குமார் ஜெயந்த், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர், தமிழ்நாடு பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை செயலர் ரெய்மண்ட் உத்தரியராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment