Wednesday, 22 June 2011

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு வரும் 30ம் தேதி முதல் சென்னையில் கவுன்சிலிங்

சென்னை : "மருத்துவ பட்டப்படிப்புகளுக்கு பொது பிரிவு கவுன்சிலிங் அடுத்த மாதம் ஒன்றாம் தேதி துவங்கும். இந்த ஆண்டு, எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு விண்ணப்பித்தவர்களில் 66 பேர், அனைத்து முக்கிய பாடங்களிலும் 200க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர்' என, சுகாதாரத் துறை அமைச்சர் விஜய் கூறினார். எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., பட்டப்படிப்புகளுக்கு, 2011-12ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை விரைவில் நடைபெற உள்ளது. இப்படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான தர வரிசை பட்டியலை, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்வி இயக்குனரக வளாகத்தில், சுகாதாரத் துறை அமைச்சர் விஜய் நேற்று மாலை வெளியிட்டார்.




அதன்பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த ஆண்டு, எம்.பி.பி.எஸ்., -பி.டி.எஸ்., பட்டப்படிப்பில் சேர, மொத்தம் 20 ஆயிரத்து 769 பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் 7,478 பேர் ஆண்கள். 13 ஆயிரத்து 291 பேர் பெண்கள். இவற்றில், 20 ஆயிரத்து 123 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. விண்ணப்பதாரர்களில், ஸ்டேட் போர்டு பாடத்தில் பயின்றவர்கள் 19 ஆயிரத்து 636 பேர். சி.பி.எஸ்.சி., பாடத்திட்டத்தில் படித்தவர்கள் 401. குடும்பத்தில் முதல் பட்டதாரி விண்ணப்பதாரர்கள் 7,565 பேர். விண்ணப்பதாரர்களில் 34 பேர், கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களிலும், 32 பேர், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களிலும், 200க்கு 200 மதிப்பெண் எடுத்துள்ளனர். எனவே இவர்களுக்கு, பிறந்த தேதி மூப்பு அடிப்படையில் தரவரிசை பட்டியலில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சிவரஞ்சனி - ராசிபுரம், தக்ஷினி - நாமக்கல், சுருதி கணேஷ் - சென்னை ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர். ஓ.சி., பிரிவில் இருவர், பி.சி., பிரிவில் ஏழு பேர் மற்றும் எம்.பி.சி.,யில் ஒருவர், முதல் பத்து இடங்களை பிடித்துள்ளனர். இவர்கள் ஐந்து பேர் ஆண்கள். விண்ணப்பதாரர்கள் தங்கள் தரவரிசையை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்த ஆண்டுக்கான, "கட்-ஆப்' மதிப்பெண் முதல்கட்ட கவுன்சிலிங்கிற்கு பின் அறிவிக்கப்படும்.

தமிழகத்தில் உள்ள 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,653 இடங்கள், அரசு பல் மருத்துவக் கல்லூரி உள்ள 85 இடங்கள் மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கும், வரும் 30ம் தேதி கவுன்சிலிங் துவங்குகிறது. சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகள் ஆகியவற்றில் உள்ள அரசு ஒதுக்கீடு இடங்கள், கவுன்சிலிங்கிற்கு முன், இறுதி செய்யப்படும்.

சுதந்திர போராட்ட வீரர்களின் பிள்ளைகள், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், ராணுவ வீரர்களின் பிள்ளைகள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கு, வரும் 30ம் தேதி கவுன்சிலிங் நடைபெறும். பொதுப் பிரிவுக்கு அடுத்த மாதம் ஒன்றாம் தேதி துவங்கி, ஐந்து நாட்கள் கவுன்சிலிங் நடைபெறும். சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் உள்ள மருத்துவ படிப்பு இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி மறுத்துவிட்டது. இக்கல்லூரிகளின் உள்கட்டமைப்பு, மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட குறைகளை சரிசெய்து, அடுத்த கல்வியாண்டில், கூடுதல் இடங்களுக்கு அனுமதிபெற முயற்சிப்போம்.

திருவாரூர் மற்றும் தேனி அரசு மருத்துவக் கல்லூரிகளில், புதிய மாணவர் சேர்க்கைக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி மறுத்துள்ளது. கவுன்சிலிங் துவங்குவதற்கு முன், இக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி பெற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கான மருத்துவக் கல்வி கட்டணம், ஒரு வாரத்திற்குள் இறுதி செய்யப்படும். மருத்துவமனை வசதி, போதுமான மருத்துவர்கள் உள்ளிட்ட பல விஷயங்கள் உள்ளதால், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் அளவிற்கு மருத்துவக் கல்லூரிகளை துவங்க முடியாது.இவ்வாறு அமைச்சர் விஜய் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், சுகாதாரத் துறை செயலர் கிரிஜா வைத்தியநாதன், மருத்துவக் கல்லூரி இயக்குனர் வம்சதாரா, கூடுதல் மருத்துவக் கல்லூரி இயக்குனர் ஷீலா கிரேஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

"கட்-ஆப்' எவ்வளவு?

கடந்த 2010-11 கல்வியாண்டில் மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான, "கட்-ஆப்' விவரம்:பிரிவு அரசு கல்லூரிகள்(மருத்துவம்) சுயநிதி கல்லூரிகள்(மருத்துவம்) அரசு பல் மருத்துவக் கல்லூரி ஓ.சி., 197.50 194.25 193.75 பி.சி., 195.50 193.00 192.75 பி.சி.எம்., 194.00 192.00 192.50 எம்.பி.சி., 193.25 190.50 189.75 எஸ்.சி., 188.50 183.00 181.50 எஸ்.சி.ஏ., 184.75 173.50 174.75 எஸ்.டி., 179.50 151.25 179.25

No comments:

Post a Comment