Tuesday 21 June 2011

சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க முக்கியத்துவம்


திருவாரூர் : சட்டம்- ஒழுங்கைப் பாதுகாக்க முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றார் திருவாரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்ற முனைவர் ஆர். தினகரன்


திருவாரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக முனைவர் ஆர். தினகரன் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். விருதுநகர் மாவட்டம், சாத்தூரைச் சேர்ந்த இவர் வேளாண் பட்டதாரி. வேளாண்மை குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.



இவர், 1998-ம் ஆண்டு உதவி காவல் கண்காணிப்பாளராக விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் தனது பணியைத் தொடங்கினார். அதன் பின்னர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பதவி உயர்வு பெற்று கோவை, தேனி, திருநெல்வேலி, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலும், ரயில்வே காவல் பிரிவிலும் பணியாற்றினார்.



தற்போது பணியிட மாறுதலில் திருவாரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.



திருவாரூரில் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:



தமிழக முதல்வர் அறிவுறுத்தியுள்ளபடி சட்டம்- ஒழுங்கு பாதுகாக்கப்படும். இதற்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். திருவாரூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கள்ளச்சாராய விற்பனை இருப்பதாகத் தகவல் உள்ளது. இதை முற்றிலுமாக ஒழிக்க தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.



திருட்டு, கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகளில் இதுவரை கண்டுபிடிக்கப்படாத குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, சட்டத்தின் முன் நிறுத்த முழு கவனம் செலுத்தப்படும்.



மாவட்டத்தில் சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் பகுதிகளைக் கண்டறிந்து, அதைத் தடுப்பதற்குரிய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.



காவல் நிலையங்களுக்கு வரும் புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் சட்டம்- ஒழுங்கு, கள்ளச்சாராய விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்ற நடவடிக்கைகள் தொடர்பாக என்னை 94454 94491 என்ற செல்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றார் அவர்.



பேட்டியின் போது, தனிப் பிரிவு ஆய்வாளர் இமயவரம்பன், சார்பு ஆய்வாளர் உமாமகேஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர்.





No comments:

Post a Comment