Tuesday, 21 June 2011

தாக்குதலில் பொதுமக்கள் பலி: நேட்டோ படைகள் மன்னிப்பு கோரியது

திரிபோலியில் நிகழ்ந்த தாக்குதலில் குழந்தைகள் உட்பட அப்பாவி மக்கள் ஒன்பது பேர் பலியானதற்கு பொறுப்பேற்று நேட்டோ படை வருத்தம் தெரிவித்துள்ளது.


லிபியா தலைநகர் திரிபோலியில் நேற்று முன்தினம் நேட்டோ படையினர் பயங்கர தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் இரண்டு குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலியாகினர்.

இதற்கு பொறுப்பு ஏற்று நேட்டோ வருத்தம் தெரிவித்து இருப்பதாக லிபியா தூதுக் குழு கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் சார்லஸ் பவ்சார்டு தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில்,"சம்பவம் குறித்து நாங்கள் இன்னும் இறுதி முடிவிற்கு வரவில்லை. ஆயுதங்களை தவறாகக் கையாண்டதால் இச்சம்பவம் நடந்திருக்கலாம்" என்றார்.


நேட்டோ அமைப்பு வெளியிட்ட அறிக்கையில்,"லிபியாவில் நடத்தப்படும் ஒவ்வொரு தாக்குதலும் மிகவும் கவனத்துடன் கையாளப்படுகிறது. பிரிகா பகுதியில் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் எதிரிகளின் ரோந்து வாகனங்கள் தான் பாதி அளவிற்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளன. எதிர்பாராமல் நடத்தப்பட்ட தாக்குதலில் பலியானவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களுக்காக வருத்தம் தெரிவிக்கிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிபியாவில் நேட்டோ படைகளின் ஒட்டு மொத்த ஆதரவு கிடைக்காததால் கிளர்ச்சியாளர்களால் நாட்டின் கிழக்கு பகுதியில் முன்னேறி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு நேட்டோ அமைப்பு நாடுகள் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடே காரணம்.

இதற்கிடையே லிபியா தலைவர் கடாபியின் படைகளை எதிர்த்து போரிட அந்நாட்டு மக்கள் தனிப்பட்ட முறையில் ஆயுதங்களை சேகரித்து வருகின்றனர். இது கடாபி தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

No comments:

Post a Comment