Wednesday 22 June 2011

உ.பி.,யில் கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரிப்பு :மாநில அரசுக்கு மனித உரிமை கமிஷன் நோட்டீஸ்

லக்னோ : உத்தர பிரதேசத்தில், கடந்த இரு நாட்களுக்குள், ஐந்து பெண்கள் கற்பழிக்கப்பட்டு, அவர்களில் ஒருவர் கொலையும் செய்யப்பட்ட கொடூர சம்பவங்களை அடுத்து, இப்பிரச்னையைத் தானே முன்வந்து விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ள மாநில மனித உரிமை கமிஷன், இதுகுறித்து, மாநில அரசுக்கும், போலீசுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


உ.பி.,யில், கடந்த வார இறுதியில் இரு நாட்களுக்குள், ஐந்து பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். இவர்களில் நான்கு பேர், 14 வயதில் இருந்து, 18 வயதுக்கு உட்பட்டவர்கள். ஒருவர், 35 வயதான விதவை. இரு குழந்தைகளுக்குத் தாயான இந்த விதவைப் பெண்ணை கற்பழித்த மூன்று இளைஞர்கள், அவரைத் தீ வைத்துக் கொளுத்தி விட்டனர். மற்றொரு கற்பழிப்பில் சம்பந்தப்பட்ட பெண் உடன்பட மறுத்ததால், அவரது கண் குருடாக்கப்பட்டது.


இந்த கொடூர சம்பவங்கள், பத்திரிகைகளில் வெளியானதை அடுத்து, மாநில மனித உரிமை கமிஷன் உறுப்பினர் நீதிபதி விஷ்ணு சகாய், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடந்த இச்சம்பவங்கள் மீது, மாநில அரசும் போலீசும் என்ன நடவடிக்கை எடுத்திருக்கின்றன என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி, தலைமைச் செயலர், முதன்மைச் செயலர், உள்துறைச் செயலர், டி.ஜி.பி., சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் எஸ்.பி.,க்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதுகுறித்த அறிக்கையை, வரும் ஜூன் 28 க்குள் சமர்ப்பிக்கும்படி அவர் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment