Wednesday 22 June 2011

தமிழக மீனவர்கள் 23 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

ராமேசுவரம் : நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து செவ்வாய்க்கிழமை சிறையில் அடைத்தனர்.



ராமேசுவரத்தில் இருந்து ஜூன் 20-ம் தேதி சுமார் 730 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். இந்தப் படகுகள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, ஜூன் 20-ம் தேதி பிற்பகல் 3 மணியளவில் ராமேசுவரம், தங்கச்சிமடம் பகுதிகளைச் சேர்ந்த அம்புஜம், இருளாண்டி, பால்ராஜ், பொன்னழகு, ஞானசேகரன் ஆகியோருக்குச் சொந்தமான 5 படகுகளை இலங்கை கடற்படையினர் மடக்கிப் பிடித்து இலங்கை தலைமன்னாரில் உள்ள கடற்படை முகாமுக்குக் கொண்டு சென்றதாக செவ்வாய்க்கிழமை ராமேசுவரம் திரும்பிய மற்ற மீனவர்கள் தெரிவித்தனர்.


சிறை பிடிக்கப்பட்ட படகில் மீனவர்கள் விஜயன் (28), ஈஸ்வரன் (28), செந்தில் (27), சேகர் (45), அன்பழகன் (50), அழகேசன் (50), கணேசன் (50), ராமகிருஷ்ணன் (45), முத்துக்காளை (40), ராமசாமி (50), பால்ராஜ் (39), இசக்கிமுத்து (65), கல்யாணராமன் (40), முனியசாமி (45), மனோகரன் (55), முத்துவீரன் (30), முனியசாமி (27), ராஜு (45), மலைச்சாமி (55), சிந்தாதுரை (50), செல்வம் (45), பேரின்பம் (26), ஆரோக்கியம் (30) ஆகியோர் இருந்துள்ளனர்.


மீனவர்கள் 23 பேரையும் மன்னார் போலீஸôரிடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர் என்றும், மீனவர்கள் மீது போலீஸôர் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து சிறையில் அடைத்துள்ளனர் என்றும் ராமேசுவரம் மீனவர்கள் தெரிவித்தனர்.

மாவட்ட ஆட்சியர் நேரில் விசாரணை: ராமேசுவரத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த மாவட்ட ஆட்சியர் வி.அருண்ராய் மீனவர்கள் கைது செய்யப்பட்டது குறித்து அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டார்.

பின்னர் கைது செய்யப்பட்ட 23 மீனவர்களை விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமேசுவரம் மீனவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து தமிழக முதல்வரிடம் தெரிவித்துள்ளதாகவும், மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க தமிழக அரசு விரைவான நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் மீனவர்களிடம் தெரிவித்தார்.

தொடர் வேலைநிறுத்தம்: இந்த நிலையில் ராமேசுவரம் கடற்கரை அந்தோணியார் கோயில் முன் மீனவர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், சிறை பிடிக்கப்பட்ட 23 மீனவர்களையும், 5 படகுகளையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்தம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து ராமேசுவரத்தில் உள்ள 750 விசைப் படகுகளும் மீன் பிடிக்கச் செல்லாமல் கரையில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் சுமார் 5 ஆயிரம் மீனவர்கள் வேலையின்றி வீட்டில் முடங்கி உள்ளனர்.

இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்தால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண இலங்கை அரசு மற்றும் அந்த நாட்டு மீனவர்களிடம் பேச்சு நடத்த முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமேசுவரம் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.







No comments:

Post a Comment